உலகப் பெண்கள் நாள் வந்து கதவைத் தட்டும் வேளையில் அனைத்து தமிழர்களும் சிந்திக்க வேண்டிய விடயம் யாதெனில், இந்த ஆண்டே தமிழர்களின் தேசியத் தாயார் தனது பெரும் ஈகை வாழ்வினைத் துறந்து இம்மண்ணை விட்டகன்றார் என்பதே. ஒரு பெண்ணாக வாழ்ந்து அவர் பெண்களுக்கு செய்த – தம் மக்களின் விடுதலைக்கு செய்த பெரும் கொடை ஒரு தன்னிகரற்ற தலைவனை தன் வயிற்றில் சுமந்து இச்சமுதாயத்திற்கு வழங்கியது. எல்லா பெண்களாலும் இத்தகைய ஒரு ஈகையை செய்திட முடியாது எனினும் தேசியத் தாயார் போன்ற பெண்களின் வாழ்க்கையை படிப்பதன் மூலமும், அவர்தம் உறுதியைக் கடைப் பிடிப்பதன் மூலமும் எல்லா பெண்களும், எல்லா ஆண்களும் அவரது நிலைத்து நிற்கும் புகழ் வாழ்வில் பங்கு பற்றும் அருகதை உடையவராவோம்.
தேசியத் தாயாரின் ஈகையும் உறுதியும் வரலாறே மலைக்கக் கூடியவை. தலைவர்களை ஆளாக்கியது எல்லா தாய்மார்களும் செய்யக்கூடியதே. ஆனால் நம் தலைவன் தன் விடுதலை வழியில் சென்ற போதெல்லாம் அதற்கு தன் மானசீக ஆதரவை நல்கி, தலைவனின் தலைமையில் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த போது, திருச்சியில் தன் கணவரோடு வாழ்ந்து வந்த தேசியத் தாயார் சொன்ன சொற்கள் இன்னமும் எண்ணிப்பார்க்கத் தக்கவை: “அவன் நீதிக்கான வழியில்தான் செல்வான்….அவன் செல்லும் வழி சரியானதாகத்தான் இருக்கும்…”. என்ன ஒரு நம்பிக்கை – மகனிம் மீது மட்டுமல்ல, தன் வளர்ப்பு முறையின் மீது, தன் லட்சியத்தின் மீது, தன் மக்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற பேரவாவின் மீது! தாயாரின் இந்த வளர்ப்பு முறை, லட்சியம், விடுதலைப் பேரவாதானே தலைவனை ஆளாக்கிய வார்ப்புக்கள்.
‘நான் இனி வீட்டுக்கு பயன்படமாட்டேன்” என்று நீண்ட பயணம் செய்து தன்னை மறைவிடத்தில் சந்தித்த தந்தையிடம் கூறிய தலைவனால் ஈழ நிலப்பரப்பு விடுதலை பெற்று அங்கு புலிகளின் ஆட்சி அமையும் என்று அந்த தாயாருக்கு மனதில் பட்டிருக்குமோ!
இரு பெண்கள் ஒரு குழந்தைக்காக, அது தத்தம்து என்று கூறி மன்னன் முன் வழக்கு கொணர்கின்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் குழந்தை தனதே என்று வழக்குரைக்கின்றனர். மன்னனுக்கு எப்படி தீர்ப்பு கூறுவதென்றே தெரியவில்லை. குழந்தை யாருடையது? எப்படி சொல்வது? வாளை எடுத்தான் மன்னன். விச முற்பட்டான், இரண்டு பெண்களும் பாதி பாதி வெட்டுப்பட்ட குழந்தையை எடுத்துக்கொள்ளட்டும் என்று கூறி. அங்கே குழந்தையின் உண்மைத்தாய் பாய்ந்து தடுத்திட்டாள் அரசின் வாளினை. “மன்னா…, குழந்தையை அவளுக்கே கொடுத்து விடுங்கள், எனக்கு வேண்டாம்” என்றாள். மற்றொருத்தி கல் போல நின்று கொண்டிருந்தாள். ‘குழந்தையை அவளுக்கே கொடுங்கள்’ என்றவளே உண்மையான தாய் என்பது அரசனுக்கு புரிந்தது. உண்மைத் தாயிடமே குழந்தையை ஒப்படைத்தான் மன்னன்.
அப்படி ஒரு காலத்தேர்வு தமிழர்களின் தேசியத் தலைவருக்கும் அவரது தாயாருக்கும், காலம் சிரித்தது. தலைவனின் உயிர் இனி எதிரிக்கு என்றது தாயாரிடம். தன் மகன் இறப்பதில்லை என நினைத்தார் தாயார். எதிரிக்கா,உனக்கா…? காலத்தின் இந்தக் கொடூரக்கேள்விக்கு பதிலாக தாயர் தன் மகனை களத்திற்கே ஒப்படைத்தார். களத்தில் தானும் தன் கணவருடன் போய்ச் சேர்ந்தார். இறுதி வரை, தாயோடு தாயாக மக்களே தாய்க்கோழியாக தலைவனையும் உடனிருந்த தளபதிகளையும் பாதுகாத்து, தம் உயிர் சிந்தி அவர்களின் உயிரைப் பாதுகாத்து ஒரு வரலாற்றை காப்பாற்றிய வியப்பை காலம் பார்த்தது, உலகம் பார்த்தது.
போர்க்களம் தோற்றது. போராட்டம் வென்றது.
தாய்க்கோழிகளைப்போல தலைமையை வாழவைத்த தாயாரும் ஈழ மக்களும் போர்க்கள தோல்விக்கு பின் அடைந்த துன்பங்கள் வரலாறு காணாதவை. ஆடுமாடுகளைப் போல நடத்தப்பட்ட ஈழத்தாய்மார் கூட்டம் தாயாரின் உள்ளக்கதிர்வீச்சால் தன்னை இன்னமும் நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது. எதிரிப்படை தாயாரையும் தந்தையாரையும் கைது செய்து சித்திர வதை செய்த போதும் ஒரு சிறிதும் விட்டுக்கொடுக்க வில்லையே. எதிரியின் சிறைக்கொட்டிலில் தன்னுயிரை ஈந்த தந்தையாரை இழந்த பின்னும் தேசியத் தாயார் ஒரு சிறிதும் தளர்ந்து விடவில்லையே. ஒரு மாபெரும் வரலாற்றுத் தலைவனின் தாயார் தனது இறுதிக்காலத்தில் இலங்கை அரசினாலும், தமிழக அரசின் துரோகிகளாலும், இந்திய அரசாலும் மட்ட ரகமாக அவமதிக்கப்பட்ட போதும், ஒரு சிறிதும் பணிந்து விட வில்லையே. இந்த மாறாத ஆதரவு அல்லவா இனியொரு போராட்டம் இருக்கிறது என்பதை உணர்த்தி நிற்கிறது.
தாயாரிடமிருந்து ஈழத்தாய்மார் பெற்ற வியத்தகு ஆற்றல் அன்றே திலீபன் இறப்பின் போது ஆர்பரித்த ‘அன்னையர் முன்னணி’யைச் சேர்ந்த தாய்மாரிகளிடம் வெளிப்பட்டது. இன்று இன்னமும் ஈழத்தாய்மார்கள் காத்துக் கிடக்கின்றனர்….தங்கள் வீட்டு மகன், தலைவன் என்று வருவான் என.
இந்த எண்ணமும், இன்னமும் பல வடிவங்களில் தொடரும் போராட்டமும் அல்லவா தேசியத்தாயரின் வரலாற்றுப் பங்களிப்பாக விளங்கி லட்சக்கணக்கான ஈழத்தாய்மார்களை உறுதி குலையாமல் இருக்கச் செய்கிறது! பல லட்சக்கணக்கான ஈழ மக்களை, உலகத் தமிழர்களை ஒரு வரலாற்றுச் சந்திப்பில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது!! இந்த வகையிலேயே வேறு எந்தப் பெண்ணும் சாதிக்க முடியாததை தேசியத் தாயார் சாதித்துள்ளார். இந்த உலகப்பெண்கள் தினமான இன்று தேசியத் தாயாரின் காலப்பங்களிப்பை பரப்பும் நாளாக மாற்றுவதே உலகத்தமிழர்கள் தாயாரின், மற்றும் வீரத்தந்தையின் போராட்ட வாழ்வுக்கு செய்யும் மிகச் சிறந்த கைமாறாகும்.
உலகப் பெண்கள் தினத்தை தேசியத் தாயாரின் வழியில் ஈழ மகளிரின் விடுதலை தினமாக மாற்றுவோம். உலகத் தமிழர்களே ஒன்று படுங்கள்!
———————————————————-
ஈழதேசம்.கொம்முக்காக நிலவரசு கண்ணன்
Filed under: உலகத் தமிழர் களம்




