மற்றொரு பக்கம்: அண்ணா தழரின ஆளுமையா?

(அண்ணா நூற்றாண்டு நிறைவுக் கட்டுரை)

பேராசிரியர் அ. மார்க்ஸ் சிறிது காலத்திற்கு முன் “வேறெப்போதையும் விட இப்போதுதான் பார்ப்பனீயத்தை வலுவுடன் எதிர்த்து நிற்க வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார். ‘காலச்சுவடை’ப் பற்றிய விமரிசனத்தை முன் வைக்கும் போதே அவ்வாறு குறிப்பிட்டார். காலச்சுவடு அந்தளவுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது? பார்ப்பனீயத்தை கட்புலனாகா வகையில் தூக்கிப்பிடிப்பதுதான் காலச்சுவட்டின் வேலை. அ.மார்க்ஸுக்கு பதிலளித்து கட்டுரை தீட்டிய சுந்தரராமசாமியின் இளவலும் வாரிசுரிமை தவறாமல் காலச்சுவட்டின் ஆசிரியராக முடிச்சூட்டிக் கொண்ட சு. கண்ணன் அ. மார்க்ஸை மிகவும் கேவலமாக அக்கட்டுரையில் வர்ணித்திருந்தார்.

காலச்சுவடு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை சுருக்கமாக இவ்வாறு கூறலாம்: “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்”. ஆம்! தமிழரினக் கொள்கையை சாய்ப்பவர்கள் யார் என்றறிந்து அத்தகையவர்களை அறிவுலகவாசிகளாகக் காட்டுவதில் காலச்சுவடு வெற்றி பெற்றிருக்கிறது. முதலாவதாக ரவிக்குமாரைச் சொல்லலாம். தீவிர பெரியாரிய எதிர்ப்பு, பிற்படுத்தப்பட்ட ஜாதியினரே தலித்துக்களின் எதிரிகள் என்று நிரூபிப்பது, பார்ப்பனர்களை நட்பு சக்தியாக வருணிப்பது, தமிழ்தேசியத்தை கிண்டலடிப்பது ஆகியன ரவிக்குமாரின் அறிவுலகவாசத்தின் அடையாளங்கள். மாயாவதி முதல்வரானவுடன் காலச்சுவட்டில் ரவிக்குமார் எழுதிய கட்டுரையில் இதை ஒருவர் தெளிவாக்கக் காணலாம். கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா தொடங்கியது. திராவிட இயக்க இதழ்களை விட அண்ணாவை மிகச் சிறப்பாக புகழ்ந்து தள்ளியது காலச்சுவடு. தொடர்ந்தும் அண்ணாவை தமிழரினத்தின் தலைசிறந்த ஆளுமை என்று நிறுவ படாதபாடு பட்டு வருகிறது காலச்சுவடு. ‘அதனை அவன்கண் விடல்’ என்பதற்கேற்றவாறு அந்த வேலையை மலர்மன்னனிடம் விட்டிருக்கிறது காலச்சுவடு தன் ஜனவரி 2009 இதழில்.

அண்ணாவுடன் சிறிது காலம் இருக்கும் வாய்ப்பு பெற்றவரும், அண்ணாவாலேயே மலர் மன்னன் என்று பெயர் சூட்டப்பட்டவருமான மலர்மன்னன் காலச்சுவட்டில் வெளியாகும் கட்டுரை திராவிட இயக்க ஏடுகளில் வழக்கமாக வருவது போன்று வெற்று சொற்களின் ஆர்ப்பாட்டமாக இருக்காது என்று கூறி திராவிட இயக்கத்தையும் காலச்சுவட்டையும் ஒருசேர அடையாளப்படுத்தி விடுகிறார். ‘கம்பரசம்’ போன்ற அண்ணாவின் இலக்கிய ஆய்வுகள் வெற்று சொற்களின் ஆர்ப்பாட்டம் மட்டுமல்ல, அதனை அண்ணா இளமை வேகத்தில் எழுதித் தள்ளினார் என்று மலர்மன்னன் கூறுவது அண்ணாவைப் பற்றிய உண்மை வரலாற்றின் பின்னணியில் பார்க்கையில் சரியாகவேப் படுகிறது. ஜனவரி2009 மாத காலச்சுவடு இதழில் ‘அறியப்பட வேண்டிய அண்ணா’ என்ற தலைப்பில் மலர்மன்னன் எழுதியுள்ள கட்டுரையில் “வெள்ளையர் ஏகாதிபத்தியம் அகல்வது முதல் கட்டம், அடுத்த கட்டம் வடவர் ஏகாதிபத்தியம் நீங்குவது” என்று அண்ணா கூறியது தமது கட்சியின் கொள்கையான திராவிட நாடு கோரிக்கையை ஒரேயடியாகக் கைகழுவி விட மனமில்லாமல் அண்ணா கூறியது என உரைக்கப்படுகிறது.

1962-ல் அல்ல, 1945-லேயே அண்ணா திராவிட நாடு கோரிக்கையை கைகழுவி விட்டார் என்பது இங்கு வெளியாகும் தகவல். பின்னர் 1949-ல் புதுக் கட்சி தொடங்கிய போது வேண்டுமென்றே திராவிடர் முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டாமல் திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டியது, மலர்மன்னன் கூறுவதுபோல் ஒரு குறிப்பிட்ட இனத்தை சுட்டுவதுபோல் அமைந்து விடாமல் (இன்றைக்கு தழரினம்) ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை அடையாளப்படுத்துவதுபோல் அமையாமல் (இன்றைக்கு தமிழ்நாடு) அண்ணாவின் சுயமரியாதை விடுதலைக் கொள்கைகள் ‘படிநிலை’ வளர்ச்சி பெற்று ‘இந்திய தேசியத்’தோடு ஒன்று கலந்ததற்கு அடித்தளமாக அமைந்ததாகக் கூறலாம்.

இந்த இடத்தில் காலச்சுவட்டின் கூரம்பு நேராக குடிமியிலிருந்து பாய்கிறது. ‘கடவுளைக் கற்பித்தவன் அயோக்கியன், கடவுளை நம்புகிறவன் முட்டாள்’ என்ற பெரியாரின் தாரக மந்திரம் தமது கட்சியில் பரப்பப்பட்டால் தாங்கள் இங்கிதமற்றவர்கள் என்ற முத்திரை விழுந்து விடுமோ என்றஞ்சிய அண்ணா ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கடவுட் கொள்கையை முன்னிலைப் படுத்துகிறார். அண்ணா ‘ஆரியம்’ என்று குறிப்பிட்டதும் ‘சனாதனம்’ என்ற சொல்லுக்கு நிகரான ஒரு பொத்தாம் பொதுவான சொலாகவே கருதப்படுகிறது. இன்று கருணாநிதியும் எவ்வெப்போது ஜெயலலிதா தன்னை தாக்கி அறிக்கை வெளியிடுவாரோ அவ்வப்போது ‘ஆரியம்’ தலை விரித்தாடுவதாக ரசனையுடன் தீட்டியதை அறியலாம். மற்ற இடங்களில், நிகழ்சிகளில், ஊடக வெளிப்பாட்டில் ஆரியக்கூத்துக்களுக்கு அவரும், அவரது நிறுவனங்களும் துணைபோவதையும் அறியலாம். காலச்சுவடு இங்கே கட்புலனாகா வகையில், அண்ணா பார்ப்பனர்களை அரவணைத்தை எண்ணி மகிழ்கிறது – மலர்மன்னன் மூலம். அம்மட்டன்று ஆரிய வெறியர் ‘சோ’ பார்ப்பனரையும் அண்ணா தம்கட்சியில் இணைத்துக் கொள்ள முயன்றார் என்பதை மலர்மன்னன் வெளிப்படுத்தியிருப்பது அண்ணாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஒருகோடித் தமிழர்களின் முகத்தில் கரிபூசி விடுகிறது. அண்ணாவிற்கும் பார்ப்பனர்களுக்கும் இருந்த ஆழ்ந்த நட்புறவு தற்செயலானதல்ல. 1962-ல் தேர்தலில் தோல்வியடைந்த அண்ணா பெங்களூருவில் ஜெயநகரில் தனது பார்ப்பன நண்பர் புட்டாசாமியுடன் தங்கியிருந்தமையும், சரவணபெலகோலாவில் கோமதீஸ்வரரின் சிலையைக் கண்டு ஆன்மிக வயப்பட்டதமையும் எடுத்துக் காட்டப்பட்டு அண்ணா எப்படி பெரியாரின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவர்; ஆன்மிக நிலைப்பாட்டுக்கு சார்பானவர் என்பதை காலச்சுவடு புரிய வைத்து அண்ணா தமிழரின ஆளுமையல்ல, இந்திய தேசிய ஆளுமை என்பதை நிரூபித்து விடுகிறது.

பெரியாரால் நஞ்சென வெறுக்கப்பட்ட அண்ணா முதலமைச்சரன பின்பு அரசு அலுவலகங்களில் மாட்டியுள்ள கடவுட்படங்களையெல்லாம் எடுத்து விட ஆணை பிறப்பிக்குமாறு பெரியார் சொன்னதற்கு முகப்பார்வைக்காக அவ்வாறு ஆணை பிறப்பித்த அண்ணா, தனது தலைமைச் செயலாளர் (பார்ப்பன) சிவராம கிருட்டிணன் மூலம் ‘அது ஆணையல்ல, வெறும் சுற்றறிக்கைதான். அதைச் செயல்படுத்த வேண்டியதில்லை’ என்று கூறி பெரியாரின் முதுகில் குத்துகிறார். பெரியாரின் முதுகில் குத்தியது அண்ணாவுக்கு ஒரு பெரிய விடயமல்ல. 1962-ல் பிரிவினைத் தடைச் சட்டத்துக்கு பயந்து அதுவரை இடிமுழக்கமென முழங்கிய தனிநாட்டுக் கோரிக்கையை குழிதோண்டி புதைத்தும், 1965-ல் பலநூறு தமிழர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வட இந்திய படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தான் முதலமைச்சரன பிறகும் நடுவராய விசாரணைக்கு ஆணையிடாமலும் ஒட்டுமொத்த தமிழர்களின் முதுகிலேயே குத்திய ‘தமிழர் தலைவர்’ அல்லவா அறிஞர் அண்ணா! பெரியாரின் முதுகில் குத்துவது அவருக்கு கொசுவை நசுக்குவது போலத்தான் இருந்திருக்கும். இதைத்தான் கருணாநிதி அண்மையில் ஒரு பேட்டியில் ‘கொள்கையைக் கைவிடவும் ஒரு துணிச்சல் வேண்டும்’ என்றார். கருணாநிதி சொல்வது அண்ணாவின் கொள்கையை குழிதோண்டி புதைக்கும் துணிச்சலைத்தான். அவ்வாறு செய்ததால்தானே இன்று கருனாநிதியின் குடும்பம் உலகமய சக்திகளின் ஒப்பற்ற சேவை மையமாக விளங்கி அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆளுக்கொரு அமைச்சர் பதவியுடன் வலம் வருகின்றனர். காலச்சுவடு அடையாளம் காட்டும் அண்ணா கற்பனையல்ல, நிஜம். பெரும்பாடு பட்டு, பிராமணர்களின் முன்னிலையையும், அண்ணா பிராமணர்களுக்கு பணிந்ததையும் மெய்சிலிர்க்க வெளிச்சம் போட்டு காட்டுகிறது காலச்சுவடு.

அண்ணா இந்திய தேசிய ஆளுமையாக இருந்தால் சிறுபான்மை மததினருக்கு எதிராகச் செயல்பட்டுத்தானே ஆக வேண்டும். கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவாலயம் எழுப்புவதற்கு அம்மாவட்டப் பெரும்பான்மையினராகிய கிறித்தவர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியபோது ஆட்சியிலிருந்த காங்கிரசு கட்சியே விட்டுக்கொடுத்து பின்வாங்கியது. அதனை மலர்மன்னன் காங்கிரசு கட்சியின் வாக்குவங்கி அணுகுமுறை என்று தூற்றி அண்ணா நடுவணரசிடம் அனுமதி கோரும் மனுவில் கையெழுத்திட்டார் என்கிறார். விவேகானந்தர் நினைவாலய வரவேற்புக்குழுவில் தனது கட்சியின் சட்டமன்றத் தலைவர் இரா. நெடுஞ்செழியனை இடம்பெறவும் செய்தார் என்று புல்லரிக்க எழுதும் மலர்மன்னன் இவ்விடத்தை சிறுபான்மை மதத்தினரை பழிதூற்றவும் பயன்படுத்துகிறார் காலச்சுவடில். தாயகத்தின் பாரம்பர்யக் கலாசாரத்திற்கு மாறான கலாசாரம் அங்கு ஏற்பட இடமளித்து விடக்கூடாது என்று அண்ணா விரும்பியதாகக் கூறுகிறார். குடுமியிலிருந்து புறப்பட்ட காலச்சுவட்டின் கூரம்பு நேராக வந்து குத்தி நிற்பது சிறுபான்மை மதத்தினரை என்பது புரிகிறது.

பெரியாரின் அடிப்படைக் கொள்கைகளுக்கு நேர்மாறாக நடந்து கொண்டது, பரப்பியது, முதன்மையாக கடவுள் மறுப்புக் கொள்கையை கைவிட்டது, அதைவிடக் கேவலமாக தனிநாட்டுக் கொள்கையை குழி தோண்டிப் புதைத்தது, மிக மிக கேவலமாக இந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்தோருக்கு நடுவராய விசாரணை அமைக்காமல் மறைத்தது, ராஜாஜியை பெரியாருக்கு மாற்றாக உரைத்தது, முன்னாள் முதல்வர் தமிழினக் கொலைகாரன் பக்தவத்சலத்திற்கு பெருமதிப்பளித்து நடந்து கொண்டது ஆகிய இவை யாவும் தற்செயலானவையா? ஈரோட்டுப் பெரியாரின் குருகுலத்தின் மொள்ளமாரித்தனத்தின் வெளிப்பாடல்லவா? பெரியாரின் குருகுலம் மொண்ணை என்பதால்தானே ‘குருகுலம்’ என்ற பிற்போக்குப் பொருள் வாய்ந்த சம்ஸ்கிருதச் சொல்லை அவர்கள தமதிடத்திற்கு சூட்டிக் கொண்டனர். அதற்கொரு தமிழ்ச் சொல் கிடைக்க வில்லையே! பாலக்காட்டுப் பார்ப்பனர் சிவராம கிருட்டிணன், ஐ.சி.எஸ். (அண்ணா முதல்வராயிருந்தபோது தலைமைச் செயலாளர்) “அண்ணா வாஸ் ஜெம் ஆப் அ மேன்” என்று புல்லரித்துக் கூறியதை காலச்சுவடு வெளியிட்டிருப்பது அண்ணாவைப் பற்றி மட்டுமல்ல, இன்று தமிழர் சமுதாயத்தின் சிந்தனையுலகச் சிங்க கர்ச்சனை காலச்சுவட்டின் ஆளுமையையும் படம்பிடித்துக் காட்டிவிடுகிறது.

“அண்ணா வாஸ் ஜெம் ஆப் அ மேன்” – இது அன்றே தமிழ்நாட்டில் வித்திடப்பட்ட மலயாளப் பார்ப்பனவர்க்கம் ‘தமிழர் தலைவரை’ ப்பற்றி கூறியது. இனி தமிழர்க்ள்தான் தமிழர் தலைவர்களைப் பற்றி கூற வேண்டும்.

நிலவரசு கண்ணன்

எதிரியை வீழ்த்த முதலில் அவனது சித்தாந்தத்தை வீழ்த்து!

uyirtheluvom

uyirtheluvom

நுணலும் தன் வாயால் கெடும்

நான் எழுதிய முந்தைய இருகட்டுரைகளுக்கும் பரவலான வரவேற்பும் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன (பார்க்க: http://www.nerudal.com/nerudal.8375.html). எதிர்த்து கருத்துக்கூறிய ஒருசிலரும் அறிக்கையாளர்களை விமர்சிக்க வேண்டாம் என்ற ரீதியில்தான் கூறியிருக்கிறார்களே தவிர, யாரும் தலைவர் இறந்து விட்டார் என்று அறிக்கையாளர்கள் தெரிவிப்பதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. அச்செய்தி யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது. 

செ. பத்மனாதன் கூறுவது போலவோ, வழுதி கூறுவது போலவே தலைவர் உண்மையிலேயே மறைவெய்தியிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாத தமிழர் சமுதாயத்திடம் அத்தகையதோர் கருத்தினை வலிந்து திணிப்பதாகவே உள்ளது.

அறிக்கையாளர்களின் பணி. செ. பத்மநாதன் சார்பில் கட்டுரை எழுதும் வழுதி 29–06–2009 அன்று வெளியிட்டுள்ள தனது ‘பின்னாலே சென்றவரின் முன்னாலேசென்றவரின் வழியில்…’ கட்டுரையின் இரண்டாம்பாகத்தில் தலைவரும் அவரது
மகளும் முடிவெய்தினர் என்ற கருத்தை ஆணித்தரமாக தெரிவித்திருக்கிறார். அதேகட்டுரையின் முதல் பாகத்தில் தலைவரின் குடும்பத்தில் அனைவருமே களச்சாவுஎய்திவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். தற்போது வெளியாகியிருக்கும் அக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் தலைவரும் அவரது மகளும் மட்டுமே களச்சாவு அடைந்திருப்பதாகவும் அவரது மனைவியும் இளையமகனும் இருக்குமிடம் தெரியவில்லை எனவும் அந்தர் பல்டி அடித்துள்ளார். (பார்க்க: வழுதியின் வரிகள் …வீட்டுக்கு ஒரு பிள்ளையைப் போராட்டத்திற்காகக் கேட்டவர், தனது பிள்ளைகளையும் அதே போராட்டத்திற்காக அனுப்பி சாகக் கொடுத்திருக்கின்றார்.
http://www.puthinam.com/full.php?2b3cSVG4a44w9Fg04dcrOmYdb0eHaHE34d31…)

ஏன் இந்த அந்தர் பல்டி? ஏனென்றால் இடையில் கடந்த வாரம் தலைவரின் மனைவி கனடாவில் இருப்பதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானதே காரணம். இந்த அந்தர் பல்டியே அறிக்கயாளர்கள் தமது யூகக்கருத்தினடிப்படையில் பொய்மையை ஏற்றுக்கொள்ள செய்து தமது தலைமையை திணிக்கின்றனர் என்பதை காட்டிக்கொடுத்து விடுகிறது. நுணலும் தன் வாயால் கெடும் என்பது இதனால் தானோ!

இரண்டாம் பாகக் கட்டுரையில் தனது முதற்கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தன்னை character assasination செய்வதாகக் கூறி தனது கருத்துக்களை நியாயப்படுத்தப்பார்க்கிறார். அவ்வாறு செய்யும் பணியை நாம் இங்கு வேறு சிலருக்கு விட்டு விடலாம். ஏனெனில் நாம் (குறிப்பாக நான்) அதற்கு தகுதியற்றவர்கள். என்னைப்பொறுத்த வரை திரு. வழுதியின் கருத்துக்களையும் தற்போதைய சூழல்கலையும் மட்டுமே அறிவேன். அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாதாகையால் நான் அவரை character assasination செய்ய முடியாது. இதே காரணத்தினால் திரு. வழுதி முதலானோர் முன்னாளைய புலிப் பிரமுகர்களுடன் நிகழ்த்தியிருப்பதாக எடுத்துக்காட்டும் சொல்லாடல்களையும் என்னால் மறுக்க முடியாது. அச்சொல்லாடல்கள் மூலம் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதை இயக்கத்தை சேர்ந்தோர் மட்டுமே மறுக்க முடியும். வேரு யாரும் மறுக்க முடியுமா என்று தெரியவில்லை. நக்கீரன் அதற்கு மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நான் இந்தக் கட்டுரையை எழுதுவதன் நோக்கம் அறிக்கையாளர்கள் உண்மையிலேயே இன்று இயக்கத்திற்கு தலைமை தாங்குபவர்களாக இருந்தால், அவ்வாறு தலைவராலும் பொட்டு அம்மானாலும் ஏற்கப்பட்டிருந்தால் அதை மறுக்க வேண்டும் என்பதல்ல. அவ்வாறு மறுப்பதை விட ஏற்றுக்கொள்வதே சிறந்தது. இருப்பினும் ஒரு தலைமையை ஏற்றுக்கொள்வதை விட, அது முன் வைக்கும் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் கடினமானது. எனவே திரு.வழுதி அவர்கள் தற்போது முன்வைக்கும் நிலைப்பாடுகளை யாரும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. சிங்கள ஆட்சியாளர்கள்தான் தமிழர்களுக்கு சிந்திப்பதற்கான உரிமையைத் தரவில்லை.வழுதி கூடவா அந்த உரிமையை தமிழர்களுக்கு வழங்கக்கூடாது! எனவே அவரது கருத்துக்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை விட விமர்சனக்கண்ணோட்டத்தோடு சொல்லாடலுக்கு உட்படுத்த வேண்டுமென்பதை அவர் ஏற்றுக்கொள்வார் என்றே நம்புகிறேன்.

எனது முந்தைய கட்டுரைக்கு பதிவான எதிர்ப்புகளில் ஒன்றிரண்டு புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறு விமர்சிக்க நான் யார் என்ற ரீதியில் கேட்டிருந்தனர். நான் தொடர்ந்து எனது கட்டுரைகளில் தமிழகத்தின் ஆக்கபூர்வ பங்களிப்பு ஈழத்தமிழர்களுக்கு இல்லமல் போனதும், தமிழகத்தில் போராட்டக்களம் இல்லாமல் போனதாலும், ஓட்டுக்கட்சித் தலைவர்களே ஈழ ஆதரவு குரல் எழுப்ப
முடிந்ததேயன்றி புரட்சிகர தலைமை ஒன்று இல்லாததுமே புலிகளின் வீழ்ச்சிக்கு மற்றெந்த காரணத்தையும் விட பெருங்காரணம் என்பதை வலியுறுத்தி வருகிறேன். அது மட்டுமின்றி சிங்கள மற்றும் இந்திய அரசுகளின் விஷமப்பரப்புரை தமிழ்நாட்டில் வலுவுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பார்கள். அதற்கு காரணம் என்னவென்பதை எவரும் எளிதில் யூகிக்கலாம். எனவே ஒரு பொறுப்புள்ள தமிழ்குடிமகன் என்ற ரீதியில் இதுபோன்ற பரப்புரைகளுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ள வேண்டிய கடமை எனக்குள்ளது.

இந்திய சிங்கள அரசுகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் பொய்பரப்புரைக்கு எடுத்துக்காட்டாக அண்மைக்காலத்தில் செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் தலைவர் இறந்து விட்டார் என்பதை மறைமுகமாக நிரூபிப்பது போல இருக்கின்றன. ஜூலை 1-ம் தேதி ஜூனியர் விகடன் வெளியிட்ட கட்டுரையில் களம் முழுவதும் மயக்ககுண்டு வீசப்பட்டு மக்கள் அனைவரும் மயங்கி வீழ்ந்து தலைவர் பிடிக்கப்பட்டு அவரது மகனோடு சித்திரவதைக்காளாகி கொல்லப்பட்டார் எனவும் விளம்பியிருந்தது. அந்தக்கட்டுரையை நுணுக்கமாக ஆராய்ந்தீர்களென்றால் தலைவரும் அவரது மகனும், பிற தளபதிகள் அனைவரும் மே 17-ம் தேதியன்றே பிடிபட்டுவிட்டனர் எனத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் நடேசன், புலித்தேவன் போன்றோர் எப்படி 18-ம் தேதி அதிகாலை களத்திலிருந்து வெள்ளைக்கொடியுடன் போனார்கள்? 17-ம் தேதியன்று களம் முழுதும் மயக்கக்குண்டு வீசப்பட்டிருந்தால் 18-ம் தேதி காலை வரை நடேசன், புலித்தேவன் மற்றும் சகாக்கள் எப்படி மயங்காமல் உயிருடன் இருந்தனர் என்பதை சிந்தித்தாலே அக்கட்டுரை பொய் பரப்புரை என்பதை தெரிந்துகொள்ளலாம்.

சொல்லாடல் மீதான சொல்லாடல்

வழுதியின் கட்டுரை மீதான் விமர்சனத்திற்கு போகுமுன் இன்று தமிழர் சொல்லாடல் அரங்கில் பரவலாக முன்வைக்கப்படும் ஒரு கருத்தை இங்கு திறனாய்வு செய்தல் இன்றியமையாதது. கடந்த ஜூன் 25-ம் தேதி இளந்தமிழர் இயக்கம் வெளியிட்ட ஓர் அவசர வேண்டுகோளில் தலைவரின் இறப்புச் செய்தியை ஒரு சொல்லாடல் களமாக்கி இந்திய, இலங்கை அரசுகள் தங்கள் கொடூரங்களை மறைத்து குளிர் காய்கின்றார்கள் என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

அத்தோடு புலிகள் அமைப்பின் மீது சேற்றை வாரி இறைக்கும் கட்டுரைகள் விமரிசனம் என்ற பெயரில் பல இணையதளங்களில் வெளியாவதையும், இவை இரண்டு அரசுகளின் சதி வலை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் வன்னி பெருமக்களின் அவலத்தை மறக்க ஏதுவாகிறது. உண்மையே.

ஆனால் இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். புலிகள் இயக்கத்தின் உள்ளக கலந்துரையாடல்கள் மற்றும் முடிவெடுக்கும் நிகழ்வுகள் முதலியவற்றை திறந்த வெளியில் சொல்லாடல்பொருளாக மாற்றிடல் கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே. ஆனால் நடந்த நிகழ்ச்சிகள் பற்றிய சொல்லாடல்கள் முழுவதையுமே தவிர்க்க வேண்டியதில்லை. மேலும் அணுகுமுறைகள் பற்றிய இன்றைய திறந்த சொல்லாடல்கள் இதன்முன் கண்டிராத ஒன்று. இதுவரை தமிழகத்தின் ஓட்டுக்கட்சித் தலைவர்களே ஈழத்தமிழர்களுக்காக பேசியது ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருந்தது. இப்போது ஒவ்வொருவர் கூறுவதும் வெளியாகிறது. மேலும் பலர் சொல்லாடல் நிகழ்த்துவதனால்தான் ஓட்டுக்கட்சி தலைவர்கள் மற்றும் இப்போது முளைத்திருக்கும் உள்ளிருந்து கழுத்தறுக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் போன்றோரை அடையாளம் காண முடிகிறது.

அதே வேளையில் வன்னி துயரத்திற்கு தீர்வு காண வேண்டியது வேறெதை விடவும் இன்று முன்னணி கடமை என்பதை மறுக்க முடியாது. முகாம்களில் முடக்கப்பட்டுள்ள மக்கள், இழந்தவர்களின் துயரம், இயல்பு வாழ்க்கை முதலியவை வேகமாக தீர்க்கப்படவேண்டும். இதையொட்டி தலைமை குறித்த சொல்லாடலை ஒதுக்க வேண்டியதில்லை. ஒன்றை மட்டும் பற்றி நிற்கும் போது மற்றொன்றிலிருந்து நாம் அன்னியப்படுத்தப் படுகிறோம். அண்மையில் விகடன் இதழில் வன்னிப்பேரவலத்தை  எதிர்கொள்ள தேவையான கட்டங்கள் காட்டப்பட்டிருந்தன. விகடன் ஏதோ கரிசனம் காரணமாக அச்செய்தியை வெளியிட்டுள்ளது என்று எண்ணியிருந்த போது விகடன் குழு இதழான ஜூனியர் விகடன் தன் பூணூல் புத்தியை காட்டியிருப்பதை அதன் ஜூலை 1-ம் தேதி இதழில் காணலாம். ஒரே ஊடக நிறுவனத்தின் ஒரு இதழில் வன்னிப்பேரவலம் வெளிச்சம் போட்டுக்காட்டப்படுகிறது. அதன் மற்றொரு இதழில்  தலைவர் இறந்துவிட்டார் என்று ‘நிரூபிக்க’ப்படுகிறது. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

அறிகையாளர்களாயினும் சரி, வேறெவராயினும் சரி வன்னிபேரவலத்தை சுட்டிக்காட்டும்போதே தலைவர் இறந்து விட்டார் என்பதை ‘உறுதிப்’படுத்தத் தவறுவதில்லை. அறிக்கையாளர்களுக்கு வேண்டுமானால் புலி அமைப்பின் மீதான தடையை நீக்கக்கோர இந்திய அரசை ‘தாஜா’ செய்ய வேண்டிய தேவை இருக்கலாம். ஆனால் சோழியன் குடுமிக்கு என்ன தேவை, தமிழக மக்களின் உணர்வுகளை இடித்து நொறுக்க வேண்டுமென்பதைத் தவிர? ஆகவே எந்த ஒன்றை முன்னிறுத்தினாலும் மற்ற ஒன்றை நாம் மறந்து விடுவோம் என்பது தெளிவு. எனவே இரண்டையும் சேர்த்தே சொல்லாடல் பொருளாக்க வேண்டும் என்பது என் கருத்து. வன்னிப்பேரவலத்திற்கான தீர்வைக்கோரும் அதே வேளையில் தலைவர் மற்றும் இயக்கத்தின் மீதான தமிழர்களின் உணர்வு சேதமாகவோ தளர்ந்து விடவோ விட்டு விடக்கூடாது. தலைமையின் மீதான உணர்வை தளர விட்டுவிட்டோமானால் பின்பு எந்த தீர்வும் கிடைக்காமலே போய் விடும்.

இங்கு கருத்து தளத்தில் எதிரியை எதிர்கொள்ளும் விதம் பற்றி லெனின் கூறியிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: “எதிரியை வீழ்த்த வேண்டுமானால் முதலில் அவனது சித்தாந்தத்தை வீழ்த்து!” என்றார் லெனின். தற்போது இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் சித்தாந்தமே ‘தலைவர் இறந்து விட்டார்’ என்பதும் ‘தலைமையின் கதை முடிந்து விட்டது’ என்பதுமே.

தலைமையைப் பற்றியோ, இயக்கத்தைப் பற்றியோ பேசவேண்டாம் என்பவர்கள் ஏதோ ஒரு வகையில் எதிரியின் சித்தாந்ததிற்கு உரம் சேர்ப்பவர்கள் ஆகிவிடுகிறார்கள். வன்னிப்பேரவலத்திற்காக வாதிடும் அதே வேளையில் எதிரியின் சித்தாந்தத்தை வீழ்த்த வேண்டிய கடமையும் நமக்குள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.

அந்த மூட நம்பிக்கை!

இந்தியாவின் சிற்றூரகங்களில் ஒரு மூட நம்பிக்கை உண்டு. ஒரு பெண்ணை ஒருவன் பாலியல் வன்முறைக்காளாக்கி விட்டால், அவனுக்கே அவளைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கமே அது. அவன் ஏற்கனவே கெட்டவன் என்பதால்தான் தகாத செயலில் ஈடுபட்டான். அத்தகைய அவனுக்கே அவளை மணம் முடித்துக்கொடுத்தால் ஓநாயின் வாயில் ஆட்டுக்குட்டியை கொடுத்தது போலாகி விடாதா? ஆனால் இந்திய பிற்போக்கு மரபானது ஒருவனால் கற்பழிக்கப்பட்டவள் இன்னொருவனால் மணமுடிக்க லாயக்கற்றவள் என்று சாதிய ரீதியாக மக்களை நம்ப வைத்திருக்கிறது. அதற்கு மேல் சிந்திக்கவோண்ணாத படி விலங்கு போட்டிருக்கிறது. இந்த மரபை முறியடிப்பதே புரட்சிகரம்.

இந்த எடுத்துக்காட்டை எதற்கு இங்கு குறிப்பிட்டேன் என்றால் ஈழத்தலைவர்களின் இந்தியா மீதான ‘காதலை’ வெளிச்சம் போட்டுக்காட்டத்தான். முன்பும் சரி, இன்றும் தாங்களே தலைவர்கள் என்று சொல்வோரும் சரி, இந்தியா செய்யாத துரோகங்களையெல்லாம் செய்த பின்னும், இந்தியா ‘யேசு ரட்சகன்’ ‘எங்கள் கதிமோட்சம்’ என்ற ரீதியிலேயே மன்றாடுகின்றனர். இன்றைய செ.பத்மநாதனின் குரலை அய்யப்படுவோர் உண்டு. முன்பு நடேசன் அவர்களும் இவ்வாறே கடைசி வரை கூறி வந்ததை எவரும் சொல்லாடலுக்குள்ளாக்கவில்லை.

இன்று (01 – 06 – 2009) கருணாநிதி தமிழக சட்டசபையில் என்ன பேசியிருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். கருணாநிதி கூறியிருப்பதாவது: “தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்த செய்ய வேண்டும். எனவே சிங்களவர்களுக்கு எதிராக பேசி அவர்களை கோபமடைய செய்யக் கூடாது. சிங்கள பௌத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்”.

சிங்களவன் காலை ஈழத்தமிழர்கள் நக்கிக்கொண்டு கிடக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டாரே கருணாநிதி!  இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு அனைத்துலக நீதி மன்றத்தில் வழக்கு தொடர அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் வலியுறுத்திய போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் மன்றத்திலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.  ஒருசில நாட்லளுக்கு முன்பு திருமாவளவன் விடுத்த அறிக்கையில், “ஈழத்தமிழர்களை அன்னை சோனியாதான் காப்பாற்ற வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அதனால்தானோ என்னவோ இணையதளங்களுக்கப்பால் தமிழகத்தின் அறிவுய்திகளும், புரட்சிகர குழுக்களும் விடுதலைப்புலிகளின் மீது இன்று சரமாரியான குற்றச் சாட்டுக்களை முன்வைத்தபடியே உள்ளனர். ஏனெனில் இன்று இந்திய அரசியல்வாதிகள் எடுக்கும் நிலைப்பாட்டிற்கும், தமிழக ஓட்டுக்கட்சி தலைவர்களின் போக்கிற்கும் புலிகளின் இந்தியாவை தாஜா செய்வது என்ற யுக்திக்கும் வேறுபாடு பெரிதாக ஒன்றும் கிடையாது. அதனால்தான் புலிகள் ஓட்டுக்கட்சித் தலைவர்களை நம்பியிருந்தனர் போலும்!.

அதே வேளையில் இலங்கை இனவாதிகளின் நிலைப்பாடு என்ன என்பதை இதோ ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க கூறுகிறார்: “அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசுமுழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுயகௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை” என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள இனவாதிகளின் இந்த நிலைப்பாட்டை இந்தியா ஒருபோதும் மாற்ற முடியாது. அப்படியே இந்தியா மாற்ற முனைந்தாலும் இலங்கை சீனாவின் பக்கம் ஒரேயடியாக சாயும் நிலை தோன்றும், எனவே இந்தியா இந்த விடயத்தில் தலையிடாது. ஆனால் நாங்கள் இந்தியாவின் நட்புசக்தி என்று காட்டிகொள்வது இந்திய கிராமங்களில் காணபடும் மேலே சுட்டிகாட்டிய மூடநம்பிக்கையைப் போல உள்ளது. இதுவரை இந்தியாவின் நட்பு சக்தியாகக் காட்டிகொண்டதன் மூலம் புலிகள் என்ன அடைந்தார்கள்? இனி அடையக் காத்திருக்கிறார்கள்? இங்கு புலிகளின் போர்த்தந்திரங்களையும், உத்திகளையும் (strategies and tactics) சொல்லாடலுக்குள்ளாக்குவதன் மூலமே புதிய தலைமுறை பாடம் கற்றுக்கொள்ள முடியும். (இவை நான்கு சுவர்களுக்குள் விவாதிக்கப்பட வேண்டியவை அல்ல. உலக அரசியலின் ஒருபகுதியே. புலித்தலைமையின் உயர்மட்ட சொல்லாடல்கள், முடிவுகள் மட்டுமே நான்கு சுவர்களுக்குள் பேசப்பட வேண்டியவை).

திறனாய்வின் திறனாய்வு

நடந்து முடிந்த நான்காவது ஈழப்போரில் மாபெரும் இனப்படுகொலை பலநாடுகளால் நிறைவேற்றப்பட்டு விடுதலைப்புலிகளுக்கு பெரும் பின் தங்கல் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது. இதுவரைப் போராடி பல வெற்றிகள் ஈட்டி தமிழீழத்திற்கான ஆளுகைக் கட்டுகோப்பையும் உருவாக்கிய புலிகளின் மீது பலதரப்பினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் வைப்பது இயல்பே. தமிழகத்தைப் பொறுத்தவரை புலிகளின் வீழ்ச்சி தொடங்கியவுடன் முதலில் குற்றச்சாட்டுக்களை அடுக்கத்தொடங்கியவர் கருணாநிதி. புலிகள் சகோதர யுத்தம் நடத்தியதாகவும், தவறான முடிவுகளை எடுத்ததாகவும் திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருந்தார் கருணாநிதி. வீழ்ச்சிப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்த அவர்கள் பக்கம் தமிழகமக்களின் கரிசனம் சாய்ந்துவிடுவதை தடுத்து தனது சுயநல அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி பாதுகாத்துக்கொள்ள கருணாநிதி அவ்வாறு கூறினார்.

முல்லைத்தீவு முழுவதையும் புலிகள் இழந்தபின்னர் இன்று பல ஆய்வாளர்களும் அறுவுய்திகளும், அமைப்புக்களும், புரட்சிகர குழுக்களும் புலிகளின் தவறுகளை தொடர்ச்சியாக கண்டுபிடித்து வெளியிட்டபடி உள்ளனர். இவை இணையதள விமர்சனக்களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களை அடைந்த வண்ணம் உள்ளன. தமிழகத்தின் இடதுசாரி அறிவுய்தியாகவும் சிறந்த மனித உரிமை காப்பாளராகவும் கருதப்படும் பேராசிரியர் அ. மார்க்ஸ் கூறும் குற்றச்சாட்டுக்களை கவனிக்க வேண்டும். ‘தீராநதி’ ஜூன் 2009 மாத இதழில் ‘புலிகள் செய்த கடைசித் தவறு’ என்ற அவரது கட்டுரையில் தேர்தல் நெருங்க நெருங்க தமிழக ஈழ ஆதரவாளர்களிடையே ஜெயலலிதா அணிக்கு சாதகமான ஆதரவுப் போக்கு தோண்றியதை புலிகளின் விருப்பத்தின் படி நடந்ததாகவும் தமிழக அரசியலில் புலிகள் தலையிடும் நிலையை எடுத்தார்கள் என்றும் கூறுகிறார் அ. மார்க்ஸ். இதைவிட மேலாக தேர்தல் நேரத்தில் பிரபாகரனின் குரலில் தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று வதந்திகள் உலவியதாக கூறுகிறார் அ. மார்க்ஸ். இது யாருமே கேள்விப்படாத ஒன்று.

அ. மார்க்ஸ் தவிர புதிய ஜனநாயக  புரட்சிக் குழுவினர் (மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர ஜனநாயக முன்னணி போன்றன) புலிகளின் அரசியல் அறிவை மட்டமாக கணித்து ‘புரட்சிகர’ விமர்சனக்களை முன்னெடுத்துள்ளனர். மாவோயிஸ்டுகளின் விமர்சனம் இன்னும் கிடைக்க வில்லை. தமிழ் தேசிய விடுதலை இயக்கம் இந்த வாரம் சென்னையில் ஒரு நிகழ்சி நடத்தவுள்ளது. அதன்பின்னர் அவர்களது விமர்சனம் கிடைக்கப்பெறும். ஈழ ஆர்தரவாளர்களில் திரு.நெடுமாறன், திரு.சீமான் போன்றோரின் கருத்துக்கள் கிடைத்து வருகின்றன. ஜெயமோகன் போன்றோர் தமெக்கென மிகக்குறுகிய வட்டத்தையே வைத்திருப்பவர்கள். இவர்கள் இந்திய தேசியவாதிகள். பரவலாக மதிக்கப்படாதவர்கள். எனவே ஜெயமோகன் போன்றோரின் விமர்சனங்கள் சிந்திக்க அருகதையற்றவை. புலம்பெயர் தமிழர்கள் பொழுதொரு வண்ணமும் கட்டுரைகளை தீட்டிக்கொண்டிருந்தாலும் புலிகள் அமைப்பின் மீதான விமர்சனங்களை வைக்காததனால்தானோ என்னவோ தமிழகப் புரட்சிகர குழுவினரும் அ. மார்க்ஸ் போன்றோரும் புலிகளின் தவறுகளை கடுமையுடன் பட்டியலிட்டு வருகின்றனர்.

1) புரட்சிகர நோக்கில் பார்த்தால் புலிகள் கிளிநொச்சியை கட்டியெழுப்பியதில் காட்டிய அக்கறையை மக்கள் திரள் போராட்டங்களை கட்டியெழுப்புவதில் காட்டவில்லை என்பது உண்மையே. ஆனால் ஈழத்தில் எண்பது விழுக்காடு புலிகளின் வசம் இருந்தபோது யாரை எதிர்த்து மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவது? நேபாளப்புரட்சியின் இறுதிக் கட்டத்தில் மன்னராட்சிக்கு எதிராக தலைநகர் காட்மண்டுவில் பெரும் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் இலங்கை தலை நகர் கொழும்புவோ புலிகளின், ஈழமக்களின் போராட்டக்களமல்ல. ஈழமக்களோ கொழும்புவாழ் தமிழர்களோ அங்கு பெருந்திரள் போராட்டங்களை நடத்தியிருக்க முடியாது. ஈழத்தில் ராணுவ ஆதிக்கமிக்க பகுதிகளில் பெருந்திரள் போராட்டங்கள் வெடித்திருக்க முடியாது. தொலைவிலிருந்து ராணுவத்தை ஏவும் எதிரியை ராணுவ ரீதியாகவே எதிர்கொள்ள நேர்ந்தது புலிகளுக்கு.

2) ஆனால் புலிகள் ஆதிக்க நிலையிலிருந்த போதே தமிழகளுக்கென்று ஓர் அரசியல் கட்சியைத் தோற்றுவிக்க தவறிவிட்டனர். அவ்வாறு அரசியல் கட்சியைத் தோற்றுவித்திருந்தார்களானால் தங்கள் கை மேலோங்கியிருந்த நிலையில் தாங்களே ஈழத்தில் தேர்தலும் நடத்தி ஈழமக்களின் ஜனநாயக விருப்பங்களை உலகுக்கு பறைசாற்றியிருக்க முடியும். இன்று நாடு கடந்து அமையும் தமிழீழ அரசு அன்று ஈழத்திலேயே அமைந்திருக்கும். அதே வேளையில் சிங்கள அரசின் பாசிச போக்கினை எதிர்க்கும் சிங்கள குழுக்களை சாதகமாக பயன்படுத்தவும் புலிகள் தவறினர். ஆனால் சிங்கள அரசோ புலிகளுக்கு ஏதிரான தமிழர்களை திறம்பட
பயன்படுத்திக்கொண்டமை தெளிவு. சேனநாயகா தொடங்கி சிங்களம் பயன்படுத்திக்கொண்ட தமிழர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அன்று ஜி.ஜி.பொன்னம்பலம் முதல் இன்று கருணா வரையும் இன்னும் புலம்பெயர் நாடுகளிலும் அப்பட்டியல் நீளும்.

3) அடுத்தபடியாக பார்த்தால் எந்த ஒரு தேசிய இன விடுதலைப்போராட்டமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நீரோட்டத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும். புலிகள் ஏகதியபத்திய எதிர்ப்பை பின்பற்ற வில்லை என்று புதியஜனநாயகம் இதழ் குற்றம் சுமத்துகிறது. இக்குற்றச்சாட்டில் பொருள் இல்லாமல் இல்லை. புலிகள் உலக வரைபடத்தில் மேற்குலகின் ஆதரவை பெரிதும் நாடினர். இதனால் அமெரிக்காவின் எதிரணியில் இருக்கும் நாடுகளான – சீனா, ரஷியா முதல் சின்னஞ்சிறு கியூபாவரை புலிகளின் எதிர்முகாமில் சேர்ந்து கொண்டன. அதே வேளையில் எந்த ஏகாதிபத்தியத்தின் ஆதரவை புலிகள் விரும்பி வேண்டி நின்றனரோ அந்த மேற்குலகம் புலிகளை விட சிங்கள இனவாதிகளே தங்களுக்கு அதிக ‘சேவை’ புரியமுடியும் என்பதைக் கண்டனர். எனவே மேற்குலகு புலிகளை ஆதரிப்பது போல போக்குகாட்டி கழுத்தறுக்கும் வேலையை கச்சிதமாகச் செய்தது. புலிகளின் கை மேலோங்கியிருந்த போது பேச்சுவார்த்தை மேடையில் அவர்களை உட்கார வைத்தனர். பின் அனைத்து நாடுகளும் சேர்ந்து தடை விதித்தனர். இதனால் புலிகள்
பேச்சுவார்த்தையிலிருந்து விலகிய போது அனைத்து நாடுகளும் சேர்ந்து சிங்களத்துக்கு படை கட்டினர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக துணைக்கண்டத்தைப் பொறுத்தவரை கடைசிவரை இந்திய ஏகாதிபத்தியத்தின் நட்பு சக்தியாக தங்களைக் காட்டிக்கொள்ள புலிகள் பெரும்பாடு பட்டனர். கடைசி வரையிலும் அரசியற்பிரிவுத் தலைவர் வெளியிட்ட அறிக்கையில்,’இந்தியாவின் நட்புசக்தியாக விளங்குவது யாரென்று இதிலிருந்தே தெரியும்…….(புலிகள்தான் என்பது)’ என்ற ரீதியிலேயே தெரிவித்திருந்தார். புலிகளின் தமிழக ஆதரவு அரசியல் தலைவர்களும் இந்துமாக்கடலில் புலிகள் இந்தியாவின் நட்புசக்தியாக விளங்குவர் என்பதை திரும்ப திரும்பச் சொல்லினர். அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்து விட்டது. இந்தியா தொடக்க முதலே புலிகளை பகடையாக பயன்படுத்தவும், அது முடியாத போது அவர்களை அழிக்கவுமே நினைத்தது. இந்தியாவின் இப்போக்கினை நன்றாக அறிந்து அனுபவித்த புலிகள் தெரிந்தே திரும்ப திரும்ப இந்தியாவின் நட்பு சக்தி தாங்களே என்று நிரூபிக்க நினைத்தனர்.

எதனால் இந்த நிலைப்பாட்டை எடுத்தனர் புலிகள்? இந்தியாவின் ஆதரவு சக்த்தியாக தம்மை காட்டிக்கொண்டால் அமெரிக்காவின் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்களா அல்லது தமிழகத்தின் ஆதரவை இழக்காமல் இருக்க முடியும் என்று நினைத்தார்களா? இந்தியாவின் எதிர்ப்பு சக்த்தியாக குரல் கொடுத்திருந்தால் குறைந்தபட்சம் சில மேலை நாடுகளும் சில கீழை நாடுகளும்
புலிகளை புருவத்தை தூக்கி பார்த்திருப்பார்கள். அதே வேளை தமிழ்நாட்டிலும் முரண்பாடுகள் கூர்மையடைந்திருக்கும். இந்தியாவின் போக்கினை எதிர்க்கும் (ஏகாதிபத்திய எதிர்ப்பு) முகாம் ஒன்று தமிழகத்தில் தெளிவாக தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறு தேர்தலை புறக்கணிக்கும் தீவிர முகாம் ஒன்றை தமிழகத்தில் ஏற்படுத்தாமல் விட்டமை புலிகள் செய்த பெருந்தவறாகும். இன்றைக்கு செ.பத்மனாதனும் ஜூலை 1-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ‘இவ்வளவும் நடந்த பிறகும் நாங்கள் இந்தியாவை வெறுக்க வில்லை’ என்றும் ‘இந்தியாவின் ஆதரவுடனும் ஆசிர்வாதத்தினோடும் தங்கள் லட்சியங்களை அடைவோம்’ என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர் இந்தியாவுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

4) புலிகளின் தலமையை பொறுத்தவரை அது இறுகிப்போன தலைமையாகவே இருந்தது என்பதை மறுக்க முடியாது. தலைவரை சுற்றியிருந்த நம்பிக்கையாளர்களின் தலைமையாக இருந்த அதற்கு வழிகாட்ட அரசியல் தலைமை இல்லை. அரசியற்பிரிவு எவ்விதத்திலும் அரசியல் தலைமை கொடுக்க வில்லை. அதன் விளைவை இன்று பார்க்கிறோம். த்லைவர் புதிராக மாறிய சூழலில் ஒவ்வொருவரும் தலைமை கொடுக்கின்றனர். ராணுவத்தலைமை மட்டுமே புலிகளிடம் தங்கி நின்றது. எனவே ராணுவத்தலைமைக்கப்பால் இயக்கம் செயல் படமுடிய வில்லை. அரசியல் முடிவுகள் எடுக்க முடியவில்லை. இத்தகைய தலைமை தனக்காக பேச தமிழ்நாட்டில் ஓட்டுக்கட்சி பிரமுகர்களையே நம்பியிருந்தது. தமிழ்நாட்டில் பரந்த மக்கள் ஆதரவு தளமோ அதனை இயக்கும் தலைமையோ இல்லை. திரு. நடேசன் ஒருமுறை விடுத்த அறிக்கையில்,” தமிழ்நாட்டின் ஏழு கோடி மக்கள் தம் சுண்டு விரலை அசைத்தால் போதும், ஈழ மக்களின் கண்ணீர் துடைக்கப்பட்டுவிடும்” என்று குறிப்பிட்டார். அது உண்மை. ஆனால் புலிகள் நம்பிய ஓட்டுக்கட்சித் தலைவர்களால் தமிழக மக்களின் சுண்டு விரலைக் கூட அசையச் செய்ய முடியவில்லை.

இந்த நிலைமைகளை தமது விமர்சனத்திற்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அறிவுய்தி அ. மார்க்ஸ் புலிகள் என்ன சொன்னார்களோ அதை ஓட்டுக்கட்சித் தலைவர்கள் செய்ததன்மூலம் புலிகள் தமிழக அரசியலில் தலையிட்டார்கள் என்ற ஒரு நகைப்புக்கிடமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் (தீராநதி, ஜூன் 2009). மேலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளை புலிகள் மேற்கொண்டபோதும் ஓட்டுக்கட்சித் தலைவர்கள் அவர்களை எச்சரிக்க வில்லை என்கிறார். ஓட்டுக்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக்காக புலிகள் மே 16-ம் தேதி வரை காத்திருந்தார்கள் என்ற புதியஜனநாயகத்தின் விமர்சனத்தை இது மறுதலிக்கிறது. தமது இடப்பரப்பு 500 சதுர மீட்டராக சுருங்கும் வரை காத்திருந்தார்கள் என்பதே உண்மை. அந்த நிலை மே 16-ம் தேதியோ, 17-ம் தேதியோ ஏற்பட்டது. அதுவும் இந்திய ஆட்சியாளர்களின் முன் திட்டத்தின் அடிப்படையில் ஏற்பட்டது.

மற்றபடி இந்தியாவில் ஆட்சி மாறும் என்று சாதாரண கிராமத்து மக்களே நம்பத் தயாரக இல்லாதபோது, அவ்வாறு நம்பிச் செயல்படுமளவிற்கு புலிகள் முட்டாள்களாக இருந்திருக்க மாட்டார்கள். ஜெயலலிதா கூட்டணி அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற்றிருந்தாலும் அவர் தனி ஈழக்கோரிக்கையை தொடர்ந்து உயர்த்திப் பிடிப்பார் என்பதற்கு எந்த உறுதிப்படும் கிடையாது. கால சந்தர்பத்திற்கேற்ப அவரது குரல் பயன்பட்டது. அவ்வளவே. புலிகளின் வீழ்ச்சி முழுக்க முழுக்க இந்தியாவும் அதன் துணைக்கண்ட பகைநாடுகளும் வழங்கிய ஆயுதங்களால் ஏற்பட்டதே. அந்த நிலையை எதிர்கொள்ளுமளவிற்கு புலிகள் அனைத்துலக அரசியலை கையாளவில்லை என்பது தெளிவு. இது அவர்களது ஏகாதியபத்திய ஆதரவு போக்கினால் ஏற்பட்டது என்பதும் தெளிவு.

இதற்கு மாறாக கிளிநொச்சியிலிருந்து வெளியேறும் நிலைமை தோன்றியவுடனேயே கரந்தடிப்படையாக மாறியிருக்கலாமோ, அல்லது கிளிநொச்சியிலேயே மக்களுக்கு ஆயுதம் வழங்கி வீதிப்போர் நிகழ்த்தியிருக்கலாமோ என்றால் ‘அவ்வாறு
செய்திருக்கலாம்’ என்ற சொற்களுக்கு வரலாற்றில் இடமில்லை. முல்லைத்தீவு வரை அவர்கள் மக்களோடு மக்களாக இருந்ததற்கு என்னென்ன காரணங்கள் அவர்களைத் தள்ளின என்பது வெளிக்கொணரபட்டு ‘ஒபாமாவிற்கான தமிழர்கள்’ அமைப்பு வெளியிடப்போகும் ‘வன்னிப்படுகொலை’யில் இடம்பெற வேண்டிய ஒன்று.

இந்த கருத்துக்களின் அடிப்படையிலான எண்ணவோட்டங்களை தமிழர்கள் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த கட்டுரை தொடரும்.

நிலவரசு கண்ணன்

புற்றுப்பாம்புகள்

இறுதியில் புதினமும் தமிழ்வின்னும் தேசியத்தலைவருக்கு வீரவணக்கத்தை செலுத்தி விட்டன. செல்வராசா,வழுதி, செம்மலை, அறிவழகன், தயாமோகன் என்று ஒரு துரோகக்கூட்டம் தன்னை உறுதியாக அடையாளப்படுத்திக் கொண்டது. மழைக்காலம் முடிந்தவுடன் கண்பட்டவிடத்திலெல்லாம் காளான் பூத்து நிற்பதைப்போல நான்காம் ஈழப்போர் முடிந்தவுடன் துரோக்ககூ(தோ)ட்டம் பூத்துக்குலுங்குகிறது.

தலைவர் இருப்பதாக நம்பிக்கொண்டிருந்தால் நாம் எப்படி உலகத்தமிழர்களின் பணத்தைக் கொள்ளை அடிப்பது என்றெண்ணி அவசரத் திட்டங்கள் தீட்டிய துரோகக்கூட்டம், தமிழ்நெட் இணையதளம் புலம்பெயர்ந்த ஈழ அரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தவுடன், அதையே காப்பியடித்து ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ ஒன்றை இணைய உலகில் அமைத்து அதன் பின் தமிழர்கள் ஒன்று திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல சிங்களவர்கள் வீசிஎறியப்போகும் எலும்புத்துண்டுகளையும் பொறுக்கிக்கொள்ள தயாராகி விட்டனர்.

இதுவரை கேள்விப்படாத பன்னாட்டுப்பணியக புலனாய்வுத்துறை, பன்னட்டுத்தொடர்பகம் என்று எத்தனையோ திணைக்களத்திலிருந்து அறிக்கை மேல் அறிக்கையாக விடுத்து இறுதியில் இணையதளத்திலேயே தலைவருக்கு இறுதி வணக்கம் செலுத்தி விட்டனர் தங்களது இன்றைய அறிக்கையில். ஆனால் பாவம் உலகத்தமிழர்கள்தான் தங்கள் கடமையை செலுத்தாதிருக்கின்றனர். தமிழகமும் தலைவர் இறப்பை கண்டுகொள்ளவில்லை.

‘மக்கள் அடுத்தகட்ட நகர்வுக்கு இன்னும் ஒன்று திரளாதிருக்க, தான் மட்டும் முன்னால் பாய்ந்து செல்கிறவன் மக்களை தவறாக வழிநடத்துகிறான்’ என்றார் லெனின். என்ன சத்தியமான வாக்கு! தமிழர்கள் அடுத்தக்கட்ட நகர்வை இன்னும் இறுதியாக்காத போது இந்த துரோகக் கூட்டம் மட்டும் தாங்கள் பாய்ந்து செல்வதாகக் கூறுகிறது. ‘மக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும்போது தான் பின்னால் தங்கி இருப்பவன் பித்தலாட்டக்காரன்’ என்பதும் லெனின் கூறியதே. கருணாநிதி போன்றவர்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. மக்களோடு மக்களாக சரிசமமான வேகத்தில் களத்தில் இருப்பவனே புரட்சியாளன் என்கிறார் லெனின். அதைத்தான் கிளிநொச்சி முதல் வெள்ளமுள்ளிவாய்க்கால் வரை தலைவர் தலைமையில் புலிகள் செய்தனர்.

அந்தத் உண்மையான தலைமை இப்போது தமிழர்களின் அடுத்த நகர்வுக்காக காத்திருக்கிறது. அது ஈழத்தின் உள்ளே புதிய தலைமுறை என்ன செய்யப்போகிறது என்பதிலும், புலம்பெயர் இளைய தலைமுறை என்ன செய்யப்போகிறது என்பதிலும் அடங்கியிருக்கிறது. புற்றை உடைத்தால் வெளிப்படும் பாம்புகள் ‘உஸ் உஸ்’ஸென அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு சீறுவதைப்போல நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் ஆளுக்கொரு அறிக்கைகளை விட்டுக்கொண்டிருப்பது தலைமையல்ல என்பதை அறிவுடைய யாரும் அறிவர்.

துரோகிகள் ஆளுக்கொரு அறிக்கையை அன்றாடம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்குள் பங்கீட்டுப் பிரச்சினை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அவர்களுக்குள் யார் தலைவர் என்பது முடிவாகாமல் ஒவ்வொருவரும் தான்தான் தலைவர் என்பதை நிரூபிக்க முயல்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.

மீண்டும் ஒலிக்கும் முத்துக்குமார் குரல் – 1

தமிழர்களே, தமிழர்களே……!
 
செங்கிஸ்கான் தனது படைகளுடன் டெல்லியில் புகுந்த ஒரே நாளில் ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டு டெல்லியின் வீதிகள் பிணங்களால் நிரம்பி வழிந்தன என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

இட்லரின் ஆட்ச்சியில் ஐந்து லட்சம் யூதர்கள் வதை முகாம்களில் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். ஊனப்படுத்தப்பட்டார்கள். சித்திரவதைக்காளானார்கள்.

இந்தியப்பிரிவினையின் போது இந்து – இஸ்லாமிய மதங்களை சேர்ந்த ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.

இவை யாவும் நாம் வாழும் நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் நடந்தவை. நாம் வாழும் காலத்திலிருந்து வெகுகாலத்திற்கு முன் நடந்தவை. நமது சொந்தங்கள் அல்லாதோர்க்கு நடந்தவை.

இருப்பினும் இந்த வரலாற்றுச் செய்திகளை கேள்விப்படுவோர்க்கு இதயம் கனத்து விடுகிறது. தொண்டை அடைத்து விடுகிறது. குரல் கம்மி விடுகிறது.
 
ஒரு லட்சம் பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டார்களா? ஐந்து லட்சம் பேர் வதை செய்யப்பட்டு இறந்தார்களா? மதக்கலவரத்தில் ஐந்து லட்சம் இந்து – முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டார்களா?

இவற்றை கேள்விப்படும் போது துன்பப்புயல் நம்மீது வந்து மோதினாலும், இவை யாவும் எங்கோ, எப்போதோ, யாருக்கோ நடந்தவை என்பதால் நமது மனம் வெகு விரைவில் அந்த துன்ப நினைவுகளை ஒதுக்கி வைத்து விட்டு அன்றாடப் பணிகளில் மூழ்கி விடுகிறது.

அன்று எங்கோ, எப்போதோ, யாருக்கோ நடைபெற்ற இந்தக்கொடுமை, இன்று இங்கே நாமிருக்கும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில், நாம் வாழும் இதே காலத்தில், நமது உறவுகளுக்கே  நிகழ்ந்து விட்டது. ஆறு மாதகாலத்தில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தார்கள் – ஈழத்தில்..

அதுவும் நமக்கு தெரியாமல் அல்ல; தெரிந்தே நடந்தது இக்கொடுமை.

நாள் தோறும் இந்தக் கொடுமை அரங்கேறுவதை செய்தித்தாளில் படித்தோம். தொலைக்காட்சியில் பார்த்தோம். செய்தித்தாளும் தொலைக்காட்ச்சியும் தராத செய்திகளை, படங்களை இணையதளங்கள் தந்தன. நம் மக்கள் நரவேட்டையாடப்படும் செய்திகளை, படங்களை இணையதளங்களில் படித்தோம், பார்த்தோம்.

பார்த்து, படித்து, மனம் பேதலித்து, இதோ சில கிலோ மீட்டர் தொலைவில் நம் மக்கள் வேட்டையாடப்படுவதைக் கண்டு துடித்து, என்ன செய்வது என்று திகைத்து, திணறி, திண்டாடி நின்றோம். ஏழு கோடி பேர் நெட்டை மரங்களென நின்றோம். செய்வதறியாது விழி பிதுங்கி நின்றோம்.

‘தமிழக உறவுகளே, எம்மைக் காப்பாற்றுங்கள்’ என்ற ஈனக்குரல் அடிக்கடியும் ஈழத்திலிருந்து ஒலித்தது. பதினாறு பேர் தங்கள் உடலை தீயிட்டு பொசுக்கி இறந்தனர். அவர்கள் உடலில் பற்றிய தீ உலகமெல்லாம் தமிழர் சமுதாயங்களில் பரவியது. உலகின் தெருக்கள் தமிழர்களால் நிரம்பி வழிந்தன. மக்கள் திரள் போராட்டங்கள் நாடுகள் தோறும் விண்ணதிர வெடித்தன.

இருந்தும் அனைத்துலகமும் இருந்தது அமைதியாக!  
எந்த நாடும் ஏனென்று கேட்க வில்லை.

அமைதிப்பேச்சு வார்த்தை நடத்திய நாடுகள் அடங்கி கிடந்தன. ஆயுத வலுமிக்க நாடுகள் அடக்கி வாசித்தன. ஐக்கிய நாடுகள் அவையோ முடங்கிக் கிடந்து முணுமுணுத்தபடியே இருந்தது.
 
ஐய்யகோ…ஓர் இனம் எதிரிகளால் அழிக்கப்படும் போது, ஒட்டுமொத்த உலக சமுதாயமும் ஏன் ஒன்றும் செய்ய வில்லை?
 
ஏன், ஏன், ஏன் என்று உரத்துக் கேட்கையில் வட்டார வல்லரசுகள் – குறிப்பாக இந்தியா சிறீலங்காவை தன் வசப்படுத்திட தமிழர் அழிப்புக்கு தாராள ஆயுத உதவி அளித்ததே காரணமாக அமைந்தக்து.
 
அமெரிக்கா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்.
 
ஆனால் அமெரிக்கா இந்தியாவை தன் பகடையாக தன் மடிக்குள் முடிந்து வைக்க வேண்டிய தேவையில் இருந்தது, எனவே தடுக்கவில்லை.
 
ரஷியா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்.
 
ஆனால் ரஷியாவுக்கோ ‘அமெரிக்க அபாயத்’திற்கெதிராக சீனாவை தன் வாலில் ஒட்ட வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது, எனவே தடுக்க வில்லை.
 
இந்தியா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்.
 
ஆனால் இந்தியாவை ஆட்சி புரியும் காங்கிரசு காடையர்களின் தலைவிக்கோ தமிழர்களை பழிவாங்க வேண்டும் என்று தலைகால் புரியாத வெறி. அதற்காக இந்தியாவின் படைபலத்தை சிறீலங்காவுக்கு அனுப்பினாள் மனித வடிவில் வாழும் அந்த விலங்கு! காங்கிரசுக் காடையர்கள் சிரித்தனர். தமிழர்களை கொன்று குவித்தே பழக்கப்பட்ட நாங்கள் இப்போதும் கொல்கிறோம் தமிழர்களை என்று இறுமாப்பு எய்தினர்.
 
கருணாநிதி நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்.
 
ஆனால் அவருக்கோ தன் கொள்ளுப் பேரன்களையும், கொள்ளு பேத்திகளையும் காங்கிரசு காடையர்களின் ஆதரவுடன் அமைச்சரகளாக்கிட வேண்டுமே என்ற அங்கலாய்ப்பு, எனவே தடுக்க வில்லை!
 
ராமாதாசும் வை.கோவும் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்.
 
இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்காக தமிழகத்தையே நிலை குலைய வைத்த ராமதாசு ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தை நூறு முறை நிலைகுலைய வைத்திருக்கலாம். ஆனால் அவருக்கோ நாடாளுமன்ற இடக்கணக்கில் தனது கட்சி வழுக்கி விடக்கூடாதே என்ற கவலை!, எனவே தடுக்க வில்லை.
 
திருமாவளவன் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்.
 
‘காங்கிரசுக் கட்சியை வேரோடு சாய்ப்பதே என் முதல் வேலை’ என்று சூளுரைத்தவர் தனது ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக காங்கிரசு காடையர்களின் காலில் விழுந்து சரணடைந்து கதறினார். தனது பதவியை பெற்றார். வேரோடு சாய்க்கப்பட்டது சிறுத்தைகளின் மானம். வீழ்ந்தது ஒரு லட்சம் தமிழ்மக்களின் வாழ்க்கை.
 
போராடும் தமிழ்நாட்டு நெஞ்சங்கள் புலி போல ஒரு தலைவன் இன்றி மௌனமாக கிடந்தன.
 
அதன்பின்னர்தான் புலிகளின் துப்பாக்கிகள் மௌனமானதாக அறிவிக்கப்பட்டது – புலிகளால்.

புலித்தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது – எதிரிகளால்.

என்ன ஓர் அவமதிப்பு – ஏழுகோடி தமிழர்களுக்கு ஒன்றரை கோடி சிங்களவர்களால் ஏற்படுத்தப்பட்டது! ஒரு சிறிய சமுதாயத்தினரால் ஒரு பெரிய சமுதாயத்தினருக்கு எப்படி இந்த அவமதிப்பு வந்தது? எப்படி இந்த துயரம் நேர்ந்தது?
 
எப்படியென்றால் எதிரிகள் சிறுகூட்டமாக இருப்பினும் இறையாண்மை மிக்க ஆட்சியாளர்களாயிற்றே! நாம் ஏழுகோடி பேர் இருந்தும் இறையாண்மை இழந்து இந்தியாவுக்கு அடங்கிக் கிடக்கும் ஆமைகளாயிற்றே!
 
அதுவன்றோ வேறுபாடு! அதுவன்றொ நம் வீரத்தில் விளைந்த மாறுபாடு!
 
களங்கம் – துன்ப வாழ்வு – களபலி..எல்லாம் நம் மக்களுக்கு.
 
ஆட்சி நம் கைய்யில் இல்லாததினால் தொடர்கிறதே நம் இழிந்த தலைவிதி! துரோகமே உருவெடுத்த அரசியல்வாதிகளினால் நம் மக்கள் அடைகின்றனரே சரணாகதி!

ஈழத்தமிழர்கள், உலகத்தமிழர்கள், தமிழகத்தமிழர்கள் ஆகிய மூன்று தரப்பினர்கும் முக்கிய களம் தமிழகம் அன்றோ! அன்னைத் தமிழகம் ஆர்ப்பரித்திருந்தால், சென்னையின் குரல் டெல்லியை மிரட்டியிருந்தால் இன்னல்கள் அனைத்தும் தீர்ந்து போயிருக்குமே ஈழத்தமிழர்களுக்கு!

அதனைச் செய்யத்தவறியதாலன்றோ பின்னடைவும் பேரழிவும் ஏற்பட்டது.

புதை குழியை நெருங்கிய பின்னும் புலிப்படையானது இறுதிவரை தமிழகத்தின் வோட்டுப் பொறுக்கிகளையும் அரசியல் மாமாப் பயல்களையுமன்றோ நம்பியது! அவ்வாறு நம்ப வேண்டிய கைய்யறு நிலைக்குத் தள்ளப்பட்டது!

தமிழகத்தில் தேர்தலை நிராகரிக்கும் ஒரு தலைமையை ஏற்படுத்தியிருந்தால் இந்த இழிநிலை ஏற்பட்டிருக்காதே. அழிநிலை தோன்றியிருக்காதே.

தமிழக இளைஞர்களின் துடிப்பை டெல்லியை நோக்கிய தாக்குதல்களாக மற்றக்கூடிய ஒரு கதாநாயகன் தமிழகத்தில் இருந்திருந்தால் சிங்களம் பின்வாங்கியிருக்குமே!
இந்தியாவின் எல்லை சுருங்கி விடும் என்ற அச்ச உணர்வை தமிழகம் டெல்லியில் ஏற்படுத்தியிருந்தால் இன்று ஏற்பட்ட முடிவு தலைகீழாகவல்லவா போயிருக்கும்!

இனியாவது சிந்திப்போமா, உலகத்தமிழர்களே….ஈழத்தமிழர்களே….!
அனைவரும் செய்த தவறுகளிலேயே பெருந்தவறு தமிழகத்தில் புரட்சிகர தலைமையொன்றை புறப்படச் செய்யத் தவறியதுதான்.
இந்தத் தவறை இனியாவது உணர்ந்து திருத்திக்கொள்வோமா?
 
தமிழகத்தில் ஓர் தன்னலமற்ற தலைமையை ஏர்படுத்துவோமா? அதன்மூலம் தமிழர்கள் உலகெங்கும் தலை நிமிர்ந்து நிற்கச் செய்வோமா?

ஈழம்  தனிநாடாக தமிழகத்தின் குரலை எரிமலை இடியாக மாற்றுவோமா?
 
————————–
 
முத்துக்குமாரின் குரலாக……
 
நிலவரசு கண்ணன்
வீரத்தமிழன் முத்துக்குமார் பேரவை
தமிழகம்

இரண்டு முக்கிய நகர்வுகள்

உலகத்தமிழ் உறவுகளே,

இரண்டு முக்கிய நகர்வுகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தலைவர் இறந்து விட்டதாக வலிந்தும் அறிவிப்பு செய்துவந்த செல்வராசா பத்மனாதன் நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்று அமைக்கும் செயற்திட்டம் சட்ட வல்லுனர் உருத்திரகுமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நாடு கடந்த தமிழீழ அரசிற்கு அடிப்படைகளாக தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை போன்றவை கூறப்படுகின்றன. இந்த அடிப்படைகள் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 2003 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகாரசபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை. இந்த மூன்றுமே விடுதலைப்புலிகளின் கை மேலோங்கியிருந்த ஆயுதப்போராட்ட காலம் தொடங்கி வளர்ந்து நிலைபெற்ற காலத்தை குறிக்கின்றன.

இந்த புலம்பெயர் அரசின் கோட்பாடுகளாக பத்மனாதன் கூறுவன கீழ்வருமாறு:

ஜனநாயக முறையில் புலத்தில் அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைக்குரலையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்துலக அரங்கில் இயங்க வேண்டும். அதேவேளையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாஷைகளை தமது அரசியல் அடிப்படைகளாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் தாயக நிலைமைகளை பவித்திரமாகப் புரிந்து கொண்டு இயங்கும் வகையிலான தாயகச் செயற்திட்டம் அமைய வேண்டும்.

பத்மனாதன் இதில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சேர்த்து பேசுவது குறிப்பிடத்தக்கது.

இதே வேளையில் புலிகளின் அனைத்துலக தொடர்பகம் தனது பிரித்தானிய கிளையினால் செயல்வடிவம் கொடுக்கப்படும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் தமிழீழ மக்களவைகளை, புலம்பெயர் தேசங்கள் தோறும் நாடுவாரியாக நிறுவுவதற்கான திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. பிரித்தானிய கிளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உத்தேச தமிழீழ மக்களவைகளின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், பன்மைத்துவத்தையும், தாராண்மைத்துவத்தையும் நிலைநிறுத்தும் நீதியான – சனநாயக வழிதழுவிய தேர்தல் முறைமைகள் ஊடாக தெரிவு செய்யப்படுவர் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரித்தானிய கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் பன்னாட்டு மனிதநேய – மனிதவுரிமை விழுமியங்களையும், கடப்பாடுகளையும், சாசனங்களையும், சட்டங்களையும் அப்பட்டமாக மீறி, கொடிய போர்க்குற்றங்களையும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களையும் இழைத்து, தமிழ் குருதியிலும், தமிழர்களின் உடலங்களின் மீதும் வெற்றிவாகை சூடி, ஆயுத பலத்தின் ஊடாக ஈழத்தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை நசுக்கும் கொடுஞ்செயலில் ஈடுபடும் சிங்கள தேசத்துடன், இனியும் ஈழத்தமிழர்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்ற வரலாற்று மெய்யுண்மையை உலக சமூகத்திற்கு வலியுறுத்தும் முதன்மை மக்கள் கட்டமைப்பாக இது விளங்கும் என்றும் கூறியிறுக்கிறது.

பத்மனாதன் அமைக்க அழைப்பு விடுத்துள்ள புலம்பெயர் தமிழீழ அரசானது தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை என்று கூறுகிறது. இதில் பிரிவினை கூர்மையாக எடுத்து வைக்கப்படவில்லை. ‘தன்னாட்ச்சி உரிமை’ என்று கூறப்பட்டு 2003 -ம் ஆண்டு பரிசீலிக்கபட்ட ‘இடைக்கால நிர்வாக அதிகார சபை’ என்பதைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது. அதற்கு மேல் இந்த புலம்பெயர் அரசு போகுமா என்பது கூறப்பட வில்லை. மேலும் தாயக நிலைமைகளை பவித்திரமாகப் புரிந்து கொண்டு இயங்கும் வகையிலான தாயகச் செயற்திட்டம் அமைய வேண்டும் என்றும் கூறுகிறார். ‘பவித்திரமாக புரிந்து’ கொள்தல் என்றால் என்ன? சரணாகதியா பொராட்டாமா என்பது இனிமேல்தான் தெளிவாகும். மேலும் ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளும் என்றும் கூறுகிறார் பத்மனாதன். 2003-ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்வே இல்லாதா தீர்வான ‘இடைக்கால நிர்வாக அதிகார சபை’ என்பதனை பொது உடன்பாட்டின் மூலம் எட்டப்போகிறார்களா?

ஆனால் பிரித்தானிய கிளையின் தமிழீழ மக்களவை திட்டத்தில் சிங்கள தேசத்துடன், இனியும் ஈழத்தமிழர்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்ற வரலாற்று மெய்யுண்மையை உலக சமூகத்திற்கு வலியுறுத்தும் முதன்மை மக்கள் கட்டமைப்பாக இது விளங்கும் என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இது உலகளாவிய போராட்டத்தினை முன்னெடுப்பதை கூறுகிறது.

இரண்டு திட்டங்களும் உலகத்தமிழர்களின் முன் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா வந்து பல அரசியல் வி.ஐ.பி.க்களுடன் பேச்சு நடாத்திய பின் இவ்வறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. அதே வேளையில் சிறீலங்கா அரசு பத்மனாதனையும் இதர புலி பிரமுகர்களையும் கைது செய்ய வெளிநாடுகள் மூலம் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக செய்தியும் இதே காலக்கட்டத்தில் வெளியாகியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

————————–

நிலவரசு கண்ணன்

வீரத்தமிழன் முத்துக்குமார் பேரவை, தமிழகம்

சரணாகதியை முறியடித்தல்

vmp3

புதிய காலகட்டத்தினுள் புகுமுன்பாக…

செம்மலை, வழுதி, தயாமோகன், பட்மனாதன் அண்ணார்…என இன்னும்சில பெயர்கள் ஈழ விடுதலை வட்டாரங்களில் சில நாட்களாக வெகு வேகமாக உச்சரிக்கப்படுகின்றன. செம்மலை புலிகளின் அனைத்துலக தொடபகத்திலிருந்து அறிக்கை விடுகிறார். தயாமோகன் மட்டு – அம்பாறை அரசியற்பிரிவிலிருந்து அறிக்கை விடுகிறார். பன்னாட்டு பேச்சாளர் பத்மனாதன் ஒரு பொதுவான கொள்கைத்திட்டத்தை உலகத்தமிழர்கள் உருவாக்க வேண்டுமென்கிறார். இவர்கள் யாவரும் விடுதலைப்புலிகள் இயக்க முத்திரையை போல போலியாக உருவாக்கப்பட்ட ஒரு முத்திரையுடன் தமது அறிக்கைகளை முதன்மையாக தமிழ்வின், புதினம் ஆகிய இணையதளங்களில் வெளியிடுகின்றனர். இவை யாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வழமைக்கு மாறானது. இவ்வாறு அறிக்கை வெளியிடுவோர் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்களது அறிக்கைகளில் குறிப்பிடப்படும் ஒவ்வொருவரது பொறுப்புக்களிலிருந்து பார்க்க்டும்போது மூன்றாம் நிலை நான்காம் நிலை பொறுப்பாளர்களாகவே இருக்கவேண்டும் என்று தெரிகிறது. இவர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் உரிமையை இயக்கம் ஒருபோதும் வழங்கியிருக்காது. இவர்களது அறிக்கைகள் வேக வேகமாக வெளியாகும் இக்காலக்கட்டத்தில் ‘புலிகளின் பன்னாட்டு வலைப்பின்னல் இன்னும் உறுதியாக இருக்கிறது’ என்று சிறீலங்காவின் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா தெரிவித்திருப்பதை இணைத்துப்பார்த்தால் அந்த வலைப்பின்னலை நோக்கி அரசின் சதிவலை விரிவதையும் புலிகளின் முதல் நிலை, இரண்டாம் நிலை தலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாம் நிலை, நான்காம் நிலை தலைமையை சிறீலங்கா அரசு வலைவீசி வருகிறது என்ற ஐயப்பாடு எழுகிறது.

இந்த ஐயப்பாட்டிற்கு காரணமாக அமைவது மேற்சொன்ன அறிக்கைகளை தமிழ்வின், புதினம் ஆகிய இணையதளங்களில் வெளியிடுவோர் தமது அறிக்கைகளில் இரண்டு மூன்று விடையங்களை அழுத்தி சொல்வதுதான். முதலாவதாக தேசியத்தலைவர் இறந்து விட்டார் என்று அடித்துக்கூறுகின்றனர் இந்த அறிக்கையாளர்கள். கருணாநிதியே பிராபகரன் இறந்து விட்டார் என்ற செய்தி உறுதிபடுத்தப்படவில்லை என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறி விட்டார். அது தவிர இந்திய அரசின் பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும் உறுதியாக இது குறித்து எதனையும் கூறவில்லை. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்கள் இறப்புச்செய்தியை ஏற்றுக்கொள்ள வில்லை. இந்நிலையில் சிறீலங்கா அரசு தலைவர் இறப்பு பற்றிய தனது பொய்பரப்புரையை நிறுத்திவிட்டு விடுதலைப்புலிகளின் பெயரிலேயே அப்பொய்பரப்புரையை அவிழ்த்து விடும் என்று சாதாரண அறிவுபடைத்த எவரும் சிந்திக்கத்தக்கதே. போருக்கு பல்லாயிரம்கோடி ரூபாய் செலவு செய்யும் சிறீலங்கா அரசு, புலிப்பதாகையை உயர்த்திப்பிடிக்கும் ஒரு புறம்போக்குக்கூட்டத்தை உருவாக்க சில நூறு கோடிகளை செலவு செய்யாதா என்ன?

பிராபகரன் இறப்பு விடயத்தில் அறிக்கையாளர்கள் புளுகுகின்றனர் என்பது ஒரு குறிப்பிட்ட செய்தியால் உறுதியாகிறது. ‘முன்னாலே போனவர்களின் பின்னாலே போனவரின் வழியில்’ என்ற கட்டுரையை தமிழ்வின்னிலும், புதினத்திலும் வெளியிட்ட தி.வழுதி தலைவர் இறக்கும் போது சையனைட் குப்பியை அணிந்திருந்தார் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் சிறீலங்கா அரசு காட்டிய உடலில் சையனைட் குப்பி எதுவும் இருக்கவில்லை என்பது மட்டுமின்றி, ஜூன் 12, 2009 அன்று வெளியான ‘தினத்தந்தி’ செய்தித்தாளில் பிராபகரன் இறக்கையில் சையனைட் குப்பி அணிந்திருக்கவில்லை என்று ராணுவம் தெரிவித்த செய்தி வெளியாகியுள்ளது. இறப்புச்செய்தி உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் அரசின் கூற்றுக்கும் அறிக்கையாளர்களுக்கும் உள்ள முரண்பாடு தெரியவில்லையா? இந்த முரண்பாடே தலைவர் இறக்கவில்லை என்பதை உறுதிசெய்வது விளங்கவில்லையா? ஆகவே அறிக்கையாளர்களின் முதல்வேலை என்னவென்பது இங்கே தெளிவாகிறது. அதாவது தலைவர் இறந்தது போல் ஒரு பிரமையை உருவாக்கிடவேண்டுமென்பதே அது. ஏன் அத்தகைய பிரமையை உருவாக்க வேண்டும்? பிரபாகரன் இறந்ததாக நாம் நம்பினால்தானே இனி புலித்தலைமை என்பது இதுதான் என்று ஒரு புறம்போக்குத்தலைமை வெளிப்பட முடியும்! அதனால் தம் அறிக்கைகளில் இவர்கள் மிகக்கவனமாக பிரபாகரனின் புகழ்பாடி பாடியே அவரை புதைக்கும் வேலையை செய்து வருகின்றனர். தங்கள் அறிக்கைகள் தோறும் பிரபாகரனின் சாதனைகளை, ஈகையை, வீரத்தை அறிக்கையாளர்கள் மெச்சிப்புகழ்ந்தாலும் தமிழ்வின்னிலும், புதினத்திலும் தி.வழுதி எழுதியிருக்கும் கட்டுரையின் தலைப்பை பாருங்கள்: “முன்னாலே போனவர்களின் பின்னாலே போனவரின் வழியில்”! என்ன ஒரு கேவலமான சொற்றொடர்! முன்னாலே போனவர்களின் பின்னாலே போனவராம் தலைவர். அவரது வீரத்தை புகழ்வது போல புகழ்பவர்கள் தங்களையறியாமல் அவர் கோழை என்று சொல்லவரும் தங்கள் விருப்பத்தை தலைப்பிலேயே தெரிவித்து விடுகின்றனர்.

பிராபகரன் இறந்து விட்டதாக அறிக்கையாளர்கள் நிரூபிக்க முயலவில்லை. அவரோடு சேர்ந்து பொட்டு அம்மானும் பலியாகிவிட்டதாகவும், தலைவரின் குடும்ப்பத்தினரும் களபலியாகிவிட்டதாகவும் கூறுகின்றனர். கோதபய ராஜபக்சேவைத்தவிர வேறெந்த சக்த்தியும் இவ்வாறு கூற வில்லை. இந்த அறிக்கையாளர்களும் ஏன் அதுபோல கூறுகின்றனர்? அவர்களது ஆழ்மனவிருப்பம் அடுத்து வரும் அவர்களது வர்ணனையில் வெளிப்படுகிறது.

இதோ அறிக்கையாளர்களின் வர்ணனை:

விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணைனைச் சாரும்.

விடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ், சூசை, பொட்டு, கே.பி…. என இன்னும் சிலரைச் சாரும்.

விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும் சாரும்.

ஆனால் – சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும், நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக – மனம் தளராமல் – விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்.

மேற்கண்ட வர்ணனையில் கே.பி என்றழைக்கப்படுபவரைத் தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள், அல்லது இறந்து விட்டதாக அறிக்கையாளர்களால் சொல்லப்படுகிறது. ஆக அந்த கே.பி.தானே தேருக்கு இப்போது சொந்தக்காரர்! தலைவரின் சாவுச்செய்தி உலகிற்கே புதிராக இருக்கிறது. ஆனால் இயக்கத்தை கைப்பற்றுவதற்காக தலைவரையும் அவரது குடும்பத்தினரையும் குழிதோண்டி புதைத்து விட்டு, வாரிசுரிமைப்பட்டா வேண்டுன்கின்றனர் அறிக்கையாளர்கள். தங்களுடைய வாரிசுரிமைக்கு விடுதலைப்புலிகள் சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று சிந்தித்தவர்கள் உண்மையான புலிச்சின்னத்தை பயன்படுத்தினால் பின்னாளில் சிக்கல் வரலாம் என்று யூகித்து இரண்டு வித போலியான சின்னங்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளனர். ஜூன் 9-ம் தேதி பொ.செம்மலை என்பவர் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற சின்னத்தில் புலிமுகம் இடப்பக்கம் நோக்கியுள்ளது. புலித்தலையை சுற்றிலும் தோட்டக்கள் ஏதுமில்லை. சின்னத்தின் கீழ் ஏதோ மொழியில் சில சொற்கள் தெளிவின்றி இடம்பெற்றுள்ளன. ஜூன் 110ம் தேதி தயா மோகன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள சின்னத்தில் புலிமுகம் வலப்பக்கம் நோக்கியுள்ளது. புலித்தலையை சுற்றிலும் தோட்டாக்கள் இடம்பெற்றுள்ளன. சின்னத்தின் கீழ் ‘தமிழ் ஈழம்; என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஏதோ சில சொற்கள் தெரிகின்றன. வாசுரிமை கோருபவர்கள் சின்னத்தில் மாறாட்டம் செய்வதன் நோக்கம் எதிர்காலத்தில் உண்மையான தலைமை வெளிப்பட்டாலும் தாங்கள் ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’என்ற ஓர் அமைப்பிற்கு தலைமை தாங்குவதாக காட்டிகொள்வதற்காகவே.

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைமைக்கு வாரிசுரிமை கோரும் அறிக்கையாளர்கள் அழுத்திச்சொல்லவரும் இரண்டாவது விடையம் காயம்பட்டுள்ள கணக்கற்ற பேரையும் வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லட்ச்சக்கணக்கான மக்களையும் விடுவித்திட பன்னாட்டரங்கு மூலம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே. சரியான கோரிக்கை. ‘போரை நிறுத்து; புலிகளை அங்கீகரி; ஈழத்தை ஏற்படுத்து” என்று முழங்கி களம் கண்ட புலம்பெயர் உறவுகள், இனி “போரில் சிக்குண்டவர்களை விடுவி; ஈழத்தை விடுவி” என முழங்கி களம் காண வேண்டும். இடையில் ஓர் வெற்றிடம் உள்ளது. “விடுதலைப்புலிகளை அங்கீகரி” என்ற இடம் வெற்றிடமாக உள்ளது. அந்த வெற்றிடத்தில் தங்களை இருத்திக்கொள்ள முயலும் வாரிசுரிமை கோரும் அறிக்கையாளர்கள் புலம்பெயர் தமிழர்களின் அமைதிவழிப்போராட்டம் என்பது இனி ஈழத்திலும் தொடர வேண்டும் என்றும் தொடக்க முதலே உரைத்து வருகின்றனர். அமைதி வழி என்பது தந்தை செல்வா காலத்தில் பரீட்ச்சித்துப் பார்க்கப்பட்டது. ஆயுத வழி தலைவர் பிராபகரனால் 37 ஆண்டுகளாக பரீட்ச்சித்துப் பார்க்கப்பட்டது. இரண்டுமே தோல்வியடைந்தது என்று எடுத்துக்கொண்டாலும் கூட ஒன்றிலிருந்து புதிய ஒன்று விளையுமே தவிர பழைய ஒன்றிற்கு எதுவும் திரும்பி போவதில்லை. வரலாறு திரும்புவதில்லை. தமிழ்நாட்டின் அரசியல் வாதிகளைப்போல ஈழத்திலும் தாங்கள் தலையெடுக்கலாம் என்ற நப்பாசை உடையோர் வரலாறு திரும்பும் எனக்கூறலாம். ஆனால் வரலாற்றிலிருந்து பாடம் பெற முயல்பவர்கள் – எதிரியின் வலையில் வீழ்ந்து விலைபோகாதிருக்க விரும்புபவர்கள் புதிய வழிமுறைகளைத்தான் நாடுவார்கள். புலித்தலைமை தங்கள் துப்பாக்கிகளை மௌனித்து வைக்கப்போவதாக அறிவித்தபின் வேறெந்த முடிவுகளையும் எடுக்க வில்லை என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். பன்னாட்டு போக்கிற்கேற்ப பரீட்ச்சித்துப்பார்க்க வேண்டிய புதிய வழிமுறைகளை அவர்கள் இப்போது பரிசீலித்துக்கொண்டிருப்பார்கள்.

இதனையடியாகக்கொண்டு தமிழ்நெட் இணையதளத்தில் வெளியான ஆலோசனைத்திட்டத்தினைக் கூறலாம். புலம்பெயர் ஈழ அரசு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்கிறது அவ்வாலோசனைத்திட்டம். இன்று திபேத்தியர்களுக்காக தலாய்லாமா தலைமையில் புலம்பெயர் அரசு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் புலம்பெயர் இந்திய அரசு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதுபோல் புலம்பெயர் ஈழ அரசு ஒன்று அமைக்கப்பட்டால் அது பொம்மை அரசாக இருக்காமல் தற்போது ஒரு திருப்புமுனையை அடைந்திருக்கும் ஈழப்போரின் வடிவங்களையும், போக்குகளையும் அது தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தீர்மானிப்பதன் மூலம் விடுதலைப்புலிகளின் தலமைப்பாத்திரத்தையும், ஈழத்தை எதார்த்தத்தில் அடைவதற்கான சாத்தியக்கூறுகளையும் உருவக்க வேண்டும். அந்நிலையில் போராட்ட வழி என்பது பழையன கழிதல், புதியன புகுதல் என்பதாக இருக்க வேண்டுமேயன்றி பழையன புகுதலாக இருக்கக்கூடாது. அமைதி வழியா ஆயுதப்போராட்ட வழியா என்பதை தீர்மானிக்கப்போவது ஏற்கனவே வழிநடத்திய தலைமையின் கீழ் புறப்படப்போகும் புதிய தலைமுறைதான். தலைமையை பிளக்க முயலும் எதிரிகளின் ஊதுகுழல்கள் அல்ல. விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் நான்காவது ஈழப்போர் ஏற்படுத்திய திருப்புமுனையாக புறப்பட்டிருக்கும் புதிய புலம்பெயர் தலைமுறை ஈழக்காடுகளிலும் மேடுகளிலும் மக்கள் முன்னெடுக்கப்போகும் புதிய போராட்டங்களை உள்வாங்கிக்கொண்டு, ஊமையாகக் கிடக்கும் தமிழகத்தின் போராட்ட சக்திகளுக்கு புதுவடிவம் கொடுத்து, உலகமய போக்கினுக்கு ஏற்றபடி அல்லாமல் அதற்கு எதிர்முகமாக, ஏகாதிபத்திய எதிரி முகாமாக போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும். இந்த போராட்டத்தில் அமைதி வழியும் சேரும், எதிரி முகாம்களின் மீது தாக்குதல் தொடுக்கும் வழியும் சேரும். இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுப்பது வரலாறு திரும்பும் என்ற திரிபு வாதத்தையே முன்னிறுத்தும். புதினம், தமிழ்வின் அறிக்கையாளர்கள் அமைதிவழி ஒன்றுதான் இலக்கை அடைய இனி ஒரே வழி என்பது அவர்கள் கருணாவின் வழியை, கருணாநிதியின் வழியை, டக்ளஸ் தேவானந்தாவின் வழியை, சித்தார்த்தன், ஆனந்த சங்கரியின் வழியை தேர்ந்தெடுப்பதையே காட்டுகிறது.

இங்கு சொல்ல வேண்டிய இன்னொரு விடயம் புதினம், தமிழ்வின் அறிக்கையாளர் குழுவினர் அடுத்து வரும் காலக்கட்டத்தினை 3-வது ஈழப்போர் என வர்ணிப்பது பற்றியது.

போர் என்பது சிங்கள இனவாதிகள், மற்றும் தமிழ் இன விடுதலைப்பாதையாளர்கள் ஆகியோர் இடையே நடந்த ஆயுதப் போரைக்குறிக்கும். அரசியல் போராட்ட இயக்கம் என்பது தந்தை செல்வா காலம் தொடங்கி இன்று வரை முடிந்து இனியும் வரப்போகும் காலத்தை உள்ளடக்கியது. அவ்வகையில் தந்தை செல்வாவின் காலம் தமிழர் உரிமை விடுதலை போராட்டத்தின் முதற்பகுதி எனலாம். அந்த முதற்பகுதி வட்டுக்கோட்டை தீர்மானத்தோடு நிறைவு பெறுகிறது. வட்டுக்கோட்டை தீர்மானம் தனி ஈழ நாட்டை உலகிற்கு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வந்த காலம் ஆயுதப்போரின் காலம். அது நான்கு கட்டங்களாக நடந்து இன்று ஒரு திருப்புமுனையைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. தமிழர் உரிமை விடுதலைக்கான இந்த இரண்டாவது போராட்டக்காலம் விடுதலைப்புலிகளின் கை மேலோங்கியிருந்த காலம். இக்காலத்தில்தான் நான்கு ஈழப்போர்கள் நடந்து முடிந்திருக்கின்றன. தமிழர் உரிமையை மீட்பதற்கான எதிர்வரும் மூன்றாவது விடுதலைப்போராட்டக்காலத்தில் ஆயுதபோர் இடம்பெற்றால் அது ஐந்தாவது ஈழபோராக அமையும்.

தந்தை செல்வா காலம் தொடங்கி எதிர்வரும் காலக்கட்டம் வரை அமைதி வழி அரசியலும், ஆயுதபோராட்டமும் மாறி மாறி வந்துள்ளதைக் காண்கிறோம். ‘அரசும் புரட்சியும்’ நூலில் அரசியல் மேதை லெனின் கூறுகிறார்: “அரசியல் என்பது ஆயுதங்களின் உதவியின்றி அமைதி வழியில் நடைபெறும் போர். போர் என்வது ஆயுதங்களின் உதவியுடன் நடைபெறும் அரசியல்”. முதலில் அமைதி வழியில் அரசியில் நடத்தும் இரு தரப்பாரும் ஒரு புள்ளியை நெருங்குகையில் இனி மேற்கொண்டும் அமைதி வழியில் தங்கள் அரசியலை தொடர முடியாது என்ற நெருக்கடியை உணரும்போது ஆயுதங்களின் உதவியோடு தங்கள் அரசியலை தொடருகின்றனர். போர் நடத்த முற்படுகின்றனர். அதுதான் ஈழ விடுதலைப்போராட்டத்தில் நடைபெற்றது. வட்டுக்கொட்டை தீர்மானத்திற்கு பின்பு சிறீலங்கா இனவாதிகளும் சரி தமிழர் விடுதலைப் போராட்டக்காரர்களும் சரி இனிமேற்கொண்டும் தங்கள் அரசியலை அமைதி வழியில் தொடர முடியாது என்பதை உணர்ந்தனர். ஆயுதந்தரித்தனர். இன்றைய நிலைமையில் சிங்கள இனவாதிகளுக்கும் தமிழர் விடுதலைப்போராட்டக்காரர்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு யாது? இந்தக் கேள்விக்கு இரு தரப்பினரும் தங்கள் செயல்பாடுகள் மூலம் அண்மை எதிர்காலத்தில் பதிலளிப்பார்கள். தி.வழுதியோ, பத்மனாதன் அண்ணாரோ, செம்மலையோ, தயா மோகனோ அல்லது இந்த பெயர்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் இந்திய அரசோ பதிலளிக்க முடியாது. அமைதி வழி என்பது ஒரு தரப்புக்கு எடுத்துச் சொல்வது மட்டுமல்ல. இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. சிங்கள இனவாதத் தரப்பு வன்முறையைக் கடைப்பிடிக்கவும், ஈழத்தமிழர்கள் அமைதிவழியில்தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோரின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிக்கும் குரலாக வரளாற்றில் மாறிவிட்டது. ஒரு வழி மட்டுமே சரியானது என்று கூற தயாமோகனும், பத்மனாதனும் அவர்களுக்கு பின்னலிருப்போரும் யார்? எதிரி ஆயுதங்களோடு நிற்கவும், அமைதி வழியில் உங்கள் போராட்டத்தை தொடருங்கள் என்று கூறுவது எதிரியிடம் சரணடையுங்கள் என்று கூறுவதன்றி வேறென்ன?

ஆகவே, தமிழ்வின், புதினம் குழுவினர் விடுதலைப்புலிகளின் தலைமையைக் கைப்பற்றும் நோக்குடனும், சரணாகதி மூலம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போன்றதொரு வகையாக மாறமுடியும் என்ற தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிகொள்ளவும் முதலாவதாக தேசியத்தலைவரின் ஆளுமையிலிருந்து தமிழர்களை அந்நியப்படுத்த முயல்கின்றனர். இதற்காக தேசியத்தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இறுதி வணக்கம் செலுத்தத் தூண்டுகின்றனர். இரண்டாவதாக இனிவரும் காலம் ஈழப்போரின் 3-ம் காலம் என்று கூறுவதன் மூலம் தந்தை செல்வா காலத்திற்கும் விடுதலைப்புலிகளின் காலத்திற்கும் இடையேயான அரசியல் தேவைகளின் வேறுபாட்டை மறைத்து வரலாற்று திரிபுவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் ஈழப்போர் என்று வகைப்படுத்தப் படுவதும் தந்தை செல்வாவின் கால நிகழ்வுகளும் ஒன்றுதான் என்று நிறுவி வரலாறு திரும்பும் என நம்பச்செய்து பழைய அமைதிவழிப்பாதைதான் இனி ஒற்றை வழிப்பாதை எனக்காட்டுகின்றனர். அமைதி வழி அரசியலையும், ஆயுதப்போரையும் தீர்மானிக்கப்போவது புதிய தலைமுறையும், களமாடும் புலிகளும் அவர்களுக்கு எத்ரான சிங்கள இனவாதிகளும்தான் என்பதை மறைக்கின்றனர். மூன்றாவதாக ஆயுதங்களுடன் நிற்கும் எதிரியிடம் அமைதிவழியில் சரணடையச்சொல்வதன் மூலம் எதிர்வரும் காலக்கட்டத்தில் போராட்டத்தைத் தொடர்வதற்கான புதிய வாய்ப்புக்களை மறுதலிக்கின்றனர். சரணாகதி வழியில் போன டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும், ஆனந்த சங்கரியும் எந்த போராட்டத்தை தொடர்ந்தனர் என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இந்த புதினம், தமிழ்வின் குழுவினருக்கு உடைந்து நொறுங்கிய ஈழத்தமிழர்களும், ஊமைகளாக கிடக்கும் தமிழ்நாட்டின் போராட்ட சக்த்திகளும் சேர்ந்து கடந்த 37 ஆண்டுகளாக சளைக்காமல் போராடிய மாவீரன் பிரபாகரனின் வழியில் சொல்ல வேண்டிய பதில் இதுதான்:

“வரலாறு திரும்புவதில்லை;

நாம் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாம என்பதை தீர்மானிக்கபோவது எதிரிதான்!”.

அது வரையிலும் செங்கொடிக்கு எதிரானவர்கள் செங்கொடியையே தூக்கிகொண்டு வருவது போல புலிக்கொடிக்கு எதிரானவர்கள் புலிக்கொடியையே தூக்கிகொண்டு வருவார்கள் என்பதை தமிழர்கள் மறக்காமல் தங்கள் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

————————–

நிலவரசு கண்ணன்

வீரத்தமிழன் முத்துக்குமார் பேரவை

தமிழகம்

‘தமிழ்வின்’ அமைக்கும் சரணாகதி களம்

vmp3

சிங்களவர்களின் கால்களை நோக்கி ‘ஓரடி முன்னே’!

‘தமிழ்வின்’ இணையதளத்தை மையமாகக் கொண்டியங்கும் ஒரு குழு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையைக்கைப்பற்றவும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் சரணாகதி படுகுழிக்குள் தள்ளவும் முனைந்து செயல்படுகிறது. இதனை நான் கடந்த மே 24-ம் தேதி அனுப்பிய மின்னஞ்சல் செய்தியிலேயே சுட்டிக்காட்டியிருந்தேன். தேசியத்தலைவர் இறந்து விடவில்லை என்று மே 19-ம் நாள் அறிவித்த புலிகளின் பன்னாட்டு பேச்சாளர் செல்வராசா பத்மனாதன் மே 24-ம் நாளன்று அவர் இறந்து விட்டார் என்று உறுதி செய்வது போல தாமே ‘அதிகாரப்பூர்வ’ செய்தி ஒன்றை வெளியிட்ட அறிக்கையை ‘தமிழ்வின்’ மட்டுமே வலிந்தும் பல நாட்கள் பதிப்பித்தது. துரோகியாக மாறிப்போன செல்வராசா பத்மனாதனோடு ஒரு குழு ‘தமிழ்வின்’னை மையமாகக்கொண்டு எதிரிகளின் கொலைக்கரங்களில் தமிழர்கள் சரணடையும் நிலைப்பாட்டை திணித்து வருவது இப்போது தெளிவாகியுள்ளது. அண்மையில் ‘தமிழ்வின்’ பதிப்பித்துள்ள சரண்தவராஜா என்பவர் எழுதியுள்ள ‘ஈரடி பின்னே…ஓரடி முன்னே’ என்ற கட்டுரையானது இதனை உறுதி செய்கிறது.

சரண்தவராஜா தனது கட்டுரையில் தகவல்வெளிப்போரின் மூலம் இலங்கை மற்றும் இந்திய அரசுகள் எதைச்சாதிக்க விரும்பிகின்றனவோ அதை அப்படியே வழிமொழிந்து எதிரிகளின் தற்போதைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து போராளிகளும் ஈழத்தமிழர்களும் சரணாகதி அடைந்து பொது மன்னிப்புக் கோரும்படி தூண்டுகிறார். இவ்வாதத்திற்கு அடிப்படைகளாக அவர் முன்வைக்கும் கருதுகோள்கள் ஆர்வமூடுபவையாக உள்ளன. முதலாவதாக அவர் தகவல் வெளிப்போரின் தன்மைகளைக் குறித்து தன் பொன்னான கருத்துக்களை உதிர்க்கிறார். அதாவது சிறீலங்கா அரசின் தகவல்வெளிப்போரும், தேசியத்தலைவரின் இறப்பு குறித்த செய்திகள், தயா மாஸ்டர் ஜார்ஜ் மாஸ்டர் ஆகியோர் வழங்கும் தகவல்கள் புலம்பெயர் தமிழர்களிடையே குழப்பத்தையும் மோதல்களையும் உண்டாக்குகின்றனவாம். நல்லது. தேசியத்தலைவரின் இறப்பு குறித்த செய்தியை தானே சிந்திக்கும் ஆற்றல் பெற்ற எவரும் இதுவரை நம்பவில்லை. தயாமாஸ்டரும் ஜார்ஜ்மாஸ்டரும் மருத்துவசாலையிலிருந்து கைது செய்யப்பட்டார்கள். பெண்புலித்தளபதி தமிழினியும் கைது செய்யபட்டதாக அறிகிறோம். வேறெந்த தலைவரும் கைது செய்யப்பட்டதை சிறீலங்கா அரசே உறுதி செய்ய முடிய வில்லை. இந்த மூன்று தலைவர்களை விட அதிமுக்கியம் வாய்ந்த வேறு மூன்று தலைவர்கள் சிறீலங்கா அரசிடம் வெகு காலத்திற்கு முன்பே சரணடைந்து விட்டனர். அவரகள் வேறு யாருமில்லை. கருணா, டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி ஆகியோர்தான். இவரகள் சரணடைந்ததால் புலம்பெயர் தமிழர்களிடம் எவ்வித்த பாதிப்பும், பிளவும், மோதலும் இடம்பெறவில்லை. தயாமாஸ்டரும், ஜார்ஜ் மாஸ்டரும், தமிழினியும் இவர்களைப்போல் துரோகிகளும் இல்லை. எனவே இவர்களின் கைது புலம்பெயர் தமிழர்களிடம் எந்த குழப்பத்தையும் ஏர்படுத்தாது என்பது தெளிவு. ‘தமிழ்வின்’ கூட்டம் வலிந்து புலம்பெயர் தமிழர்களிடையே ஒரு குழப்பநிலை உள்ளது போன்ற தோற்றத்தை உண்டாக்க முனைவது தெரிகிறது.

போரின் முடிவும், ஐக்கிய நாட்டவையில் சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்ததும் எதிர்தரப்பை உற்ச்சாகப்படுத்தி இருக்கின்றன, விடுதலைப்புலி என்ற நாமத்தையே உச்சரிக்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது என்கிறார் சரண்தவராஜா. எதிரி என்ன சொல்கிறானோ அதனை ஏற்றுக்கொண்டு தலையாட்டுவோம் என்கிறார் தவராஜா. அதற்கு மேல் அவரால் சிந்திக்க முடியவில்லை. போரின் முடிவு உலகத்தமிழர்களின் இயக்கத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை. ஈழமக்களுக்கு பேரிழப்பு நேரிட்டிருக்கிறது. ஆனால் புலிகளின் செல்வாக்கை உடைத்து விட்டதாக சிறீலங்கா அரசு பரப்புரையில் ஈடுபட்டாலும், அவர்களின் உலகவலைப்பின்னல் அப்படியே இருப்பதாக சிறீலங்கா அரசின் வெளியுறவு அமைச்சர் பொகலகாமாவே ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போது சிறீலங்கா அரசின் போர் என்பது புலிகளின் அந்த வெளிப்புறக் கட்டமைப்பை நோக்கித்தான் நீண்டு வருகிறது. புலித்தலைவர்களோடு தொடர்புடைய வெளிநாட்டினரை இனம்காண சிறீலங்கா அரசு முயன்று வருவது கண்கூடு. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஐ.நாவில் சிறீலங்காவின் தீர்மானம் வெற்றி பெற்றாலும் மேற்கு நாடுகள் அதன்மீது பொருளாதாரத்தடைகளை விதிக்க முயற்சிப்பதை கவனிக்க வேண்டும்.

அதே வேளை நான்காம் ஈழப்போர் உலகத்தமிழர்களின் மீது ஏர்படுத்திய தாக்கம் தொய்வின்றி இன்று வரை தொடர்ந்தும் வருகிறது. இந்த  உலக எழுச்சியானது விடுதலைப்போரின் இரண்டாம் தலைமுறையினரால், கடந்த இருபத்தி ஐந்தாண்டுகளுக்குள் பிறந்தவரகளால் முன்னின்று நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த எழுச்சி இன்னும் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்று பகுத்தறிவோடு எதிர்பார்க்கலாம். அதுதான் நான்காம் ஈழப்போர் தமிழர் விடுதலை இயக்கத்தில் ஏற்படுத்தி இருக்கும் திருப்புமுனை. இந்த திருப்புமுனை எழுச்சி ஒரு வடிவத்தை மட்டும் எடுக்காது. ஈழத்திலும், தமிழகத்திலும், உலகத்திலும் பல வடிவங்களை எடுக்ககூடியது. ஆனால் இந்த எழுச்சியை எவ்வாறேனும் ஒடுக்கி விட வேண்டும், புலித்தலைமையிடமிருந்து தமிழர்களை எவ்வாறேனும் பிரித்து விட வேண்டும் என்று சிறீலங்கா அரசு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இதற்க்காக அது தமிழர்களுக்குள்ளே ஒரு துரோகிகளின் தலைமையை ஏற்படுத்தத் தயங்காது. இதனை எதிர்பார்த்தோ அல்லது சிறீலங்கா அரசுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்டோ என்னவோ ஒரு கூட்டம் அவசரம் அவசரமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தக்கூட்டத்தின் உள்ளக்கிடக்கையை பத்மனாதன் விரைந்து அறிவித்தார். தலைவர் இறந்து விட்டதாக அறிவித்தார். புலிகள் இனி ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். முதற்கட்டமாக சிறீலங்கா அரசு அதனை நிராகரித்திருந்தாலும் புலிகள் பெயரில் ஒரு டம்மி தலைமையை உருவாக்க வேண்டிய தேவை சிறீலங்கா அரசுக்கும் துரோகக்கூட்டத்திற்கும் உண்டு. எனவே அதற்குரிய தளத்தை விரிவாக்கிட சிறீலங்கா அரசும், துரோகக்கூட்டத்தினரும் முயற்சித்தபடியே இருப்பார்கள். சரண்தவராஜா போன்றவர்கள் இந்த முயற்சிக்கு முதுகெலும்புகளாக இருப்பவரகள் என்பதை அவரது கட்டுரையை படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

சரண்தவராஜா உலகத்தமிழர்களின் எழுச்சியை எவ்வாறெல்லாம் திரிக்கிறார் என்பதை அக்கட்டுரையில் வெளிப்படும் அவரது கருத்துக்கள் காட்டுகின்றன. முதலில் விடுதலைப்புலி என்ற நாமத்தையே உச்சரிக்க முடியாத நிலைமை தோன்றியிருப்பதாக கூறுகிறார். பின்னர் விடுதலைப்புலிகள் என்ற நாமம் இருக்கக்கூடாது என்றே புலம்பெயர் அறிவுஜீவிகளும் மாற்றுக்குழுக்களும் விரும்புவதாகக் கூறுகிறார். பிள்ளையான் குழுவினரோ கருணா குழுவினரோ அப்படித்தான் விரும்புவார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அவர்கள் ஏற்படுத்திய மாற்றுக்குழுக்கள் எல்லாம் ராஜபக்சேவின் மிரட்டலுக்கு அடிபணிந்து பயந்து தங்கள் மாற்றுக்குழுக்களை கலைத்து விட்டு ராஜபக்சேவின் சுதந்திராக்கட்சியிலேயே போய் சேர்ந்து கொண்டனர் என்பதை இஙே கவனிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் என்ற ஒரே ஒரு பெயர்தான் சிங்கள இனவெறிக்கு ஒரே மாற்றாக இருந்தது, இருந்து வருகிறது. அதனாலேயே சிங்கள இனவெறியர்கள் விடுதலைப்புலிகளின் பன்னாட்டு வலைப்பின்னலை எவ்வாறேனும் தாக்கி விடவேண்டும் என முயற்சிக்கின்றனர். அந்த முயற்சிக்கு தோள் கொடுக்க வருகின்றனர் ‘தமிழ்வின்’ மாற்றுக்குழுவினர்!

விடுதலைப்புலிகள் என்ற பெயரே இருக்கக்கூடாது என்றுரைக்கும் இந்த  மாற்றுக்குழுவினர் இன்னொரு ஆயுதப்போராட்டம் என்பது நினைத்துப்பார்க்க முடியாதது என்றும் முடிவு கட்டிவிட்டனர். இல்லையேல் சிங்கள இனவெறியர்கள் வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்கி எடுப்பது எப்படி? இதனை தெரிவிக்கும் சரணாகதி தவராஜா ஜனநாயக வழிமுறையில் இனி இறுதி இலக்கை நோக்கி நகர வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார். அதென்ன ஜனநாயக வழிமுறை? சிறீலங்கா அரசு நடத்தப்போகும் ஊராட்சி மன்ற தேர்தல்களில் பங்கெடுப்பதாம். அதுவும் விடுதலைப்புலிகள் முன்பு உருவாக்கிய அரசியல் கட்சியான ‘விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி’ என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடவேண்டுமாம். ஏன் விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியின் பெயரில் போட்டியிட வேண்டுமாம்? இல்லையேல் யார் வெற்றி பெறமுடியும்? விடுதலைப்புலிகள் என்ற பெயரை விட்டுவிட்டு ஈழமண்ணில் யாரும் வெற்றி பெற முடியாது என்பது உலகறிந்த விடயம். விடுதலைப்புலிகள் என்ற பெயரையே பயன்படுத்தும் நிலைமை இல்லை என முதலில் சொன்னவர், பின்னர் பல்டியடித்து விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறுவது விடுதலைப்புலிகளின் தலைமையை தாங்கள் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

அதுசரி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் மாற்றுக்குழுவினருக்கு அங்கீகாரம் கிடைத்து விடுமா? கருணா குழுவினருக்கும், பிள்ளையான் குழுவினருக்கும் எங்கே கிடைத்தது அங்கீகாரம்? ஈழத்தில் அல்ல,  சிங்களத்தில்தான்! அதுவும் அவர்கள் தங்கள் மாற்றுக்குழுக்களை கலைத்து விட்டு எவ்வித அடையாளமுமின்றி சிங்களக்கட்சியில் போய்ச்சேர்ந்த பின்னர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரணாகதி தவராஜா ஜனநாயகவழியில் இறுதி இலக்கை நோக்கி நகர வேண்டும் என்று கூறும்போது எந்த இலக்கை நோக்கி மாற்றுக்குழுவினர் நகர விரும்புகின்றனர் என்பது இங்கே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி போன்றோர் எந்த இலக்கை இநோக்கி நகர்ந்தார்களோ அந்த இலக்கை நோக்கித்தான். அதுவே அவர்களது இறுதி இலக்கு. அந்த இலக்கினை அடையும் போது போரில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் போராளிகள் ஆகியோரை கைவிட்டுவிடுவார்களா சரணாகதிக்குழுவினர்? மாட்டாவே மாட்டார்கள். அந்த அளவுக்கு கல்மனம் படைத்தவர்கள் அல்ல மாற்றுக்குழுவினர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் அவர்களிடம் தீர்வு இருக்கிறது. ஆம், சரணாகதி தவராஜா கூறுகிறார்: போராளிகளும் மக்களும் பொதுமன்னிப்பு பெறவேண்டும்! எவ்வளவு அருமையான தீர்வு! சுமார் முப்பது ஆண்டுகளாக வீரஞ்செறிந்த விடுதலைப்போர் நடாத்தி ஈழத்தமிழரின் இழந்த வரலாற்றை மீட்டெடுத்த போராளிகளும் அவர்களுக்கு இறுதிவரை துணையிருந்த மக்களும் சரணடையவேண்டும். அவர்கள் சரணடையாவிட்டால் மாற்றுக்குழுவினர் சிங்கள அரசு வீசும் எலும்புகளை நிம்மதியாகப் பொறுக்கிக்கொள்ள முடியாதல்லவா?

‘தமிழ்வின்’ குழுவினர் ஒரு தீர்மானகரமான திட்டத்துடனயே களத்தில் இறங்கியிருப்பதாகவே அவர்களது கட்டுரை புலப்படுத்துகிறது. தங்கள் சரணாகதி – பொதுமன்னிப்பு படலத்தை நிறைவேற்றி சிங்களவன் வீசும் எலும்புத்துண்டுகளை பொற்றுக்கிகொள்ள இப்போதிருந்தே பேரம்பேசியாக வேண்டுமே! தமிழ்வின் மாற்றுக்குழுவினர் அதற்கும் ஒரு தலைசிறந்த திட்டம் வைத்திருக்கின்றனர். சரணாகதிதவராஜா சொல்கிறார்: ஈழ நிலைமைகள் குறித்து ஆராய அனைத்துலக ஆலோசனை சபை ஒன்றை உருவாக்கவேண்டுமாம்! அவ்வாறு செய்தால்தானே தங்கள் துரோகத்தனத்திற்கு அனைத்துலக அங்கீகாரத்தைக் கோர முடியும்! தமிழ்வின் மாற்றுக்குழிவினர் விடுதலைப்புலிகளின் தலைமையை கைப்பற்றவும், விடுதலைப்புலி என்ற பெயரையே இல்லாதொழிக்கவும், சுதந்திராக்கட்சியில் போய்ச் சேர்ந்துகொள்ளவும், சிங்களவன் வீசும் எலும்புத்துண்டுகளை வீசியெடுக்கவும் முன்வைக்கும் அருமையான திட்டம் இதுதான். இத்திட்டத்தினூடே விடுதலைப்புலிகளின் போராட்டம் நிகழ்த்தியிருக்கும் பல அரிய சாதனைகளை பாராட்டவும் தயங்கவில்லை. கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாக தமிழினத்தின் அடையாளத்தை நிறுவுவதில் விடுதலைப்புலிகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் அவர்கள் செய்திருக்கும் தியாகமும் அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிடக்கூடியவையல்ல.

ஆனால் அதெற்கென்ன செய்வது? சரணாகதி கூட்டத்திற்கு இடத்தை சிங்களவன் கைகளில் ஒப்படைக்க வேண்டும், அவன் வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்கிக்கொள்ள வேண்டும். அவ்வளவே. எனவே இனி தனிநாட்டுக்கோரிக்கையை கைவிட்டுவிட வேண்டும். ஆனால் அதனை சும்மா போகிற போக்கில் விட்டுவிட்டால் பெருந்திரளான மக்கள் ஆதரவு கிடைக்காது. எனவே சொல்கின்றனர் ‘தமிழ்வின்’ குழுவினர்: “தனி நாடு கோருவதற்கான காரணங்கள் மறைந்து விடவில்லை; அப்படியே உள்ளன”. இது தமிழ்வின் மாற்றுக்குழுவின் சார்பில் சரணாகதி தவராஜா சொல்வதில்லை. இன்றைக்கு நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இதேபோல் தனி நாட்டுக்கொரிக்கையை முன்வைத்து அரசியல் நடத்திய தி.மு.க.  தலைவர் அண்ணாதுரை1962-ம் ஆண்டு நேரு தலைமையிலான நடுவணரசு ‘பிரிவினை தடைச்சட்டம்’ கொண்டு வந்தவுடன் தனிநாட்டுத் தாகம் தீர்க்க தேச ஒற்றுமை குளிர்பானம் அருந்தியபடி கொள்கையை குழி தோண்டிபுதைத்து விட்டு அண்ணாதுரை சொன்னார்: “தனிநாடு கோருவதற்கான காரணங்கள் மறைந்துவிடவில்லை; அப்படியே இருக்கின்றன”. இனத்துரோகிகளுக்கு காரணங்கள் அப்படியே இருக்கும். எதிரிகளிடம் சரணடைந்து பதவி சுகம் பெறுவது வரை இனத்துரோகிகள் அவ்வாறு சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எதிரிகளிடம் சரணாகதி அடைவார்கள். எலும்புத்துண்டுகளை பொறுக்கிக்கொள்வது வரை மாற்றுப்பாதை, ஜனநாயகப்பாதை எனப் பசப்புவார்கள். எதிரி வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்கியெடுத்த பின்னர், பதவி நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டபின்னர் சரணாகதிப்பாதையே சமத்துவப்பாதை என சாதிப்பார்கள்.

‘தமிழ்வின்’னை மையமாகக் கொண்டு சரணாகதிப்பாதையை திணிக்க முயலும் கூட்டத்தின் குரலை ஒலிக்கும் சரணாகதி தவராஜா முன்வைக்கும் அனைத்துலக ஆலோசனை சபையானது வன்முறையைக் கைவிடுவதாக அறிவித்து, புலிகளுக்கும் பொதுமக்களுக்கும் பொதுமன்னிப்பு வாங்கிக்கொடுத்து, மிச்சமீதி இருக்கும் விடுதலை வேட்கையை குழிதோண்டிபுதைத்து விட்டு ராஜபக்சேவின் காலைநக்கி சில பதவிகளை சில துரோகிகள் பெறுவதற்கான கருவியாகவே செயல்படும் என்பதில் அய்யமில்லை. ‘தமிழ்வின்’ அதற்கான களம் அமைத்துக்கொண்டிருக்கிறது என்பதிலும், சரணாகதி தவராஜாவின் ‘ஈரடி பின்னே, ஓரடி முன்னே’ என்ற கட்டுரையில் ஓரடி முன்னே என்பது சிங்களவனின் கால்களை நோக்கிய ஓரடி முன்னே என்பதுதான் என்பதும் யாருக்கும் புரியாமல் போகாது.

————————–

நிலவரசு கண்ணன்

வீரத்தமிழன் முத்துக்குமார் பேரவை

தமிழகம்

இனியாவது பேசுங்கள்

clip_image001

latuff_cartoon

‘Historic’ doze [Carlos Latuff, Brazil]
அனைத்துலகம் ஈழப்பிரச்சினையில் பாராமுகமாக இருப்பதை கண்டித்து www. tamilnet.com வெளியிட்ட கருத்துப்படம்.

ஐந்து சிங்கங்கள் எதிர்கொள்ளும் ஐந்தாவது ஈழப்போர்

இந்திய அரசானது நான்காவது ஈழப்போரை நகர்த்தி நகர்த்தி முடிவு நிலைக்கு கொண்டுவரும் கட்டத்தை
அடைந்திருக்கின்றது.துணைக்கண்டத்தின் தென்மூலையில் புலிகளைப்போண்ற ஒரு விடுதலை அமைப்பு இருக்கக்கூடாது என்ற டெல்லியின் திட்டத்தை சிறீலங்கா அரசைப் பகடையாகப் பயன்படுத்துவதன் மூலம் கச்சைதமாக நிறைவேற்றியிருக்கிறது இந்திய அரசு. தமிழக அரசின் முதலைமைச்சரோ கடைசியாகத்தன் முகமூடியை கழட்டி எறிந்து விட்டார். எல்லா நாடகங்களையும் நடத்தி பார்த்து விட்டு இறுதியில் ‘பிரபாகரன் கொல்லப்பட்டால் வருத்தப்படுவேன்’ என்று அட்வான்ஸ் அஞலி செலுத்தி விட்டார். ஏற்கனவே ஒரு இரங்கல் கவிதை எழுதி வைத்திருந்தாலும் வைத்திருப்பார். அதனை வெளியிடும் நேரத்தை ஆவலோடு எதிர் நோக்கிர்யிருப்பார். காலம் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்க வில்லை. முன்னெப்போதோ ஒரு முறை எம்.ஜி.ஆர். புலிகளை ஆதரித்தார், வளர்த்தார் என்பதற்காக புலிகளையும் பிரபாகரனையும் புதைகுளிக்குள் தள்ளிவிட வேண்டும் என்ற தன் கொடூர ஆசையை மிகக் கேவலமான அரசியல் மூலம் வெளிப்படுத்தி வருகிறார் கருணாநிதி.
 
நான்காவது ஈழப்போர் காலம் முழுவதிலும் புலிகளுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது போலத் தோன்றினாலும், உலகம் முழுவதிலும் புலிகளுக்கும் ஈழவிடுதலைக்கும் ஆதரவான போக்கு தலைதூக்கியிருப்பது முன்னெப்போதுமில்லாதது. குறிப்பாக நார்வேயில் இலங்கை தூதரகம் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்து பேசியது போக, தற்போது வெள்ளை மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ‘சிறீலங்கா இருநாடுகளாக பிரியக்கூடிய வாய்ப்பிருப்’பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது சிறீலங்கா அரசை விட இந்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கிர்யிருக்கும். அமெரிக்கா இன்று சூசகமாக தெரிவிப்பது பின்னாளில் தானே மூக்கை நுழைப்பதற்கான அறிவிப்பு மணியாகும். இதனால் இந்தியாவும் தனி ஈழத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பாட்டால் சீனாவோடும், பாக்கிஸ்தானோடும் முரண்பாடு கூர்மைப்படும். தெற்க்காசியப்பகுதியில் தனது எதிரியான சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க அப்போது அமெரிக்கா இந்தியாவை பகடையாகப் பயன்படுத்தும்.
 
ஆக மொத்தத்தில் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடான புலிகளை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை நான்காவது ஈழப்போரின் முடிவோடு முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதலாம்.  அமெரிக்காவும் தன் நிலைப்பாட்டினை மாற்றி வருகிறது. அதே வேளையில் அனைத்துலகப்போக்கும் ஈழம் அமைவதற்க்கு ஆதரவாக திரும்பியிருக்கிறது. இந்த பொன்னான சூழ்நிலையை ஏற்படுத்தத்தானே புலிகள் பின்வாங்கினர், பின்வாஙினர், பின்வாங்கிக் கொண்டே இருந்தனர். கடைசிவரைப் பின்வாங்கினர், தங்கள் போராளிகளையும் தளவாடங்களையும் பத்திரப்படுத்திக்கொண்டே. ஆனால் வெற்றிகளிப்பில் மிதந்த இலங்கை, இந்திய அரசுகள் அப்பாவி மக்களை நாள்தோறும் குண்டுவீசி கொல்வதன் மூலம் புலிகளை அழிப்பதாக நினைத்து பெருமைப்பட்டவண்ணமிருந்தனர். ஆனால் உலகின் கோபமோ இந்திய அரசின் நிலைப்பாட்டை பொய்யாக்கி, இலங்கை அரசிற்கெதிராக திரும்பியிருக்கிறது.
 
இந்த சாணக்கியத்தை சாதித்த புலிகளுக்கு ஆதரவாக பலநாடுகளிலும் பலலட்ச்சக்கணக்கான தமிழர்கள் களம் புகுந்து புலிக்கொடியை கையிலேந்தி போராடி வருகின்றனர். ஈழ விடுதலைப் ப்போராட்டம் உலக அளவில் மக்கள் திரள் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. இது டெல்லிக்கு கசப்பாகத்தானிருக்கும். ஈழத்தில் புலிக்கொடியை இறக்கினோம். ஆனால் மற்ற நாடுகளில் அது உயர்ந்து பறக்கிறதே! ஏற்கனவே மலேஷியாவில் புலிகளின் தலமையகம் அமையப்போவதாக கூறப்படுகிறது. புலிகளின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு இது பன்னாட்டு அங்கீகாரத்தை வழங்கி அவர்களை வெளிநாட்டிலிருந்து போராடும் தலைவர்களாக மாற்றி விடும். அதே வேளையில் ஈழத்தில் ஆயுதம் தரித்த பல்லாயிரக்கணக்கான புலிகள் காடுகளிலிருந்து கெரில்லாபோர்முறைக்கு மாறுவர். ஆக நான்காவது ஈழப்போரின் முடிவு ஐந்தாவது ஈழப்போரின் தொடக்கமாகவும், பன்னாட்டளவில் புலிகளை அங்கீகாரம் பெற்ற அமைப்பாகவும் உயர்த்தும். இதுவரையில் இந்திய அரசு கடைப்பிடித்து வந்த சிறீலங்காவுக்கான வெளியுறவுக்கொள்கையை தலைகீழாக மாற்றிப்போடும். கருணாநிதியின் எண்ணத்தில் மண்ணள்ளிப்போடுவதைப்போல பிரபாகரன் இன்னும் உயிரோடிருப்பதால் வெளிநாடு ஏதேனும் ஒன்றிலிருந்தோ அல்லது ஈழத்தின் மற்றொரு பகுதியிலிருந்தோ ஈழப்போரை இயக்குவார். பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, பொட்டு அம்மான்,  சூசை போன்றோர் முதல் தளபதிகளாக இருந்து வழிநடத்துவர். அந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் வீழ்ச்சியடையாத இயக்கமாகவே விளங்கும் – கருணாநிதியின் காலத்துக்குப் பின்னும்!
 
புலிகள் கெரில்லாப்போரளிகளாக மாறியபிறகு ஈழத்தில் புதிய காட்ச்சிகளை உருவாக்க டெல்லி முனைந்து செயல்படும். 1987ந் நிலைமைகளை மீளக்கொண்டுவரவே முதலில் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும். பல்வேறு ஒட்டுக்குழுக்கள் உருவாக்கப்படும். கருணா, டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி போன்றோர் அத்தகைய ஒட்டுக்குழுக்களை முன்னிலைப்படுத்துவர். இவர்கள் சார்பில் 1987-ல் ராஜீவ்காந்தியினால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமோ, அல்லது அதைப்போன்ற மற்றொரு ஒப்பந்தமோ முன்மொழியப்பட்டு, வழிமொழியப்படும். முடிவில் முன்பு வரதராசப்பெருமாள் முதலமைச்சரானது போல ஒன்றிரண்டுபேர் முதலமைச்சர்களாவர். பின்னர் தமிழகத்தைப்போன்ற ஓட்டுப்பொறுக்கி அரசியல் ஒன்று சுயநிர்ணய உரிமையின்றியே திணிக்கப்படும். ஆனால் ஈழமக்களும், புலிகளும் இதுபோன்ற நடைமுறையை ஏற்றுக்கொள்ள மறுப்பார்களாகையால் இந்திய சிறீலங்கா ஒட்டுக்குழுக்கள் அழுத்தத்தை சமாளிக்க வன்முறையை கையாளுவர். அவர்களால் புலிகளின் புதிய கெரில்லா தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் முன்பு வரதராசப்பெருமாள் ஓடிப்போனதைப்போல புதிய முதலமைச்சர்களூம் காணாமல் போவார்கள். அல்லது புலிகளாலோ, சிறீலங்கா அரசாலோ, உட்கட்சி பூசலாலோ கொலை செய்யப்படுவார்கள் (கருணா கட்சித் தலைவர் கொலைசெய்யப்பட்டது போல!).
 
ஆக நிம்மதியற்ற சூழ்நிலையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் புலிகளின் கெரில்லாத்தாக்குதல் நீடித்தவண்ணமிருக்கும். அப்போது டெல்லி என்ன செய்து கொண்டிருக்கும்? இன்றைக்கு ஐக்கிய நாட்டவையும், அமெரிக்கா போன்ற நாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இங்கிலாந்து, பிரான்சு, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளும் ஈழத்திற்க்காகக் குரல் கொடுக்கின்றன. மேற்க்குலக நாடுகள் யாவும் ஈழ விடுதலையின் பக்கம் சாயும்போது அது தீர்மானகரமான நெருக்கடியை டெல்லிக்கு உருவாக்கும் என்பது உறுதி. அந்நிலையில் தன்னிச்சைப்படி ஒரு பொம்மை அரசை ஈழத்தில் நிறுவிப்பார்க்கவே இந்தியா ஆசைப்படும். இப்போது புலிகளை பொறுத்தவரை ‘ஈழமே இந்தியாவின் தென்மூலையில் பாதுகாப்பான நண்பனாக விளங்கும்’ என்ற அரசதந்திர நிலைப்பாடு இந்தியாவின் பொம்மை அரசை வீழ்த்துவதற்க்காகவும், மேற்குலக நாடுகளின் அதிகாரப்பூர்வ ஆதரவைப்பெறவும் மாறும் என்பது திண்ணம். இந்தபோக்கு தமிழகத்திலிருந்தும் இந்தியாவிற்கு சுயாட்ச்சிக் கோரிக்கையின் அடிப்படியிலான நெருக்கடியைத் தோற்றுவிக்கும். எது நடக்கக்கூடாது என்று இந்திய அரசு எதிர்ப்பார்த்ததோ அது நடக்கக்கூடும். இவ்வாறு இந்தியாவின் நான்கு சிங்கங்களும் (இந்திய அரசின் இலச்சினையில் உள்ள நான்கு சிங்கங்கள்) சிறீலங்காவின் வாளேந்திய சிங்கமும் ஆக ஐந்து சிங்கங்களும் எதிர்கொள்ளப்போகும் ஐந்தாவது ஈழப்போர் நான்காவது ஈழப்போரை விட உக்கிரமானதாகவும், நீண்ட காலம் நீடிப்பதாகவும், பலநாடுகள் பங்கெடுப்பதாகவும், தமிழ்நாட்டுக்கு புதிய வாசல்களைத் திறந்து விடுவதாகவும் அமையப்போவது ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத்தமிழர்களுக்கும் நன்மை பயப்பதாகவே அமையும்.
 
நிலவரசு கண்ணன்.