மாவீரர் நாள்: புதிய வாசல்களும், புதிய பாதைகளும்

தலைவர் அண்மையில் இல்லாத நிலையில் வரும் மூன்றாவது மாவீரர் நாள் இன்று. இந்த மாவீரர் நாள் முந்தைய இரு மாவீரர் நாள் வந்த காலங்களை விட வேறுபட்டதாக இருக்கிறது. முத்தைய இரு ஆண்டுகளும் கே.பி, மற்றும் நாடு கடந்த தமிழிழ அரசு என்ற இரு பரபரப்பு செய்திகளுடன் கடந்து சென்றிருக்க, இந்த ஆண்டு (தலைவர் அண்மையில் இல்லாத) மூன்றாவது மாவீரர் நாள் பல புதிய வாசல்கள் திறக்கப்பட்ட வேளைகளில் வந்திருக்கிறது. அந்தப் புதிய வாசல்களாவன:
ஐ.நா. போர்க்குற்ற அறிக்கை வெளியானது, துரோகி கருணாநிதி தேர்தலில் தோற்றோடியது, வெளிநாடுகளில் ராஜபக்சேயின் வருகைகள் ரத்தானது – தமிழர்களின் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது, தமிழகத்தில் 80-களில் இருந்ததைப் போல தமிழ் தேசிய எழுச்சி ஏற்பட்டு வருவது, அதனால் மூவர் தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது, ஈழத்தில் கிரீஸ் பூதங்களின் முயற்சி மக்கள் போராட்டங்களின் முன் தோல்வியடைந்திருப்பது, அங்கு மக்கள் எழுச்சி பலகோணங்களில் ஏற்பட்டுக் கொண்டே இருப்பது – மக்கள் ராணுவத்தோடு சில இடங்களில் மோதியது, யாழ் பல்கலையில் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை தலைவர் பிறந்த நாளில் கலந்து கொள்ள வற்புறுத்தியது…இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

மேற்கண்டவற்றில் முதல் நான்கும் தமிழகத்தின் மூலமாகவும், மற்றவை ஈழ மக்கள் மூலமாகவும் நிறைவேறியிருக்கின்றன. இவை உணர்த்தும் முதல் செய்தி என்னவெனில் தமிழகமும், ஈழமும் தத்தம் தாயக மண்ணில் அசைவற்றுக் கிடக்க வில்லை என்பதே. அதிலும், ஈழச் சொந்தங்கள் போருக்குப் பின் எதுவும் பேச முடியாத நிலையில் தள்ளப்பட்டார்கள் என்ற பேச்செல்லாம் பறந்து போய், கிரீஸ் பூதங்களைத் தோற்கடித்து வீதிப்போராட்டங்களை நடத்தும் வலுவுடன் வெளி வருகின்றனர் என்பது மகிழ்சிகரமான விடயம்.

இந்த மகிழ்சிகளினூடே மற்றொரு மகிழ்சியும் வந்து சேர்ந்திருக்கிறது. இந்திய நடுவணரசானது இலங்கைப்படையினரால் கடலில் தாக்கப்படும் தமிழக மக்களை காப்பாற்ற முடியாது என வெளிப்படையாக அறிவித்து விட்டது. இந்த மகிழ்சிதான் மற்றெந்த மகிழ்ச்சியை விடவும் முக்கியமானது. ஏனெனில் ‘தமிழக மக்களே இனி இந்தியா உங்கள் நாடு இல்லையென்றும், இந்திய ராணுவம் உங்களுக்கானது இல்லை’ என்றும் விளங்காதவர்களுக்கும் விளங்க வைக்கும் அறிவிப்பு இது. தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்குமான நீண்ட காலமாக தொடர்ந்து வரும் ஒரு உளவியல் போர்க்களம் இந்த வெளிப்படையான அறிவிப்பின் மூலம் திடப்பட்டிருக்கிறது.

இந்தப் புள்ளியிலிருந்து தமிழகத் தமிழர்கள் எங்கு போக வேண்டும் என்பது தமிழ் தேசிய ஆற்றல்களுக்கு விளங்கியிருக்கும். அது ஈழ விடுதலைக்கு உந்து சக்தியாக இருப்பதன் விளைவாக தமிழகத்தில் தமிழ் தேசிய விடுதலை நெருப்பை வளர்ப்பதுதான். அதேவேளையில் புலம்பெயர்த் தமிழர்களின் போராட்ட வலுவே தமிழ்தேசியத் தீயை தமிழகத்தில் பற்றி எரியவைத்தும், தாயக ஈழ மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஊட்டி அவர்களை அசைவற்றுப் போக விடாமல் செய்து, செயல்படத் தூண்டி இந்த ஆண்டின் புதிய வாசல்களைத் திறந்து விட்டிருக்கிறது.

இச்சூழலில் நம்முன் உள்ள கடமைகள் மூன்று: 1) புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை பன்மடங்கு பெருக்குவது, 2) மீண்டும் வீதிக்கு இறங்கி போராட முன்வரும் தாயக மக்களை வெளியிலிருந்தும் ஊக்குவிப்பது, 3) ஈழ விடுதலையை தமிழகத்தில் முன்னெடுப்பதும், தமிழக தேசிய விடுதலை போக்கை அதில் இணைப்பதும். இவையே இந்த ஆண்டின் மாவீரர் நாளினையொட்டி திறந்திருக்கும் புதிய வாசல்கள் நமக்குக் காட்டும் பாதைகள்.
நிலவரசுக் கண்ணன்

வெற்றிக்குப் பின் வீழ்த்தலும் வீழ்தலும் – ஜெயாவின் பல்டி

ஜெயலலிதா, ஸ்பெக்ட்ரம் ஊழலை விட ஈழப்பிரச்சினை ஏற்படுத்தியத் தாக்கத்தால்தான் ஆட்சிக்கு வர முடிந்தது. ஏனெனில் கிராமத்து மக்களைப் பொறுத்த வரை, கருணாநிதி மட்டுமல்ல, ஜெயலலிதாவும், அனைவருமே ஊழல் செய்பவர்களதான். எனவே ஜெயலலிதாவை கடந்த சட்டமன்றத் தேர்தலில் கைதூக்கி விட்ட ஒரே ஆதரம் முள்ளிவாய்க்காலில் ஓடிய ரத்த ஆறுதான். ஆட்சியேற்றபின் அவரும் அதற்கேற்றாற்போல் (கருணாநிதியின் துரோகங்களை அம்பலப்படுத்துவது போல்) சட்டமன்றத்தில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக் கோரும் தீர்மானம், மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரும் தீர்மானம் என்று நிறைவேற்றி உலகத் தமிழர்களை தலை நிமிர்ந்துப் பார்க்கச் செய்தார். ஆனால் பார்ப்பான் ஆற்றோடு பொனாலும் ஆதாயமில்லாமல் போவானா? இன்று தமிழக அரசின் குரல் ஒரேயடியாக மாறி மூவரின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கில் நீதிமன்றத்தில் எதிர்நிலை எடுத்துள்ளது. சாதரணர்கள் ஜெயாவின் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அதை மையாப்படுத்தி மத்திய அரசின் சக்திகள் அவரை தன்வயப்படுத்துவதாக கூறுகின்றனர். இதுவே மூவரின் தூக்கை ரத்து செய்யக்கூடாது என்ற தமிழக அரசின் குரலாக இன்று ஒலிக்கிறது என்கின்றனர்.

உண்மை என்ன? கருணாநிதியும், ஜெயலலிதாவும் டெல்லிக்கு போனபோது பிரதமரிடமும், சோனியாகாந்தியிடமும் கருணாநிதிக்கு கிடைக்காத மதிப்பு ஜெயலலிதாவுக்குத் தரப்படுகிறது. இடையிலேயே பெங்களூரு வழக்கு. அதில் சாதகமான தீர்ப்பு வர மத்திய அரசிற்கு சாதகமாகக் குரல் கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறாரா ஜெயா? அது உண்மையென்றால் இந்த நாட்டில் நீதி மன்றங்கள் இருப்பதே கேலிக்கூத்தாகி விடும். மூவரின் தூக்குத் தண்டனையும் நிறைவேற்றப்பட்டு ஜெயா பெங்களூரு வழக்கிலிருந்து வழக்கம் போல் விடுபட்டு விட்டால், நீதி மன்றங்கள் தீர்ப்பளிக்க வில்லை என்பது நிரூபணமாகி விடும். ஆனால் இவை அப்படியே நடந்து விடுமா? டெல்லிக்கு போனவாரம் சென்ற துரோகி கருணாநிதி பிரதமரிடம் மூவரையும் தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க தான் கேட்டுக்கொண்டதாக புளிகியிருக்கிறாரே? அதன் பொருள் என்ன? பந்துகள் மாற்றி மாற்றி வீசப்படுகின்றன என்பது மட்டும் தெரிகிறது. எனவே மூவரின் உயிரும் பாதுகாப்பாக இருக்கும் என்பதும் தெரிகிறது. கருணாநிதி தூக்கிலிட வேண்டுமென்று சொன்னால் ஜெயா அவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று சீறுவதும், ஜெயா தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்று சொன்னால் கருணாநிதி மூவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறுவதும் தொடர் கதையாகும். இப்போதைய தமிழக அரசின் நிலைப்பட்டை உற்று நோக்கும்போது கடந்த ஆகஸ்து மாத முடிவில் ஜெயாவின் நிலைப்பாட்டை ஒப்பிட்டு பார்க்க வேண்டியது அவசியம். முதலில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னவர், பின்ன அவ்வாறு சொன்ன மறுநாளே சட்டமன்றத்தில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் கொண்டுவந்தார்.

இதனிடையே உயர் நீதிமன்ற நீதிபதி ‘(மூவரை தூகிலிட விதித்த) தடை தடைதான். வழக்கு முடியும் வரை தடை நீடிக்கும்’ என்று உறுதியாகக் கூறி விட்டார். ஆக களம் விரிவடைந்திருக்கிறது. காலம் நீண்டிருக்கிறது. தமிழ் தேசிய வாதிகளும் ‘படை படைதான், சளைக்க மாட்டோம்’ என்றே வழக்கு நடத்துகின்றனர். ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் கொண்டை ஊசி திருப்பு முனை சிக்கலை எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர்? இது வரை ஜெயாவைப் பயன் படுத்தியாகி விட்டது. கருணாநிதியை பயன் படுத்த முடியாது என்பதும் தெளிவு. உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெற்ற பின் ஜெயலலிதா தனது அரசியல் எதிர்காலத்தை நீட்டிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க.வை முடிந்தவரை பிளவு படுத்த அவர் மத்திய அரசோடும், காங்கிரசோடும் கை குலுக்குவார் என்பது நடக்காததல்ல. அந்த நிலையில் அவரது நிலைப்பாடு தமிழர்களுக்கு எதிராகவும், பார்பன சக்திகளுக்கு ஆதரவாகவும் அமையும். சுப்பிரமணிய சாமியும், சோ. ராமசாமியும் அவரோடு கலந்து பேசுவார்கள். அதனடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். அப்போது கருணாதி களத்தில் குதிப்பார்.ஏற்கனவே மத்திய அரசின் மீது தாங்கமுடியாத சினத்தில் இருக்கும் அவர் அப்போது முழுமையாக மத்திய அரசிற்கு எதிராகத் திரும்புவார். அப்போதும் மூவரின் உயிர் பாதுகாக்கப்படும்.

ஆக தமிழ் தேசிய வாதிகள் முன்னுள்ள இன்றைய கடமை போராட்டத்தை முன்னை விட அதி தீவிரமாக முன்னெடுப்பதன் மூலம், தங்கள் சுயநல அரசியலுக்காக ஈழப் பிரச்சினையை வைத்து சூதாடும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு துரோகக் கூட்டத்தையும் எப்படி வளைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே. தூரோகக் கூட்டங்களை பயன்படுத்துவதைப் பொறுத்தவரை சொல்வோம்: ‘நாங்கள் ஒவ்வொரு முறை உங்களை நோக்கி வரும்போதும் நீங்கள் பார்பனர்களோடு சேர்ந்து கொண்டு பத்து முறை எங்களுக்கு துரோகம் செய்வீர்கள். இருப்பினும் நாங்களே வெல்வோம்’.

தமிழரின் குரலை டெல்லியில் ஒலிக்கும் முதல்வரின் குரலை பயன் (பலப்) படுத்துவோம்

ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாட்டை நடுவணரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகவும், மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்படுவதை சீனா மற்றும் பாக்கிஸ்தான் எல்லையோரங்களில் தாக்கும்போது எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறதோ அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறிய முதல்வர் ஜெயலலிதா இன்று அதே குரலை டெல்லியில் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்திலேயே அனைத்து முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர் முன்னிலையில் இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். “காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் மக்களும், இந்நாட்டின் குடிமக்களே. நியாயமான கோரிக்கைகளைக் கூட தராமல், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன், மாநில அரசுகளை மத்திய அரசு நடத்துகிறது. இந்த லட்சணத்தில், தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் ஆண்டுதோறும் நடத்துவது என்பது ஒரு சடங்கு தானே தவிர, இதனால் பயன் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை” என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கைகள் எல்லாமே, மாநில அரசின் சுயாட்சி கொள்கை மீது நடத்தப்படும் தாக்குதல்களாகும். மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய மின்சாரம் உள்ளிட்ட வசதிகளையும் அளிப்பதில்லை. மின் உற்பத்தியையும் செய்வதில்லை. தமிழகத்தில் துவக்கப்படும் என வாக்குறுதி அளித்த அல்ட்ரா மெகாபவர் மின் உற்பத்தி நிலையம், வெறும் ஏட்டளவிலேயே உள்ளது. கிடப்பில் கிடக்கும் அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆர்வம், மத்திய அரசுக்கு வரவில்லை. 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழக நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து ஏதும் இல்லை.

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா?

தமிழக மீனவர்கள் மீது, இலங்கை ராணுவத்தினர், தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை அடித்து துன்புறுத்துகின்றனர். சில சமயங்களில் கொல்லவும் செய்கின்றனர். இலங்கை ராணுவத்தின் அட்டகாசங்களை தடுத்து நிறுத்துங்கள் என, மத்திய அரசிடம் தமிழக அரசு, பல முறை மன்றாடி கேட்டுக் கொண்டுள்ளது.ஆனாலும், பலனில்லை. தமிழக மீனவர்களின் உயிர், உடைமைகளை காப்பாற்ற, மத்திய அரசு தவறிவிட்டது. தமிழக மீனவர்கள், மத்திய அரசின் பார்வையில், ஒரு பொருட்டாகவே தென்படுவதில்லை. தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள் தான் என்பதை, மத்திய அரசு நினைக்க மறுக்கிறது.மீனவர் பிரச்னைக்காக பல முறை குரல் கொடுத்தும், பாராமுகமாகவும், பொருத்தமில்லாத அணுகுமுறையையும் மத்திய அரசு கையாண்டு வருகிறது. மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பது, இந்தியாவின் மீது நடத்தப்படும் தாக்குதல். இதற்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. தன் பொறுப்புகளை மத்திய அரசு இவ்விஷயத்தில் தட்டிக் கழிக்கிறது என்றும் முதல்வர் கூற கூற கல்லுளிமங்கன் மன்மோகன்சிங் தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்பது போல மௌனமாக இருந்திருக்கிறார்.

டெல்லியில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள உரிமை பறிப்புக்கள் போன்ற நிலையே 30 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் போராளிகள் உருவாக வழிவகுத்தது என்பதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும். தமிழ் தேசிய வாதிகளுக்கு முதல்வரின் உரை டானிக் போல வந்துள்ளது. இதனை – இந்த நிலைமையை – தமிழ் தேசிய வாதிகள் பயன்படுத்திக்கொண்டு அடுத்தக் கட்ட போராட்டங்களை மத்திய அரசுக்கெதிராக முன்னெடுத்தால் ஒரு விடுதலைப்போராட்டம் எதிர்காலத்தில் நிச்சயம் உண்டு. அது பல வரலாற்றுத் திருப்புமுனைகளை ஏற்படுத்துவதாக அமையும்.

எழுகின்ற உண்மை

இது வரையிலும் தமிழ் தேசிய வாதிகள் இப்படிப் பேசியதில்லை. இப்படித்தான் பேச வேண்டும். அது என்ன் ‘இப்படி’ என்று நீங்கள் குழம்புவது புரிகிறது. அதாவது தமிழ் தேசிய வாதிகள் ஈழ விடுதலைக் குறித்த கருத்துகளை மேலோட்டமாக பேசியபடியே போய்க்கொண்டிருக்கிறார்கள். வேறெதுவும் செய்வதில்லை. முதன்மையாக அவர்கள் செய்ய வேண்டியது தமிழ் நாட்டு மக்கள் எப்படி இந்திய அரசால் துரோகமிழைக்கப் பட்டார்கள் என்று பொது மேடையில் பேசி மக்களை அமைப்பக்க வேண்டும் என்று கவனிப்பதில்லை. அதை இன்னும் அய்யா நெடுமாறனோ, அண்ணன் சீமனோ செய்ய வில்லை.

ஆனால் அந்தக் குரல் மெதுவாகத்தான் பொது மேடைக்கு வரும். அப்படி வந்து விட்டது. இப்போது முதன் முறையாக வந்து விட்டது.தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியின் தலைவர் கோயெம்பேட்டில் நடைபெறும் உண்ணாநோன்பு நிகழ்வில் அதனை வெளிப்படுத்தினார்.

த.தே.பொ.க. தலைவர் பெ.மணியரசன் பேசும் போது,“1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நம் தமிழ் மாணவர்கள் 300 பேரை இந்திய அரசு சுட்டுக் கொன்றது. 1987இல் இராஜீவ் காந்தியின் உத்தரவின் பேரில் தமிழீழத்திற்குச் சென்ற இந்திய அமைதிப் படை 6000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை கொன்றொழித்து, நம் தமிழ்ப் பெண்களை சீரழித்தது. அதே இந்தியப் படை தான் நம் தமிழ்நாட்டு மீனவர்கள் 600 பேரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொல்வதைப் பார்த்து இரசிக்கிறது. 2009இல் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க சிங்களவனுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்தது, இந்திய அரசு. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்திய அரசு இரத்தவெறி அடங்காமல் இம்மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. தமிழினத்திற்கு மான உணர்ச்சி இருக்கிறதா என சோதித்துப் பார்க்கிறது இந்திய அரசு” என்றார்.

இந்தத் தகவல்தான் இப்போது தமிழக மக்களைச் சென்று சேரவேண்டியது. ஆம். ஈழ விடுதலைப் போராளிகள் தங்கள் பழைய வரலாறை அடிப்படையாக்கித்தான் விடுதலைப் போரைத் தொடங்கினார்கள். இஒப்போது நாம் அதைச் செய்ய வேண்டும். அகனைச் செய்வோம். இந்திய நமது தாய் நாடல்ல, தமிழகமே நமது நாடு, அதனை பிரித்தெடுக்க…தனியாட்சி அமைக்க இன்றே திரள்வோம்.

தமிழகம் மாற வேண்டிய தருணமிது

முள்ளிவாய்க்காலின் ரத்த சோகத்துக்குச் சொந்தமானவர்கள் தங்கள் தவப்புதல்வர்களின் ஈகையை இன்று ஐ.நா. அறிக்கை வடிவிலும், உலகத்தின் பெருகி வரும் போர்குற்றச்சாட்டிலும் பார்க்கின்றனர்.

இந்த உலகப்போக்கு அடுத்தகட்டத்தை அடைய வேண்டும். அதாவது ‘போர்க்குற்றம்’ என்ற உலகச் சொல்லாடல் ‘இனப்படுகொலை’ என்ற சொல்லாடலாக மாற வேண்டும். இந்தியாவின் நடுவணரசு இலங்கையிடம் மென்மைப் போக்கினை கைவிட்டு ஓரளவேனும் கடுமை அல்லது நடுநிலைப் போக்கை காட்ட வேண்டும். இதுதான் அடுத்த கட்டம் என்பது. மேற்கண்ட இரண்டையும் (‘போர்க்குற்றம்’ என்பது ‘இனப்படுகொலை’ என மாறுவது, இந்தியா கடுமை அல்லது நடுநிலையைக் கையாள்வது) சாதித்தால் அதனைத் தொடர்ந்து மூன்றாவதாக தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை உலக அரங்கில் முன்வைத்து அழுத்தம் கொடுக்கும் காலம் தோன்றி விடும்.

முதல் இரண்டையும் நிறைவு செய்வோமா?

இன்றை சூழல்

ஈழத்தமிழர் பிரச்சினை பலவகைகளிலும் உலகத்தமிழர்கள், இந்தியா, தமிழக அழுத்தம் ஆகிய மூன்றையுமே சுற்றி கிடந்து வருகிறது. தாயகத்தின் சூழல் ராணுவ அடக்குமுறைக்குள் சிக்குண்டு தவிக்கையில், உலகத்தமிழர்கள், தமிழகம், இந்தியம் ஆகியவற்றை பயன்படுத்தியே ஈழம் தொடர்பில் நாம் எதனையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

முன்பை விட, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் சர்வதேசச் சூழலோடு தமிழகச் சூழல் ஒத்திசைந்து செல்கிறது. தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புக்களும் அதன் பின் ஒன்று திரண்டு நிற்கின்றன. இரண்டக நிலையெடுத்த தி.மு.க. கூட வேறு வழியின்றி – தன் பெயர் எங்கே அடிபட்டு விடுமோவென்ற அச்சத்தில் – தீர்மானத்தை ஆதரித்தும், போர்க்குற்றவாளிகளை அனைத்துலக நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டுமென்றும் கூறி வருகிறது.

அதே வேளையில் இது வரை இல்லாத வியப்பாக, அனைத்திந்திய அளவில் பல்வேறு கட்சிகளும் தமிழகத்தின் பின் திரண்டுள்ளன. இன்று தொடங்கும் இந்திய நாடளுமன்ற கூட்டத்தொடரில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அதன் தலைவர் அத்வானி வீட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்குப்பின், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இவ்வாறு கூறியிருக்கிறார். அதுபோல் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என இடது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரது கூறியிருக்கிறார். இடது கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வலியுறுத்தி 30.07.2011 அன்று சிறப்பு மாநாடு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வலது கம்யூனிஸ்ட் கட்சியும் தன் பங்கிற்கு குரல் கொடுத்துள்ளது. அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக சம உரிமை வழங்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த இல்லங்களுக்குச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்க இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசால் அளிக்கப்படும் உதவிகள் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன் வைத்து விவாதிக்க உள்ளோம் என்று டி.ராஜா தெரிவித்தார். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கமும் போர் குற்றம் புரிந்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க கோரியும், கச்சத்தீவு பிரச்சினையால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க ஒரே வழி, கச்சத்தீவை மீண்டும் இந்திய அரசு தன் வசம் மீட்பதுதான் என்று போராடி வரும் தமிழக அரசுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் அமெரிக்காவில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஹிலாரி கிளிண்டன், தமிழக முதல் அமைச்சரை நேரில் சந்தித்த சரித்திர நிகழ்வு நடைபெற்றதற்கும், அதன் தொடர்ச்சியாக, போர் குற்றம் புரிந்த இலங்கை அரசு மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததற்கு அடித்தளம் அமைத்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்நிகழ்வுப்போக்குகள் யாவும் காட்டுவதென்னவெனில் இந்திய அளவில் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படப் போவது உறுதி என்பது தெரிந்து விட்டது, எனவேதான் அனைத்துக் கட்சிகளும் அமைப்புக்களும் தன் குரல் வரலாற்றில் பதியப்படவேண்டுமே என்று களத்தில் குதித்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு கட்சிகளுக்கும் அமைப்புக்களுக்கும் தெரிந்த இவ்வுண்மை இந்திய அரசுக்கு மட்டும் தெரியாதா? தெரியும் என்பது வெள்ளிடை மலை. ஆயின், போர்க்குற்ற வாளிக்கு உடந்தை தான் என்பதாலும், ராஜபக்சே சீனாவின் பக்கம் ஒரேயடியாகச் சாய்ந்து விடாமலிருக்கவும் (அது ஏற்கனவே அப்படித்தான் போய்க்கொண்டிருந்தாலும் இலங்கையைத் தன்பக்கம் இருப்பது போல் காட்டிக்கொள்ளவுமே) இந்தியா தனது இலங்கை ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறது. தமிழக, இந்திய மாறிவரும் நிகழ்வுப்போக்கினை மறைத்து உலகின் கண்களுக்கு வேறு மாதிரியான சித்திரத்தைக் காட்டி விடலாமென்றே இலங்கை மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்சே தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவினர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.

ஆனால் நாடாளுமன்றிலும் தமிழக உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்தித்தது உலகில் மற்ற நாடுகளில் இலங்கை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சந்தித்து வரும் எதிர்ப்பை இங்கும் பதிவு செய்துள்ளது.இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவையோ அல்லது அவரது நாட்டின் தலைவர்களையோ உலகின் எந்த நாடும் வரவேற்பதில்லை. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து அவரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க இங்கிலாந்து மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி ராஜபக்சே எவ்வளவோ முயன்றும் அவரை சந்திக்க இங்கிலாந்து தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே அங்கிருந்து வெளியேற நேரிட்டது. அதேபோல் ராஜபக்சே அமெரிக்கா சென்றால் அவரைக் கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றமும், காவல்துறையும் காத்திருக்கின்றன.

இந்தியா என்னதான் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயன்றாலும், உலகிலும், இந்தியத்திலும் பெருகி வரும் எதிர்ப்புக்கள் அதன் முயற்சியை முறியடித்து வருகின்றன. எல்லாவற்றையும் பெரிய தலைவலியாக இந்திய அரசுக்கு வந்து சேர்ந்திருப்பது தமிழக முதல்வரின் பிடிவாதக் குணம். போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும், பொருளாதாரத்தடை விதிக்க வேண்டுமென்றும், நாடாளுமன்றில் தன் கட்சி உறுப்பினர்கள் இப்பிரச்சினையை எழுப்பவிருப்பதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இவ்விடையத்தில் ஹிலாரி கிளிண்டன் தனக்கு நல்ல ஆதரவை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.

இனி வருவது

உலகச் சூழலோடு தமிழகம் ஒத்திசைந்து கொந்தளிப்பது, அதற்கு அனைத்திந்திய கட்சிகளின் ஆதரவு கிடைத்திருப்பது இந்திய அரசை ஒரு முச்சந்தியில் நிறுத்தி வைத்திருக்கிறது. அதே வேளையில் தமிழகத் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் அதே முச்சந்தியில் நிறுத்தியுள்ளது என்று சொல்லலாம். இந்த முச்சந்தியிலிருந்து நாம் எந்தப்பக்கம் நகரப்போகிறோம்? கீழ்கண்ட வழி தென்படுகிறது.

முதல் வழியில் தமிழகம் இன்னமும் தனித் தனி அமைப்புக்களாக குரல் கொடுப்பதை நிறுத்தி விட்டு, ஒரு பொது அமைப்பைக் காண வேண்டும். ஈழத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஏதோவோர் நோக்கில் பொது அமைப்பாக இருந்தமையினாலேயே அணமைய தேர்தலில் தமிழர்கள் தங்கள் விருப்பத்தை பதிவு செய்ய முடிந்தது. அதுபோல் ஒரு பொது அமைப்பு – தமிழ் தேசிய கூட்டைமைப்பாக இயங்கினாலே அனைத்துத் தமிழர்களையும் ஒன்றிணைத்து வெகுமக்கள் குரலாக பரிணமிக்க முடியும். அதுவே காங்கிரசு போன்ற ஆற்றல்களை தனிமைப்படுத்த உதவும். அதுவே உலகத் தமிழர்களை எம்மவர்களுடன் இணைந்து செயல்பட வைக்கும்.

அதாவது எடுத்துக்காட்டிற்குச் சொன்னால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது தமிழக ஒன்றித்த அமைப்பொன்று இருந்தால் அதன் கண்டனம் வெளிநாடுகளிலெங்கும் உலகத்தமிழர்களால் உயர்த்திப்பிடிக்கப்படும். அதுபோல் தமிழகத்தின் ஈழ ஆதரவுக் கோரிக்கையை, போராட்டத்தை உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் எதிரொலிக்கும் போது அதன் வீச்சு பலமடங்காகும். இது இலங்கை அரசின் மீதான குற்றச்சாட்டை மேலும் உலகிற்கு வெட்ட வெளிச்சமாக்கி திட்டமான நடவடிக்கையை உலகிடம் கோர வழிகோலும். அதுவே இந்தியாவின் கையாலாகத் தன்மையை உலகம் முழுதும் தெட்டத்தெளிவாக்கி இந்திய அரசின் போக்கின் மீது அழுத்தம் செலுத்தும். இந்தியாவின் போக்கு மாறாவிட்டாலும், அதன் போக்கு உலகில் மேலும் மேலும் அம்பலமாகும் – ஒன்றித்த தமிழக கூட்டமைப்பால், அது உலகத்தமிழர் அமைப்புக்களோடு இணைந்து குரல் கொடுப்பதால்.

தமிழக மக்களின் ஒன்றுபட்ட குரலைத் திரட்டுவதன் மூலம் இலங்கை தொடர்பான இந்தியக் கொள்கைகளை மாற்றுவதற்கான அழுத்தத்தையும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இலங்கை ஆதரவு நிலைபாட்டை இந்தியா எடுக்காது செய்வதிலும் இந்த அழுத்தத்தை நாம் பாவிக்க முடியும்.

செய்வோமா? இல்லையேல் அத்தகையதொரு கூட்டமைப்பை அமைத்திட இன்னமும் நூறு ஆண்டுகள் ஆகுமென்றால், அதற்கு முன் ஈழத் தமிழினம் முற்றும் அழிந்து விட்டிருக்கும். ஈழம் என்ற சொல் மறைந்து விட்டிருக்கும். ஈழம் வாழ்வதும், ஈழத் தமிழர்கள் விடுதலை பெறுவதும் எதிர்காலத் தமிழக விடுதலைக்கு முதலீடாகும் என்பதைப் புரிந்து கொள்வோமா?

தனித்தனியான உணர்ச்சிவசமான உரைவீச்சுக்களுக்குப் பதில், தெருமுனைக் கோஷங்களுக்குப் பதில் அரசு நிறுவனங்களையும், சர்வதேச நிறுவனங்களையும் நோக்கிய நிலைப்பாடுகளும், அதற்கான அரசியல் தந்திரோபாயங்களும் ஒருங்கிணைவும்தான் இன்று தேவை. அதனை நோக்கிப் புகலிடத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் திரள்வது மட்டுமே விடுதலை அரசியலை அடுத்த கட்டம் நோக்கி எடுத்துச்செல்லும்.

எனவே, இன்றே தமிழகத்தில் கூட்டமைப்பைக் கண்டிட அனைத்து தேசிய அமைப்புக்களும் முன்வாரீர். தலமையை கூடிப் பேசி இறுதி செய்வீர். போர்க்குற்றவாளிகளைக் கூண்டிலேற்றுவது, ஈழத்தின் விடுதலைக்கு வாக்கெடுப்பு ஆகிய முழக்கங்களில் முன்னது மட்டுமே இன்று வெப்பமடைந்துள்ளது. பின்னதை – ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு – என்பதையும் சேர்த்தே ஒலிப்போம், எதிரொலிப்போம் – தமிழம் முழுவதும் ஒரு குரலாய்…உலகத் தமிழர்களுடன் இணைந்த குரலாய்……தமிழகம் மாற வேண்டிய தருணமிது!

மெரீனாவில் சங்கமித்த மே மாத சத்தியம்


மே மாதத்தின் மெழுகு வர்த்திகள்
மெரீனாவில் சங்கமித்தனர்.
தாய்த் தமிழர் கைகளில் தங்க விளக்குகளாய்
விழுந்தாலும் மண்ணைக் கவ்வாத வீர வெளிச்சங்களாய்

உலகத்தின் உயிர்நாடி ஒரு மாதம் துடிக்க மறந்த போது
ஒரு லட்சம் மண்ணின் மைந்தர்கள்
வன்னிநிலத்தில் வதைக்காளாயினர்
கலகம் அத்துடன் முடிந்ததென்று கயவர்கள் எண்ணியிருக்க
காலம் தன் தீர்ப்பினை புலத்திலிருந்தும்
தாய்த் தமிழகத்திலிருந்தும் எழுதியது

விளைவு
உலகத்தமிழர்களின் போலித்தலைவர்கள் வீழ்த்தப்பட்டு
உண்மைத் தலைமை வெளிப்பட்டது
கலக ஆறுகள் சங்கமித்தன கடல் போல
மெரீனாவில் புதிய மே மாத புத்தகம் படிக்கப்பட்டது

உலகெங்கும் தமிழர்களின் ஆற்றலுக்கு ஈடில்லை யாம் என
இலங்கையரசு வாக்குமூலம் வழங்க
அடுத்தக் கட்ட புலிப்பாய்ச்சலுக்கு அரங்கத்தைத் தயார் செய்ய
அய்யா நெடுமாறன், தலைவர் வை.கோ. மற்றும் மே 17 இயக்கத்தினர்

ஏந்தினர் மெழுகுவர்த்திகளை பேரலைகளே சாட்சியாக
ஏனிந்த உலகம் இன்னும் எங்களுக்காக வரத் தயங்குகிறது
என்ற கேள்வியுடன்.
கேள்விக்குப் பதில் வரத் தொடங்கி விட்டது.
ருவாண்டாவில் இனப்படுகொலைப் புரிந்த ஆட்ச்சியாளருக்கு தூக்கு
அடுத்த குறி இலங்கை என்பது அரசியல் தெரிவாளர்களின் நோக்கு.

அத்துடன் முடியாது நம் முழக்கம்
ஈழம் அடையும் வரை தூக்கமில்லை
ஈழத்திற்க்காக எதையும் ஏற்று
இனிக் களம் காண கலக்கமில்லை

என்றே உயர்ந்தது பார் ஒரு லட்ச்சம் மெழுகு வர்த்திகள்
மெரினாவில் – மே மாதத்தின் மேன்மைகளாய்
விடுதலை நெருப்புக்கு ஊற்றப்பட்ட எண்ணையாய்
மெரினாவின் மெழுகு வர்த்திகள் மாறட்டும்

போர்க்குற்றம், காட்டாட்சி, மானுட வேட்டையின் நிழலில்…

உலகின் உச்சக்கட்டத் தேடுதல் வேட்டைக்கு ஆளான ஒஸாமா பின் லேடனின் முடிவை ஏற்படுத்திய விதம் அமெரிக்கா தன்னை போலிஸ்காரனாகவும், நீதிஅளிப்பவராகவும், தண்டனை வழங்குபவராகவும் காட்டிக்கொள்வதை உணர்த்துகிறது. இஸ்லாமியத் தலைவர்களுக்கு உள்ள கவலை யாதெனில் ஒஸாமா கடலில் புதைக்கப்பட்டதானது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதாக உள்ளது. வெள்ளை மாளிகைத் தகவல்களின்படி கடைசிக்கட்டத்தில் ஒஸாமா தன் மீதான தாக்குதலை எதிர்த்ததாகவும், அந்த வீட்டின் சுற்றுச்சுவர்களுக்குள் நிறைய பேர் ஆயுதங்களுடன் இருந்ததாகவும் செய்தி தரப்படுகிறது. ஜே கார்னே என்ற வெள்ளை மாளிகை அதிகாரி இதைக் கூறியபோது ஒஸாமா எந்த வகையிலான எதிர்ப்பை வெளிப்படுத்தினார் என்று சொல்ல வில்லை. அரபு உலகத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருக்கின்ற இந்த காலக் கட்டத்தில் இப்படியொரு நிகழ்ச்சி நடந்திருப்பது பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஜெர்மன் சான்ஸலர் ஹெல்முட் ஜெர்மன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய மனித உரிமை சட்டநிபுணர் ஜியோஃபெரி ராபர்ட்ஸன் இது அப்பட்டமாக சர்வதேசச் சட்டங்களை மீறுவதாகும் என்றார். நீதி என்பது குற்றவாளியை நீதிமன்றத்திற்கு இட்டுச்சென்று ஆதாரங்களின் அடிப்படையில் தண்டனை பெற்றுத் தருவதாகும். இந்த நடைமுறையை அமெரிக்காவின் நடவடிக்கை பாதித்து நீதி என்பதையே மறுதலிக்கிறது என்றார் அவர். ஆனால் அந்த மனிதன் உடனடியாக கொல்லப்பட்டிருக்கிறார். வெள்ளை மாளிகையிலிருந்து செய்திகள் இதுபற்றி தரப்படவில்லை என்பதைப் பார்க்கும்போது ஒரு ரத்தச்சகதிப் படுகொலை நடந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது என்று ஜியோஃபெரி ராபர்ட்ஸன் ஆஸ்திரேலியாவின் லண்டன் பிரிவு தொலைக்கட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டாம் உலகப்போருக்குப்பின் நாஜிகள் நூரம்பெர்க் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டதைப் போலவும், யூகோஸ்லேவிய அதிர்பர் மிலோசெவிக் 2001-ம் ஆண்டும் போர்க்குற்ற நீதிமன்றில் தண்டிக்கப்பட்டதைப் போலவும் ஒஸாமாவை நீதியின் முன் நிறுத்தியிருக்க வேண்டும்.

டச்சு சர்வதேசச் சட்ட நிபுணர் ஜெர்ட்-ஜான் நூப்ஸ் லேடனைக் கைதுசெய்து அமெரிக்கவிற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அமெரிக்கர்கள் தங்கள் எதிரிகளை சண்டைக்களத்தில் தீர்ப்போம் என்று கூறலாம். ஆனால் மரபு ரீதியாக இந்த வாதம் எடுபடாது என்றார். புது தில்லியைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு சயத் அகமத் புகாரி அமெரிக்கப்படைகள் லேடனை எளிதில் பிடித்திருக்கலாம் என்றார். அமெரிக்காவானது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இராக், லிபியா ஆகிய எல்லா இடங்களிலும் காட்டுத்தனத்தை பின்பற்றி வருகிறது. மக்கள் பலகாலம் இதைப்பார்த்துக் கொண்டு சும்மா இருந்தனர். ஆனால் இப்போது எல்லா எல்லைகளையும் தாண்டியாகி விட்டது என்று மேலும் தெரிவித்தார்.

இந்தோனேஷியாவில் அபுபக்கர் பஷீரால் நிறுவப்பட்ட இஸ்லாமியக் குழுவான ஜெம்மா அன்ஷாருத் தாகிதின் பேச்சாளர் சன் காத் இந்நடவடிக்கையின் மூலம் பின் லேடன் வீரச்சாவடைந்துள்ளார் என்றார். இஸ்லாத்தில் ஷரியத்துக்காக சண்டையிட்டு இறந்த எவரும் மாவீரராகக் கருதப்படுவார். ஒஸாமா ஷரியத்துக்காக போரிட்டு உயிரிழந்துள்ளதால் அவரும் மாவீரரே என்றார்.

ஒஸாமா கடலில் புதைக்கப்பட்டதானது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதே பலர் கவலையாக உள்ளது. அமெரிக்க வானூர்தியில் கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் இஸ்லாமிய விதிமுறைகளின்படி கடலில் புதைக்கபட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சொல்கிறார்கள். பின் லேடன் எப்படி கொல்லப்பட்டார் என்பதை விட அவர் புதைக்கப்பட்ட விதமே அதிக விவாததுக்குரியது என்று பாகிஸ்தானின் மனித உரிமை ஆணையத்தின் அதிகாரி ஐ.ஏ. ரஹ்மான் கூறினார். லேடனிடம் ஆயுதம் இல்லாமலிருந்தது என்பது ஒரு சின்ன விடயம். அவர் புதைக்கபட்டவிதமே இஸ்லாமிய உலகில் இன்னும் சிறிது காலத்திற்கு விவாதிக்கப்படும்.

சவூதி ராயல் நீதிமன்றத்தின் அறிவுரையாளரான சவுதி ஷேக் அப்துல் மொக்ஷென் அல் ஒபைக்கான் இது இஸ்லாமிய மரபு அல்ல, இஸ்லாமிய மரபுப்படி ஒரு மனிதன் நிலத்தில் இறந்தால் அவனை மற்ற எல்லோரையும் போல நிலத்தில் புதைக்க வேண்டுமென்றார். உலகின் மிகப்பெரிய (இந்தியாவிற்கு அடுத்தபடியாக) இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவின் உலேமாக்கள் மன்றத்தின் உறுப்பினர் அமிதான் -ம் இதையேக் கூறினார். ஒருவரை கடலில் புதைக்க வேண்டுமென்றால் அசாதாரணச் சூழ்நிலை நிலவவேண்டும். பின் லேடன் விடயத்தில் அப்படியொரு அசாதாரண நிலை இருந்ததா என்று ராய்ட்டருக்கு அளித்த செவ்வியில் கேட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில், அமெரிக்கா இதனை விளக்கா விட்டால், இது ஒரு விலங்கை புதைப்பதைப் போன்றதாகும். மனிதனுக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றாகிவிடும். இவ்வாறு செய்வது ஒஸாமாவின் ஆதரவாளர்களிடையே மேலும் கொதிப்பை அதிகரிக்கும் என்றார்.

அமெரிக்கா தான் யாரை பயங்கரவாதி என்று கூறிவந்ததோ அத்தகைய ஒரு மனிதரை தானே இறுதியில் மாவீரராக்கி விட்டிருக்கிறது என்று இந்த நிகழ்ச்சியின் மூலம் உணர்ந்தாலும், அமெரிக்காவின் காட்டாட்சி மனித குலத்திற்கே ஒரு அச்சுறுத்தலாகும். மேலும் போர்க்குற்றச்சாட்டின் கீழ் தற்போதுதான் சிறீலங்கா அரசு சிக்கித்தவிக்கும் இவ்வேளையில் அமெரிக்கா இவ்வாறு செய்திருப்பது நாளை சிறீலங்காவின் மீது நடக்க இருக்கும் விசாரணையில் சாதகமான வாதங்களை ஏற்படுத்தக் கூடும். உலகம் மீண்டும் ஒரு இரு-துருவ நிலைப்பாட்டிற்கு வந்து இது போன்ற காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாத வரை நீதி மற்றும் மனித உரிமை என்பது என்பது பழைய பிரெஞ்சுப்புரட்சியின் பிதாமகர்கள் எழுதிய நூல்களிலேயே இருக்கும்.

உலகப் பெண்கள் தினச் செய்தி – தேசியத் தாயாரின் நாளாக மாற்றுவோம்.

உலகப் பெண்கள் நாள் வந்து கதவைத் தட்டும் வேளையில் அனைத்து தமிழர்களும் சிந்திக்க வேண்டிய விடயம் யாதெனில், இந்த ஆண்டே தமிழர்களின் தேசியத் தாயார் தனது பெரும் ஈகை வாழ்வினைத் துறந்து இம்மண்ணை விட்டகன்றார் என்பதே. ஒரு பெண்ணாக வாழ்ந்து அவர் பெண்களுக்கு செய்த – தம் மக்களின் விடுதலைக்கு செய்த பெரும் கொடை ஒரு தன்னிகரற்ற தலைவனை தன் வயிற்றில் சுமந்து இச்சமுதாயத்திற்கு வழங்கியது. எல்லா பெண்களாலும் இத்தகைய ஒரு ஈகையை செய்திட முடியாது எனினும் தேசியத் தாயார் போன்ற பெண்களின் வாழ்க்கையை படிப்பதன் மூலமும், அவர்தம் உறுதியைக் கடைப் பிடிப்பதன் மூலமும் எல்லா பெண்களும், எல்லா ஆண்களும் அவரது நிலைத்து நிற்கும் புகழ் வாழ்வில் பங்கு பற்றும் அருகதை உடையவராவோம்.

தேசியத் தாயாரின் ஈகையும் உறுதியும் வரலாறே மலைக்கக் கூடியவை. தலைவர்களை ஆளாக்கியது எல்லா தாய்மார்களும் செய்யக்கூடியதே. ஆனால் நம் தலைவன் தன் விடுதலை வழியில் சென்ற போதெல்லாம் அதற்கு தன் மானசீக ஆதரவை நல்கி, தலைவனின் தலைமையில் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த போது, திருச்சியில் தன் கணவரோடு வாழ்ந்து வந்த தேசியத் தாயார் சொன்ன சொற்கள் இன்னமும் எண்ணிப்பார்க்கத் தக்கவை: “அவன் நீதிக்கான வழியில்தான் செல்வான்….அவன் செல்லும் வழி சரியானதாகத்தான் இருக்கும்…”. என்ன ஒரு நம்பிக்கை – மகனிம் மீது மட்டுமல்ல, தன் வளர்ப்பு முறையின் மீது, தன் லட்சியத்தின் மீது, தன் மக்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற பேரவாவின் மீது! தாயாரின் இந்த வளர்ப்பு முறை, லட்சியம், விடுதலைப் பேரவாதானே தலைவனை ஆளாக்கிய வார்ப்புக்கள்.

‘நான் இனி வீட்டுக்கு பயன்படமாட்டேன்” என்று நீண்ட பயணம் செய்து தன்னை மறைவிடத்தில் சந்தித்த தந்தையிடம் கூறிய தலைவனால் ஈழ நிலப்பரப்பு விடுதலை பெற்று அங்கு புலிகளின் ஆட்சி அமையும் என்று அந்த தாயாருக்கு மனதில் பட்டிருக்குமோ!

இரு பெண்கள் ஒரு குழந்தைக்காக, அது தத்தம்து என்று கூறி மன்னன் முன் வழக்கு கொணர்கின்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் குழந்தை தனதே என்று வழக்குரைக்கின்றனர். மன்னனுக்கு எப்படி தீர்ப்பு கூறுவதென்றே தெரியவில்லை. குழந்தை யாருடையது? எப்படி சொல்வது? வாளை எடுத்தான் மன்னன். விச முற்பட்டான், இரண்டு பெண்களும் பாதி பாதி வெட்டுப்பட்ட குழந்தையை எடுத்துக்கொள்ளட்டும் என்று கூறி. அங்கே குழந்தையின் உண்மைத்தாய் பாய்ந்து தடுத்திட்டாள் அரசின் வாளினை. “மன்னா…, குழந்தையை அவளுக்கே கொடுத்து விடுங்கள், எனக்கு வேண்டாம்” என்றாள். மற்றொருத்தி கல் போல நின்று கொண்டிருந்தாள். ‘குழந்தையை அவளுக்கே கொடுங்கள்’ என்றவளே உண்மையான தாய் என்பது அரசனுக்கு புரிந்தது. உண்மைத் தாயிடமே குழந்தையை ஒப்படைத்தான் மன்னன்.

அப்படி ஒரு காலத்தேர்வு தமிழர்களின் தேசியத் தலைவருக்கும் அவரது தாயாருக்கும், காலம் சிரித்தது. தலைவனின் உயிர் இனி எதிரிக்கு என்றது தாயாரிடம். தன் மகன் இறப்பதில்லை என நினைத்தார் தாயார். எதிரிக்கா,உனக்கா…? காலத்தின் இந்தக் கொடூரக்கேள்விக்கு பதிலாக தாயர் தன் மகனை களத்திற்கே ஒப்படைத்தார். களத்தில் தானும் தன் கணவருடன் போய்ச் சேர்ந்தார். இறுதி வரை, தாயோடு தாயாக மக்களே தாய்க்கோழியாக தலைவனையும் உடனிருந்த தளபதிகளையும் பாதுகாத்து, தம் உயிர் சிந்தி அவர்களின் உயிரைப் பாதுகாத்து ஒரு வரலாற்றை காப்பாற்றிய வியப்பை காலம் பார்த்தது, உலகம் பார்த்தது.

போர்க்களம் தோற்றது. போராட்டம் வென்றது.

தாய்க்கோழிகளைப்போல தலைமையை வாழவைத்த தாயாரும் ஈழ மக்களும் போர்க்கள தோல்விக்கு பின் அடைந்த துன்பங்கள் வரலாறு காணாதவை. ஆடுமாடுகளைப் போல நடத்தப்பட்ட ஈழத்தாய்மார் கூட்டம் தாயாரின் உள்ளக்கதிர்வீச்சால் தன்னை இன்னமும் நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது. எதிரிப்படை தாயாரையும் தந்தையாரையும் கைது செய்து சித்திர வதை செய்த போதும் ஒரு சிறிதும் விட்டுக்கொடுக்க வில்லையே. எதிரியின் சிறைக்கொட்டிலில் தன்னுயிரை ஈந்த தந்தையாரை இழந்த பின்னும் தேசியத் தாயார் ஒரு சிறிதும் தளர்ந்து விடவில்லையே. ஒரு மாபெரும் வரலாற்றுத் தலைவனின் தாயார் தனது இறுதிக்காலத்தில் இலங்கை அரசினாலும், தமிழக அரசின் துரோகிகளாலும், இந்திய அரசாலும் மட்ட ரகமாக அவமதிக்கப்பட்ட போதும், ஒரு சிறிதும் பணிந்து விட வில்லையே. இந்த மாறாத ஆதரவு அல்லவா இனியொரு போராட்டம் இருக்கிறது என்பதை உணர்த்தி நிற்கிறது.

தாயாரிடமிருந்து ஈழத்தாய்மார் பெற்ற வியத்தகு ஆற்றல் அன்றே திலீபன் இறப்பின் போது ஆர்பரித்த ‘அன்னையர் முன்னணி’யைச் சேர்ந்த தாய்மாரிகளிடம் வெளிப்பட்டது. இன்று இன்னமும் ஈழத்தாய்மார்கள் காத்துக் கிடக்கின்றனர்….தங்கள் வீட்டு மகன், தலைவன் என்று வருவான் என.

இந்த எண்ணமும், இன்னமும் பல வடிவங்களில் தொடரும் போராட்டமும் அல்லவா தேசியத்தாயரின் வரலாற்றுப் பங்களிப்பாக விளங்கி லட்சக்கணக்கான ஈழத்தாய்மார்களை உறுதி குலையாமல் இருக்கச் செய்கிறது! பல லட்சக்கணக்கான ஈழ மக்களை, உலகத் தமிழர்களை ஒரு வரலாற்றுச் சந்திப்பில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது!! இந்த வகையிலேயே வேறு எந்தப் பெண்ணும் சாதிக்க முடியாததை தேசியத் தாயார் சாதித்துள்ளார். இந்த உலகப்பெண்கள் தினமான இன்று தேசியத் தாயாரின் காலப்பங்களிப்பை பரப்பும் நாளாக மாற்றுவதே உலகத்தமிழர்கள் தாயாரின், மற்றும் வீரத்தந்தையின் போராட்ட வாழ்வுக்கு செய்யும் மிகச் சிறந்த கைமாறாகும்.

உலகப் பெண்கள் தினத்தை தேசியத் தாயாரின் வழியில் ஈழ மகளிரின் விடுதலை தினமாக மாற்றுவோம். உலகத் தமிழர்களே ஒன்று படுங்கள்!

———————————————————-
ஈழதேசம்.கொம்முக்காக நிலவரசு கண்ணன்

புத்தாண்டு கேள்வி

தமிழகத்தில் மீண்டும் ஒரு மீனவர் இலங்கைப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உண்மையில் சிங்களம் தமிழகத்தின் மீதே போர் தொடுத்து வருவதைத்தான் இதுநாளந்தமும் நடத்தப்பட்ட இக்கொலைகள் காட்டுகின்றன. ஆனால் அந்தோ பரிதாபம்…! தமிழகத்தில் இன்று வரை இதை முன்னிறுத்தி அரசியல் களத்தை திறந்திட ஒரு தலைமையில்லையே. எனவே கருணாநிதி போன்ற ஓனாய்கள் மத்திய அரசுக்கு தந்தி அனுப்பி தந்தி அனுப்பியே தேர்தல் காலத்தில் மக்களின் அனுதாபத்தைப் பெற்று விடலாம் என்று நினைத்து செயல்பட்டு வருகின்றனர். இது வரை எத்தனை முறைதான் இலங்கை தூதுவர்களை அழைத்து இந்திய அரசு (!) எச்சரித்திருக்கும். ஒவ்வொரு முறையும் இதே வழக்கமாகப் போனது மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் சிறீலங்கா அரசு இது எங்கள் படையல்ல, எங்கள் கப்பல் அங்கே இருக்க வில்லை என்று மறுப்பதும் வழக்கமாகியுள்ளது. அதன்பின் எதுவுமே இல்லாமல், எல்லாம் முடிந்து விடும். ஏறத்தாழ ஐனூறு தமிழகத்தினர் இதுகாறும் சிறீலங்கா படையினரால் கொல்லப்பட்டும் ஏழு கோடி தமிழர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லையே இதுவரையிலும். ஆனால் இந்நிலை இப்படியே நீடிக்குமா?

கருணா நிதி தமிழக அரசு சார்பில் இலங்கை படையால் சுட்டுக்கொல்லப்பட்டவருக்கு ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கினார். இது உண்மையில் இலங்கை அரசுக்காக தமிழகம் கட்டும் கப்பமல்லவா? ராஜ ராஜ சோழனை அடியொற்றி ஆட்சி நடத்துவதாக காட்டிக்கொள்ளும் கருணா நிதி, ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திரன் இலங்கையின் மீது படையெடுத்ததை ஒருமுறையாவது நினைவு கூர்வாரா? அதையெல்லாம் நினைத்தால் அவரது பேரக்குழந்தைகளின் பெயரில் ஒவ்வொருவருக்கும் நூறூ கோடி ரூபாய் எப்படி எழுதி வைக்க முடியும்?
ஆனால் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக காங்கிரசுடன் கூட்டு வைத்திருக்கும் கருணாநிதி காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவும் தயங்க மாட்டார். இதே காங்கிரசு கட்சியின் ஆட்சியில்தான் வீதியில் இறங்கி போராடிய ஐநூறு தமிழர்கள் சுட்டுக்கொல்லபட்டார்கள், ஈழத்தமிழர்கள் நரகத்தைக் கண்டார்கள் என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டியதில்லை. தனது பேரக்குழந்தைகளுக்கும் அமைச்சர் பதவி என்பதே அவரது வெறியாக உள்ளது.

இந்த வரலாற்றுத் துரோகியை ஒட்டிப் பிழைப்பு நடத்தும் திருமாவளவன் போன்ற ஒட்டுண்ணிகள் என்ன சொல்கின்றனர்? தமிழகத்தில் வெங்காயம் , தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அண்மையில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக ஏறியிருப்பதைப் பற்றி திருமாவளவன் கூறியது: “தமிழக மக்களுக்கு விலை ஏறி ஏறி பழக்கப்பட்டு விட்டது. எனவே அண்மைக்கால விலையேற்றம் தேர்தலில் எந்த பாத்திப்பையும் ஏற்படுத்தாது”.
இத்தகையதொரு துரோகத்தனமான அறிக்கையை வெளியிட்டுள்ள திருமாவளவன் மறுபக்கம் தான் ஏதோ பெரிய போராளி போல் காட்டிக்கொள்வதற்காக கட்சத்தீவை மீட்பதே பிரச்சினைகளுக்கு தீர்வு என்று கூறியிருக்கிறான். இது இந்த ஆட்சியில் நடக்காது என்பது அவனுக்கே தெரியும். தான் உலகத்தமிழர்கள் மத்தியில் ஏதோ பெரிய கதாநாயகன் போல காட்டிக்கொள்வதற்காக இவ்வாறு கூறியிருக்கிறான். அதே நோக்கத்துடன் தமிழர் இறையாண்மை மாநாடு என்ற பெயரில் ஒன்றை நடத்தினான். அதனால் எந்த சலனமும் இல்லை என்பது வேறு விடயம்.

மற்றொரு பக்கம் மருத்துவர் ராமதாஸ் கருணாநிதியுடன் கூட்டு வைக்க காய் நகர்த்துகிறார் போல் தெரிகிறது. அவரது கபட நாடகங்கள் 2009 மே 18-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டன. அதன்பின் ஈழம் பற்றி ‘கப்சிப்’ என்றாகி விட்டார். மீண்டும் அவரது மகனுக்கோ மகளுக்கோ அமைச்சர் பதவி கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய கணக்கிட்டுக்கொண்டிருப்பார் அவர்.

கருணாநிதி இறப்பதற்குள் எப்படியேனும் அவரை பயன்படுத்தியே தமிழகத்தில் அவருக்குப் பின் ஆட்சியை பிடிக்க அத்திவாரம் இட வேண்டும், அது முடியா விட்டால் ஆட்சியில் பங்கு பற்றவாவது வேண்டும் என்று கணக்கு போட்டு காங்கிரஸ் செயல் பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் மட்டும் இந்த முறை தேர்தலில் அடிபட்டு விட்டால் அதன்பின் அது தமிழர்களின் நிரந்தர பகைக் கட்சி என்று தெளிவாகி விடும். அடுத்த முறை தேர்தல் வருவது வரை இன்றைய நிலைமை இப்படியே நீடிக்காது என்பது திண்ணம். இன்று வாய் மூடி மௌனியாக கிடக்கும் தமிழகத்தின் ஏழு கோடி மக்களும் இப்படியேவா கிடக்கப் போகிறார்கள்? விரைந்து மாற்றம் வரும் என்பதற்கு அறிகுறிதானே அண்ணன் சீமான் அவர்களின் தலைமையைக் குறிப்பிட வேண்டும்! இது வரை விடுதலைப் பாதையில் ஒருங்கிணைந்த தலைமை இல்லாத காரணத்தால் அல்லவா நம் உறவுகள் ஈழத்தில் அழிவதைப் பார்த்துகொண்டிருக்க வேண்டிய கெட்ட வாய்ப்புக்கு ஆளாகியிருந்தோம்! இனியும் இவ்வாறு எத்தனை காலம் நித்திரையில் துயில்வது?

இந்திய அரசியல் நிலைமை மக்களுக்கு இன்று திருப்திகரமாக இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். நாடு முழுவதும் ஊழல் கொடி கட்டி பறக்கிறது. ஸ்பெக்ட்ரம் முதல், கிரிக்கெட் போட்டி முதல் ராணுவ கேன்ட்டில் உணவு கொள்முதல் வரை ஊழல் குற்றச் சாட்டுக்கள் நாள்தோறும் எழுகிறது. இது முன்பு எப்போதும் இல்லாதது. காங்கிரஸ் அரசு நட்டை எந்த வழியில் கொண்டு செல்கிறது என்பதை இது காட்டுகிறது.

அதே வேளையில் உலகிலும் (தெற்காசிய, தென்கிழக்கசிய அரங்கிலும்) மாற்றங்கள் ஏற்பட்டவண்ணம் உள்ளது. சீனா மீண்டும் வடகொரியா விடயத்தில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றிருக்கிறது. இது அமெரிக்காவிற்கு எரிச்சலூட்டும் அம்சமாகும். கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவிற்கு எரிச்சலூட்டுவதன் மூலம் தன்னுடைய ‘செக்’ தெற்கில் வலுவாக இருப்பதை பார்த்துக்கொள்கிறது சீனா. அதே வேளை இந்திய அரசின் ஊதுகுழல்களோ பாக்கிஸ்தானோடு பகை ஒருநாள் முடிவுக்கு வரும் என்று ஊதுகின்றன. இது எதனால்? இப்போது பாக்கிஸ்தான் மீது இவர்களுக்கு என்ன பாசம்? ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போக மாட்டான். ஊழல், விலைவாசி உள்ளிட்ட காரணங்களால் உள்நாட்டில் அதிருப்தி பெருகி வரும் வேளையில் அண்டை நாடுகளுடன் உரசல் ஏதும் ஏற்பட்டால் அதனை எதிர்கட்சிகள் சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளும். அடுத்த தேர்தல் அம்பேல் ஆகி விடும். அதே இடத்தில், சீனா இந்தியா ஐக்கிய நாடுகள் அவையில் நிரந்தர உறுப்பினராக ஆதரவளித்துள்ளமை ஒரு சிறந்த நகைச் சுவை. அழிவைத் துவங்கும் முன் எதிரி உதிர்க்கும் புன்னகையே அது.

இத்தகைய சூழல் இந்தியாவிற்கு விரைந்து நெருக்கடியை கொடுக்கக் கூடியதாக அண்மிக்குமானால் உலகத் தமிழர்களும் தமிழகத்தினரும் தங்கள் நல் வாய்ப்பை அதனூடே பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். நேற்றைய ஆற்றல்கள் எங்கு சென்றன என்றே தெரிய வில்லை. உலகத் தமிழர்களால் மாற்றாக வைக்கப்பட்ட நாடு கடந்த் ஈழ அரசு, முதலியவை எங்கு போயின, அதனால் யார் என்ன சாதித்தார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. அதே திருமாவளவனோ தமிழர்களுக்கு ஒரு தமிழ்த் தாயகம் வேண்டும் என்று கூரியிருகிறார். தமிழ்த் தாயகங்கள் ஏற்கனவே இருந்து வருகின்றன. இனி புதிதாக உருவக்க ஒன்றுமில்லை. இருப்பவற்றை எப்படி மீட்பது என்பதல்லவா கேள்வி.

புத்தாண்டு பிறந்தது 2011

இந்தப் புத்தாண்டில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அனைத்து வளங்களும் வந்து சேர இதயம் கனிந்த
நல் வாழ்த்துக்கள்.

அன்புடன்

நிலவரசு கண்ணன்