தமிழரின் குரலை டெல்லியில் ஒலிக்கும் முதல்வரின் குரலை பயன் (பலப்) படுத்துவோம்

ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாட்டை நடுவணரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகவும், மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்படுவதை சீனா மற்றும் பாக்கிஸ்தான் எல்லையோரங்களில் தாக்கும்போது எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறதோ அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறிய முதல்வர் ஜெயலலிதா இன்று அதே குரலை டெல்லியில் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்திலேயே அனைத்து முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர் முன்னிலையில் இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். “காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் மக்களும், இந்நாட்டின் குடிமக்களே. நியாயமான கோரிக்கைகளைக் கூட தராமல், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன், மாநில அரசுகளை மத்திய அரசு நடத்துகிறது. இந்த லட்சணத்தில், தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் ஆண்டுதோறும் நடத்துவது என்பது ஒரு சடங்கு தானே தவிர, இதனால் பயன் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை” என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கைகள் எல்லாமே, மாநில அரசின் சுயாட்சி கொள்கை மீது நடத்தப்படும் தாக்குதல்களாகும். மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய மின்சாரம் உள்ளிட்ட வசதிகளையும் அளிப்பதில்லை. மின் உற்பத்தியையும் செய்வதில்லை. தமிழகத்தில் துவக்கப்படும் என வாக்குறுதி அளித்த அல்ட்ரா மெகாபவர் மின் உற்பத்தி நிலையம், வெறும் ஏட்டளவிலேயே உள்ளது. கிடப்பில் கிடக்கும் அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆர்வம், மத்திய அரசுக்கு வரவில்லை. 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழக நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து ஏதும் இல்லை.

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா?

தமிழக மீனவர்கள் மீது, இலங்கை ராணுவத்தினர், தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை அடித்து துன்புறுத்துகின்றனர். சில சமயங்களில் கொல்லவும் செய்கின்றனர். இலங்கை ராணுவத்தின் அட்டகாசங்களை தடுத்து நிறுத்துங்கள் என, மத்திய அரசிடம் தமிழக அரசு, பல முறை மன்றாடி கேட்டுக் கொண்டுள்ளது.ஆனாலும், பலனில்லை. தமிழக மீனவர்களின் உயிர், உடைமைகளை காப்பாற்ற, மத்திய அரசு தவறிவிட்டது. தமிழக மீனவர்கள், மத்திய அரசின் பார்வையில், ஒரு பொருட்டாகவே தென்படுவதில்லை. தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள் தான் என்பதை, மத்திய அரசு நினைக்க மறுக்கிறது.மீனவர் பிரச்னைக்காக பல முறை குரல் கொடுத்தும், பாராமுகமாகவும், பொருத்தமில்லாத அணுகுமுறையையும் மத்திய அரசு கையாண்டு வருகிறது. மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பது, இந்தியாவின் மீது நடத்தப்படும் தாக்குதல். இதற்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. தன் பொறுப்புகளை மத்திய அரசு இவ்விஷயத்தில் தட்டிக் கழிக்கிறது என்றும் முதல்வர் கூற கூற கல்லுளிமங்கன் மன்மோகன்சிங் தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்பது போல மௌனமாக இருந்திருக்கிறார்.

டெல்லியில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள உரிமை பறிப்புக்கள் போன்ற நிலையே 30 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் போராளிகள் உருவாக வழிவகுத்தது என்பதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும். தமிழ் தேசிய வாதிகளுக்கு முதல்வரின் உரை டானிக் போல வந்துள்ளது. இதனை – இந்த நிலைமையை – தமிழ் தேசிய வாதிகள் பயன்படுத்திக்கொண்டு அடுத்தக் கட்ட போராட்டங்களை மத்திய அரசுக்கெதிராக முன்னெடுத்தால் ஒரு விடுதலைப்போராட்டம் எதிர்காலத்தில் நிச்சயம் உண்டு. அது பல வரலாற்றுத் திருப்புமுனைகளை ஏற்படுத்துவதாக அமையும்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.