அச்சு எந்திரத்தின் ஆட்சி உலகில் இன்னும் முடியாத நிலையில் அச்சு இதழ் ஒன்றை தமிழில் கொனர்வது எவ்வளவு இயலாமைகளை உள்ளடக்கியது என்பது இதழாழர்களுக்கே தெரியும். இணைய தள இதழ் ஒன்றை – வலைப்பூவிதழ் ஒன்றை அச்சு எந்திரம் தரும் தரத்துடனும், அளவு நேர்த்தியுடனும், உள்ளக் கிளர்ச்சியுடனும் கொணர முடியுமா என்ற அவாவின் விளைவாகவே ‘றெக்கை’ உருவானது.
நம்மில் பாதி பேர் நீண்ட நேரம் படிக்கும் பழக்கம் உடையவர்கள். புத்தகங்களை வைத்துக்கொண்டு தினமும் மணிக்கணக்கில் படித்து வாழ்ந்து வருபவர்கள். இப்பழக்கம் நம் உணர்வுகளை விரிவடையச் செய்யும் அனுபவம். ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் படித்து அறியும் வழி முறைக்கு அடுத்த வழி முறையான பார்த்து அறியும் காட்சி அறிவு வழிமுறை வந்து விட்டது. இணைய தளம் இதனை சாத்தியமாக்கியிருக்கிறது. இனி வரும் தலை முறையினர் புத்தகங்களை, இதழ்களை, தாளிகைகளை படித்து அறிவை பெறுவதை விட இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்வதிலேயே அதிக நேரத்தை செலவிடுவர்.
இந்த மாறி வரும் வழிமுறைக்கு நாமும் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். புதிய வழி முறையில் அறிவு தேடலை பழைய வழிமுறைக்கு சற்றும் குறைவில்லாமல் சாத்தியமாக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு ஓர் அச்சு இதழின் அனைத்து அம்சங்களோடும் இந்த வலைப்பூவிதழை வழங்க வேண்டும் என்பதே என் அவா.
இன்றைய உலகில் வலைப்பூவிதழ்கள் இணையதளங்களை விட எண்ணிக்கையில் மிகுதி பட்டு வருவதாக செய்திகள் கூறினாலும் வலைப்பூ என்றால் தனி நபர் நடத்துவது, ஒரு குறிப்பிட்ட வகைச் செய்திகளை மட்டுமே தருவது, குறுகிய அளவில் கருத்துக்களை தெரிவிப்பது, தொடர்புகளை தேடிப் பிடிக்கச்சொல்லி துண்டித்து விடுவது, நீரோடையென நீண்ட கருத்தோட்டங்களுக்கு இடமில்லாதது போன்ற இணையதளத்திற்கே உரிய தன்மைகளுடன் உள்ளது. இருப்பினும் காட்சி அறிவை முழுமையாக பயன்படுத்தினால் இக்குறைகளை களைய முடியும். ஒலி, ஓளி அனுபவங்களை மிகுதியாக சேர்ப்பதன் மூலம் இணையதள / வலைப்பூ அனுபத்தை அச்சு எழுத்து அனுபவத்திற்கு நிகராக கொணர முடியும்.
வலைப்பூவின் பல தன்மைகளை ‘றெக்கை’ கொண்டிருப்பினும் அறிவைப்பெறும் அனுபவத்தை முழுமையாக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். ஒலித்தொடர், ஒளித்தொடர் வடிவங்களையும் குறுகிய எதிர் காலத்தில் இணைக்கவிருக்கிறோம். இவ்வாறு வழமையான இதழியலை வலைப்பூவில் வைத்து பரிமாறும் ஒரு முயற்ச்சியாக ‘றெக்கை’ உருவாகியிருக்கிறது.
‘றெக்கை’யின் பக்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செதுக்கப்பட்டிருக்கின்றன. ‘அம்பல மேடை’ தலையங்கப் பக்கமாகும். ‘தமிழ் வலைக்குடி’ இன்றைய இணைய தமிழ் உலகினை வெளிப்படுத்துவதாக அமையும். ‘தோட்டம்’ ‘றெக்கை’யை போன்ற பிற தமிழ் வலைப்பூக்களை அறிமுகபடுத்தும். ‘பறவைப் பார்வை’ முதன்மைச் செய்திகளை சுருக்கி தரும். ‘என்னைப் பற்றி’ ‘றெக்கை’யை உருவாக்கி அறிமுகப் படுத்தும் என்னை பற்றியது. மேலும் ‘றெக்கை’யின் புதிய வரவுகள் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், திரைமுகம், ஓவியம், ஒளிதொகுப்பு, புகைப்படம், செய்திகள் மற்றும் படக்கற்றகள் என வழமையான இதழ் போல விரிந்த படி செல்லும்.
உலகத்தமிழர் சமுதாயம் என்பதற்கு தமிழகமே நடுக்களனாக விளங்கி வருகிறது. தமிழகத்திலோ எல்லாமே வழக்கம் போல பிரிந்து கிடக்கிறது. சமூக, அரசியல், பொருளாதாரத்தின் கட்டுக் கோப்பாக கலை இலக்கியம், சாதி, மதம், இனப் பாகு பாடுகள் விளங்கினாலும் இவற்றின் பிரிவுகளே தமிழ்ச் சிந்தனையை இன்று தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றினூடாக கடந்த நூற்றாண்டின் இறுதி கால் பகுதியில் ஏற்பட்ட மாறுதல்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நம் மீது அழுத்தமான தாக்கஙளை ஏற்படுத்தி வருவதை யாரும் மறுக்க முடியாது.
உலகெங்கும் ஒரு துருவ அரசியல் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுவதும், அதன் துணைப் பொருளான உலகமயமாக்கல் என்பதும் நம்மை தாக்க முடியாத அளவிற்கு நாம் வலுவானவர்களாக நாம் இருக்க வில்லை. அதிலும் இப்போக்கினை சோவியத்தின் வீழ்ச்சியிலிருந்தும், பிற நாடுகளில் சோசலிசத்தின் வடிவ மாறுதல்களிலிருந்தும் நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம் என்பதே உலக மயமாக்கல் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்கும்.
இன்றைய இந்தியத்தின் அன்றாட வாழ்வாதாரப் போராட்டங்களும் அவறிற்கு ஊடாக சாதி மத இனச் சிக்கல்களும் விடுவிக்கப் படாத புதிர்களாக தொடர்ந்து கொணிருக்கின்றன. இவற்றினை தமிழகத்தில் தீர்மானிக்கும் வல்லமைகள் குறித்து ‘றெக்கை’ தீவிரமாக அலசும் என்பதில் அய்யமில்லை. எழுந்து வரும் புதிய சிந்தனைப் போக்குகள் விளைவித்த செயல்பாடுகள் என்ன வகை எதிர் காலத்தை நம் முன் நிறுத்தும் என்று எண்ணிப் பார்க்கும் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. இவற்றில் எவ் எதற்கு அழுத்தம் தருவது என்பதை ‘றெக்கை’யின் சொல்லாடல்களில் காணலாம்.
‘றெக்கை’யின் சொல்லாடல்கள் எல்லா வடிவங்ளையும் – கதை, கட்டுரை, கவிதை, ஒலி, ஒளித் தொகுப்பு, திரை முதலியவற்றை தழுவி விரியும். ‘றெக்கை’யை படிக்குனர்கள் ‘றெக்கை’ விரிய தங்கள் சொந்த எழுத்து வெளிச்சத்தை பரப்ப வேண்டியதும் இன்றியமையாதது. ‘றெக்கை’ இலட்ச்சக்கணக்கான் தமிழ் படிக்குனர்களை சென்றடையும் என்பதில் அய்யமில்லை. அந்த அளவு மறு மொழி இடுகைகளும் எதிர் பார்க்கப் படுகிறது.
உங்கள்
நிலவரசு கண்ணன்




